மிளகு நாவலில் இருந்து சிறு பகுதி
காவேரியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதி மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும். அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள் கொண்டுதரும் நீர்ச் சுவையும், நதிவாசனையும் துறந்து உப்புச் சுவை மீதுர கடல்வாடை கொண்டு, ஷராவதி மறைந்து போவாள்.
நதி கடலோடு கலக்கும் கழிமுகத்துக்கு முன்னால் மடைமாற்றி வேகத்தைக் கட்டுப்படுத்தி, நீராடவும், படிகளில் அமர்ந்து கால்தொட ஆறு நனைத்துப் போவதுமாக நேரம் செலவிட, நீராடும் துறைகள் கரையில் மும்முரமாக இயங்கும் நிலாநாள் காலை.
இருபது வருடமாக காசிரை இந்த நதி நீராடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவளோடு பாடிக் கொண்டும், சிறுபறை கொட்டிக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் வருகிற கன்யகைகளில் சிலர் கல்யாணமாகிக் காணாமல் போகிறார்கள். புதிதாக சின்னப்பெண்கள் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். அவளை வாடி போடி என்று உரிமையோடு அழைத்துக் கூட வந்த பெண்கள், வயதுக்கு முன் வந்து சேரும் இளம் முதுமையோடு, அவர்களின் பனிரெண்டு வயதுப் பெண்ணை நதிநீராட காசிரையோடு அனுப்பிவைக்கிறார்கள். அடியே காசிரை விளிகள் அத்தை காசிரையாகி, அதுவும் போய் காசிரை அம்மாளாகத் தேய இன்னும் நிறைய வருடங்கள் மீதி இல்லை என்பதை காசிரை அறிவாள்.
கூட வந்தவர்கள் தொலைந்து போன அந்த சோகத்தை நினைத்தால் எதற்கு நதிநீராட்டு நாளுக்கு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக இல்லை, காசிரை தனக்காகப் போகிறாள். இனியும் அவளுக்கு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அவள் அதற்காக நிலாத் தேவனை வேண்டுவதும் இல்லை.
இமானுவெல் பெத்ரோ என்னும் போர்த்துகீசிய அரசியல் அதிகாரப் பெரும் ஆளுமை கொண்ட நாற்பது வயதானவரோடு முப்பத்தைந்து வயதான காசிரையின் இரவுகள் இன்பமாகக் கடந்து போகின்றன என்று உலகமே குரல் தாழ்த்திப் பேசி, நம்புகிற தகவல் உண்மையானதில்லை என்பதை காசிரை அறிவாள். பெத்ரோ துரை அறிவார். தெய்வம் அறியுமா தெரியாது.
அவரோடு சம்பந்தப்படுத்தி காசிரையைப் பேசுவது ஒரு விதத்தில் அவளுக்குப் பாதுகாப்புதான். வேறு யாரும் சின்னத்தனம் பண்ண முயற்சி செய்வதற்கு முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக யோசிப்பார்கள்.
pic Jog Falls