மிளகு நாவலில் இருந்து
”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது எண்ணங்கள் உருவாக்கிய இலக்கியமும், ஓவியமும், சிற்பமும், கடவுளும் ஆக இருக்கலாம். உண்மையை அடைய நான்கில் எந்த வாயிலும் கடந்து சதுர்முக பசதிக்குள் போகலாம்”.
நிர்மல முனிவரின் ஆன்மீகச் சொற்பொழிவுக்கு ஜெரஸோப்பாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஜெரஸோப்பாவில் சென்னபைரதேவி ஒரு சமண சதுர்முக பசதியைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மிகப் பெரியதுமில்லை. ஆகச் சிறியதும் இல்லை. நான்கு பக்கமும் உள்ளே திறக்கும் வாசல் கதவுகள் அந்தக் கோவிலின் பிரார்த்தனைக் கூட மண்டபத்துக்கு யாரையும் வரவேற்கும்.
கோவில் என்பதால் சிற்பமும், ஓவியமும், கட்டிடக்கலையின் உன்னதம் தொட்ட மண்டபங்களும், உயர்ந்த கோபுரங்களும், திருக்குளங்களும் இல்லை.
தீர்த்தங்கரர்களான அறநாத், மல்லிநாத், முனீஸ்வரநாத் ஆகியோரின் திரு உருவச் சிலைகளும், வேலைப்பாடு அமைந்த விதானமும், கல்பாளம் மேவிய தரையுமாக மலர்ந்து நிற்பது சதுர்முக பசதி. திரிலோக ஜீன சில்பாலயா என்று பெயர் சூட்டப்படும் பசதிக்கு. மூன்று உலகத்துக்கும் நெற்றித் திலகம் போன்ற, சமண சிற்பங்களின் ஆலயம் என்று அந்தப் பெயர் பொருள் கொள்கிறது.
படம் ஜெரஸூப்பா சதுர்முக பசதி – சமணக் கோவில்