விரைந்து முன்னேறும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி
லூசியா அபுசாலியின் கூடையிலிருந்து மீன்களை அள்ளியபடி எதிரே அலமாரியில் எதையோ தேடினாள் –
மரவை எங்கே நாகு என்று இளைய மடையரைக் கேட்க அவன் சிவப்பு வண்ணம் பூசிய அகன்ற கும்பா போன்ற மரவையை எடுத்துவந்து கொடுத்தான். மரவையில் ஊற்றியிருந்த கல் உப்பு கரைத்த தண்ணீரில் கையில் இருந்த மீன்களை முழுக்கக் கழுவினாள்.
ஷராவதி ஆற்று மீன் ரொம்ப வழுக்குதே என்றபடி லூசியா தரையில் விழுந்த ஒரு மீனை மறுபடி கழுவ மறுபடியும் அது நழுவி விழுந்தது. அபுசாலி ராவுத்தர் சிரித்தபடி சொன்னார் –
இதைத்தான் தமிழ்லே சொல்வாங்க, கழுவற மீன்லே நழுவற மீன்னு.
தமிழ் பேசும் பிரதேசத்தை விட்டு வந்து ஐம்பது வருடமாகி, ஹொன்னாவரில் கொங்கணியில் பேசி மும்முரமான மீன் வியாபாரத்தில் இருந்தாலும், தாய்மொழியை அதன் சகல அழகுகளோடும் நினைவில் வைத்த ஒருவர் அவர் என்பதில் லூசியாவுக்கு அவரிடம் மரியாதை உண்டு.
ஒவ்வொரு மீனாக எடுத்து வாலைப் பிடித்துக் கொண்டு செதிலை முழுக்கத் தேய்த்து உதிர்த்தாள். தலை, வால், துடுப்புகளை நீக்கி குடலைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டினாள்.
இந்தாங்க, உங்க மீன். கமகமன்னு மிளகுப் பொடி போட்டு மீன்குழம்பு உண்டாக்குங்க என்று இரண்டாம் சமையல்காரர் சுவேம்புவிடம் கொடுத்தாள் மீன் துண்டுகள் நிறைந்த பாத்திரத்தை.
சுவேம்பு அண்ணாவரே, நேற்றைக்கு கடையிலே காணோம் எங்கே போயி?
மீன் தலைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் இட்டு சுவேம்புவிடம் கொடுக்கப் போனபோது அவர் அடுப்பு பக்கம் நகர்ந்திருந்தார்.
நானா, ஊரே ஓடிக்கிட்டு இருக்கே, நானும் அங்கே தான் போனது. சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன். ரொம்ப நேரமாயிடுச்சு என்றார் தலைகளை வெண்ணெய் விட்டுப் பொறிக்க கூடுதல் வெப்பம் உண்டாக்க ஒரு விறகைத் அடுப்பில் திணித்தபடி.
நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக இருக்கறதாலே நாலு பவுன் வாங்கினேன். மத்தவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரெண்டு பவுன் தான் கொடுத்தார். அதுவும் பவன் ஒண்ணு பத்து சவரன் பணத்துக்கு. எனக்கு பவுனுக்கு எட்டு சவரன்லே கொடுத்தார். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வாங்கணும் என்றபடி பால் குவளையை வைத்து விட்டு எழுந்தார் அபுசாலி ராவுத்தர்.