மிளகு நாவலில் இருந்து –
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி ஷராவதியை மடை மாற்றி கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.
கட்டத்தின் படிகளில் ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற நிலைமை துணிச்சலை ஏற்படுத்த, மேல்துணி துறந்த பெண்டிர் ஒருத்திக்கு ஒருத்தி முதுகு தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கைகள் விளையாட, சிரிப்பும் கலகலப்பும் ஒவ்வொரு வினாடியும் அதிகரித்து அடங்கி மீண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தன. அக்கா முதுகு தேய்ச்சு விடவா என்று காசிரையிடம் உரிமையோடு ஏழெட்டு சிறுமியர் அவள் அமர்ந்த கல்படிக்கு அடுத்த மேற்படியில் இருந்து முதுகில் தொட்டு மெல்ல அடித்துச் சிரித்தார்கள். இன்னும் கீழ்ப் படியில் உட்கார்ந்திருந்த தமிழ்ப் பெண்கள் நான்கு பேர் ரம்மியமாகப் பாட ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பாட்டின் தாளமும் இசையும் மனம் கவர ஸ்நானக் கட்டமே கூடச் சேர்ந்து பாடியது. கைகள் கொட்டி, எண்ணெய் பூசிய தொடைகள் மின்ன பாதங்கள் தாளமிட்டன –
கும்மியடி பொன்னூர் பூமி முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மி அடி.
நம்மை சூழும் நல்லன எல்லாம்
உண்மை ஈதென்று கும்மியடி.
காசிரை எண்ணெய்க் காப்பு கொள்ள நிறைய நேரம் பிடித்தது. சிறுமிகளின் தலையில் எண்ணெய் வைத்து வாழ்த்த நிறையப்பேர் காசிரையைக் கோரினார்கள்.
கொஞ்சம் பெரிய பெண்கள் அவள் கையால் எண்ணெய் வாங்கி நெற்றியிலும் பின் கழுத்திலும் உச்சந்தலையிலும் விரலால் தொட்டுக்கொண்டு ஷராவதி தாயை வணங்கி விரைவில் மணநாள் காண அருளும்படி கண்மூடி பிரார்த்தித்து, நதியில் நீராடி வருவார்கள்.
இவர்களுக்கும் பிறகு, எப்படி மேகம் போல் கருத்த கூந்தலைப் பராமரிப்பது, உதடுகள் வெடிக்காமல் மிருதுவாக காட்சியளிக்க என்ன செய்யணும், இன்னும், பலருக்கும் தேவையான, மார்பகங்கள் திண்ணென்று எப்போதும் திகழ என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் குறிப்புகளை காசிரையிடம் கேட்டுத் தெளிவு பெற ஒரு கன்னியர் கூட்டம் நிற்கும்.
காசிரையின் முதுகையும், உருண்ட தோள்களையும் தடவி மெய்மறந்து பாராட்டவும் சில பெண்கள் காத்திருப்பார்கள். அந்த வழுவழுத்த உடல் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்விக்கு அவள் சொல்கிற ஒரே பதில் – பயத்தம்பருப்பு மாவைத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்துக் குளி.
ஹொன்னாவர் பெண்கள் வந்தாலே பசுநெய் ஊற்றிப் பிடித்த மாவுருண்டை நடந்துவருவது போல் வாடை தீர்க்கமாக அடிக்க பயத்தம்பருப்பு கவசம் முக்கியக் காரணமானது. கையும் காலும் வழுவழுத்துப் போனதாக காசிரைக்கு நன்றி சொன்னவர்கள் அநேகம்.