மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி
மிளகு தின்னும் போட்டியோடு ஒரு வசந்த விழா
சீனாவும் தைவானும் அடுத்த வாரம், தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப் போகும் வசந்த விழா என்ற சீனப் பண்டிகைக்கு மிளகு தேவை.
பெருமழையால் ஏற்பட்ட யாங்ட்ஸீ நதியின் வெள்ளப் பெருக்கு காரணம் நதிக்கரை கோடவுண்களில் சேமித்து வைத்திருந்த இந்திய இறக்குமதி மிளகில் பாதிக்கு மேல் கெட்டுப் போய்விட்டதாக சீன அரசாங்க யந்திரம் அறிவிக்கத் தாமதமாகிப் போனது.
தைவான் சமாளித்துக் கொள்ளும். சிறு நாடுதான். எனினும் செஞ்சீனத்துக்கு தைவான் மிளகு வேகமாக போய்க் கொண்டிருப்பதால் அங்கும் மிளகு இன்னும் இன்னும் உடனடியாகத் தேவை.
மிளகு தின்னும் போட்டி என்று நாடு முழுக்க, சின்னக் கிராமங்களில் இருந்து தலைநகர் பீஜிங்க் வரை வசந்தவிழாவில் எல்லாத் தெரு, பேட்டை, ஊர் அளவில் போட்டிகள் நடக்கும். வயிறு எரிய, வாய் உரைப்பில் எச்சில் வடித்திருக்க, கண்ணில் நீர் திரண்டு கொட்ட, மிளகுப் போட்டியாளர்கள் அதைக் கடித்துச் சவைத்துக் குறுமிளகாகவும், அரைத்தெடுத்த மிளகு விழுதாகவும் உண்டு எரிச்சல் தணிய லிட்டர் லிட்டராக வெறும் பாலைக் குடிப்பார்கள். மிளகு உண்டது, பால் குடித்தது இரண்டுக்கும் சேர்த்து பரிசு நிர்ணயிக்கப்படும்.
அதோடு புத்தர் கோவில்களில் கபாடங்கள் மேலும், பிரகாரத்திலும், வரும் பாதையிலும், மரக்கிண்ணங்களில் மிளகும் உப்பும் நிறைத்துக் காணிக்கையாக விடுப்பதும் நடக்கும்.
எல்லாம் மருது அலுவலகத்தில் உதவி நிர்வாகியாக இருக்கும் சாங் என்ற சீனருக்குத் தொலைபேசி அறிந்து கொண்டது.
நன்றி சாங். வசந்தவிழா வாழ்த்துகள்.
நன்றி மருது.
எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள் வசந்த விழாவை சாங்?
நானா, ஒரு பூவேலைப்பாடு அமைந்த பழைய காலக் கிண்ணத்தை எடுப்பேன். நல்ல காரமும் வாசனையும் கொண்ட கறுப்பு மிளகு ஒரு பிடி மிக்சியில் அரைத்து விழுதாக்குவேன்.
அதை விழுங்குவீர்களா? Extraordinary!
நான் மிளகு விழுது சாப்பிடப் போகிறேன் என்று எப்போது சொன்னேன்?
அப்போது அந்த மிளகு விழுதை என்ன பண்ண உத்தேசம் சாங்?
மிளகு விழுதை அலங்காரமான கிண்ணத்தில் இட்டு, சகல மரியாதையோடும் எடுத்துப் போய் என் மாமியார் உட்காரும் இடத்தில் பூசி விடப் போகிறேன்.
மருது சிரிக்கத் தொடங்கும் முன் சாங் டெலிபோனை வைத்துவிட்டார்.
நாளை சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு. ஆப்ஷன், பார்வேர்ட் வர்த்தகம் இல்லாமல் உடனடி மிளகு – பணம் கைமாற்றத்துக்கான ஸ்பாட் காண்ட்ராக்ட்கள் முளைத்து மிளகு விலையை எங்கோ கொண்டுபோகப் போகின்றன. அதுவும் இந்த ராத்திரிக்குள். ஆஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலும் மார்க்கெட் அதிகாலை கடந்து திறக்கப்பட, மும்முரமான வர்த்தகம் தொடங்கி அடுத்தடுத்து மற்ற நாடுகளையும் பாதிக்கும், இந்தியாவில் இருந்தும், இந்தோனேஷியாவில் இருந்தும் பீய்ஜிங்-குக்கும், தைப்பே-க்கும் மிளகு உடனடியாக அனுப்பப்படும்.. சிலருக்குப் பின்னால் சந்தனத்தையும் மற்ற சிலருக்கு மிளகு விழுதையும் அப்பிவிட மிளகு வர்த்தகம் காத்திருக்கின்றது.
படம் சீன வசந்த விழா
நன்றி china.org.cn