வீடு அமைதியில் கிடந்தது. காஸண்ட்ரா கதவுகளைச் சாத்தித் தாழிட்டு பின்னறையிலிருந்து எடுத்த பெரிய பீங்கான் ஜாடியோடு சமையலறைக்கு நடந்தாள்.
ஜாடிக்குள், இரவு முழுவதும் வெள்ளை ஒயினில் ஊறிய பன்றி மாமிசத் துண்டுகள் தனி வாடையைக் கிளப்பிக்கொண்டிருந்தன. ஓலைக் கடகத்தில் அடுமனையில் இருந்து வந்திருந்த ரொட்டியை எடுத்து சீரான சதுரத் துண்டுகளாக சீய்த்து சமையலறை மேடை மேல் பித்தளைத் தட்டில் இட்டாள்.
ரொட்டியும் பெத்ரோவின் மாளிகையில் தான் முன்பெல்லாம் செய்து வந்தார்கள். ரொட்டி செய்யலாம் என்று ஆரம்பித்தால் வேறெதெல்லாமோ கவனிக்க வேண்டி இருந்தது. நல்ல, புழுபூச்சி இல்லாத கோதுமை வாங்குவது, கரகரவென்று மாவு ஆக கல் யந்திரத்தில் போட்டுச் சுற்றிச் சுற்றி அரைத்து வைப்பது, வெண்ணெயும் தேங்காயும், எள்ளும், கலந்து புளிக்காடி சேர்த்து அடித்து அடித்து மாவைப் பிசைந்து களிமண் அடுப்பில் சுட்டெடுப்பது என்று பல செயல்முறைகள் கடைப்பிடிப்பது தேவைப்படும்.
ஆகரி தெருவில் யூதன் இலியாஸ் அடுமனை தொடங்கிய பிறகு ரொட்டி மாவு பற்றிய விசனம் இல்லாமல் போனது.
ரொட்டி சுட அடுமனை அடுப்பு ஒன்றை யூதனிடம் சொல்லி வைத்து கொச்சியில் இருந்து வாங்கிவைத்திருந்தார் பெத்ரோ. வீட்டு உபயோகத்துக்காக என்பதால் சிறியதாகத் தோற்றம் தரும் அந்த அடுப்பில் உஷ்ணம் உற்பத்தியாவதுடன், வந்த வெப்பம் வெளியேறாமல் இருக்க இருப்புத் தட்டுகள் அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன.
அரை மணி நேரத்தில் புத்தம்புது ரொட்டி துண்டுகள் பத்திருபது சுட்டெடுக்கவும், இரண்டிரண்டு துண்டுகள் நடுவே ஒயினில் ஊற வைத்த பன்றி இறைச்சித் துண்டுகள் செருகப்பட்டு இன்னொரு முறை வாட்டவுமாக நேரம் போனது.
ஆக, கவுடின்ஹோ பிரபு உண்ண ஆறு துண்டு சாண்ட்விச்சுகள். அப்படித்தான் இங்கிலீஷ் பேசும் பூமியில் சொல்கிறார்களாம். தக்காளி மிளகாய் மிளகு சேர்த்துக் காய்ச்சிய கூழும் எடுத்துக் கொண்டாள் கஸாண்ட்ரா.
கிழக் கோட்டானுக்கு இவ்வளவு அருமையாகச் சமைத்ததைக் கொண்டுபோய்த் தரணுமா என்று எரிச்சல். என்றாலும் புறப்பட்டுவிட்டாள் மரவீதிக்கு. கவுட்டின்ஹோ அங்கே தான் வசிக்கிறார்,