குட்டி, நானே மொளகு விழுது எடுத்து தட்டுலே போட்டுக்கணுமா? அதுக்கு முன்னாடி அது நல்லா அரைச்சிருக்கான்னு பார்த்து சொல்லு கொஞ்சம். சொல்லியபடி லூசியாவின் தலையை மிளகு விழுதுக் கிண்ணத்துக்குள் அமிழ்த்தினான் அவன்.
ஓவென்று குரல் எடுத்து அலறினாள் லூசியா. ஐயோ கண்ணு எரியுதே.. ஒண்ணும் பார்க்க முடியலியே. குருடாகிட்டேன். இருட்டிட்டு வருது.. நெஞ்செல்லாம் எரியுதே.. கண்ணை கழுவிக்கணுமே தண்ணீ ஆல்வாரிஸ் சின்ஹோர் ஐயோ எரியுதே
அவள் பக்கத்தில் அல்வாரிஸ் நடந்து மெல்ல அவளை அருகில் ஒரு நாற்காலியில் அமர வைத்தார். யாரோ ஒரு குவளையில் தண்ணீரோடு வந்தார்கள். அதை லூசியாவின் கண்ணில் துடைக்கப் போவதற்கு முன் அல்வாரிஸ் அவரைத் தடுத்து நிறுத்தினார். மிளகு கண்ணுலே பட்டா தண்ணியை விட்டுக் கழுவக் கூடாது. எரிச்சல் கூடத்தான் கூடும். குறையாது
ராணுவத் தடியன் ஒன்றுமே நடக்காதது மாதிரி தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோழிக்கறி ஒரு தட்டு கொண்டு வர ஏன் நேரமானது என்று சத்தம் போட்டான் இங்கிதம் இல்லாமல். பரிமாறும் பெண்கள் பம்பரமாகச் சுழன்று அவனுக்கும் மற்றவர்களுக்கும் பரிமாற, லூசியா படும் துன்பம் உறைக்காமல் அந்தக் கூட்டம் பசியாறிக் கொண்டிருந்தது.
லூசியா இருகண்ணையும் பொத்தியபடி தரையில் உருண்டாள். அவளை மெதுவாக சமையல்கட்டுக்கு அழைத்துப் போனார்கள் பரிமாற வந்த பெண்கள். நாகு பால் இருக்கா பாரு. அல்வாரீஸ் கேட்டார். இருக்கு சின்ஹோர். ரெண்டு படி இருக்கு. பாயசம் காய்ச்ச எடுத்து வச்சது. சர்க்கரை கம்மியா இருக்குன்னு…
நாகுவைக் கை காட்டி அமர்த்தினார் அல்வாரிஸ். ஐயோ எரியுதே நான் பொட்டையாகிட்டேனே அல்வாரிஸ் சின்ஹோர். வேலையிலே வச்சுப்பீங்களா லூசியா கண் எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் உட்கார்ந்தாள். சரியாயிடும்மா. கொஞ்சம் பொறுத்துக்க.. நாகு பால் இருக்கு இல்லே, இருக்கா? பிதாவுக்கு நன்றி. பாலை ஒரு குவளையிலே ஊற்று. கொஞ்சம் போதும். பஞ்சு எடுங்க அடுத்து . மரப்பெட்டியிலே மருந்தோடு மருந்தாக கொஞ்சம் பொதியா வச்சிருக்கு. கிறிஸ்துமஸ் நேரத்துலே தீபத்துக்கு திரி செஞ்சு போட.. எடுத்தியா? நாகு ஓடிப் போய் மரப்பெட்டியில் இருந்து பஞ்சுப் பொதி எடுத்துவந்தான். அதில் இருந்து கொஞ்சம் பிய்த்து ஒரு சிறு பந்தாக்கினார்
ஆல்வரீஸ். சின்ஹோர் கோவா போயிடறேன் விட்டுடுங்க. ஐயோ கண் போச்சே. எரியுதே. லூசியா இன்னும் பலமாக அழுதாள். அவள் கண் இரண்டும் வீங்கி இருந்தன.
தாய் தந்தை போல லூசியாவைத் தோளில் சார்த்திக் கொண்டு அல்வாரிஸ் பாலில் நனைத்த பஞ்சுப் பொதியை லூசியா கண்ணின் மேல் வைத்து மெல்லத் துடைத்தார். ஐந்து நிமிட்ம் இரு கண்களும் பால் நனைந்து கழுவப்பட, சென்ஹோர், நன்றி எரிச்சல் ரொம்ப குறைஞ்சுடுச்சு, நன்றி என்று சிரித்தபடி கண்ணைத் திறந்தாள் லூசியா.
கண்ணு தெரியுது கண்ணு தெரியுது. அவளை அப்படியே பிடித்து இன்னும் மிச்சமிருந்த பாலை எல்லாம் பஞ்சுப் பந்தில் நனைத்து அவள் கண்களைத் தொடர்ந்து கழுவினார் ஆல்வாரிஸ்.
முதல் பந்தி விருந்து முடிந்து சாப்பிட்டவர்கள் கைகழுவித் தாம்பூலம் வாங்கித் தரித்து ”சாப்பாடு பிரமாதம்” என்று சொல்லி ஒவ்வொருவராக வெளியே போனார்கள். கிராதக அதிகாரி லூசியா பக்கம் ஒரு வினாடி நின்றான். அப்புறம் நடந்தான். ஒன்றும் சொல்லவில்லை அவன்.