“நேற்று நான் ஒரு கனவு கண்டேன். எல்லா தீர்த்தங்கரர்களும் சிற்பமாக உருவாகும் ஒரு சமணக் கோவில்.பஸதி. வாசலில் கழிவுநீர் ஓடை. அதன் நடுவே கழுத்து வரை மூழ்கியபடி ஒரு சிறுமி துணி பொம்மையை அசுத்த நீரில் நனைத்து சிரிக்கிறாள். தேங்கிய சாக்கடை இது. நான் பஸதிக்குள் போகிறேன். பாதி உருவான தீர்த்தங்கரர்கள் சுவர்ப்பக்கம் பார்த்தபடி திரும்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் – எங்களுக்குப் படைக்க நீ எடுத்து வந்திருக்கும் இனிப்புகளும் பழங்களும் எங்களுக்கு வேண்டாம். அந்தச் சிறுமியை குளிப்பாட்டி அழைத்து வந்து அவளுக்கு அதையெல்லாம் ஊட்டு. தேங்கிய சாக்கடையை உன் கையால் நகர்ந்து ஓட வை. தீர்த்தங்கரர்கள் சொல்லி முடிப்பதற்குள் கனவு கலைந்தது”.
இந்தக் கனாத்திறம் உரைக்க யாராவது உண்டா?
இன்று மாலை சென்னா மாலை நேர பஸதி பிரார்த்தனையில் இதைச் சொல்வாள். பஸதி நிர்மாணம் சற்றே ஓய்வெடுக்க அதற்காக ஒதுக்கிய பணம் ஹொனாவரில் சாக்கடை சீர்திருத்தப் பயன்படுத்தப்படும் என்பதை அவள் தெரிவிக்கப் போவது அப்படித்தான். இன்னும் ஒரு மாதத்தில் பஸதி முழுமையாகுமெனவும் தான்.
கோட்டை நிர்வாக அதிகாரி சரணன் எட்டிப் பார்த்தான்.
சரணா, அடுத்து யார் வந்திருக்கிறார்கள் என்னை சந்திக்க?
அம்மா, மங்களூரில் இருந்து யூதர் நிதிநிறுவனத் தலைவர் மேயர் கஸன் பத்தரை மணிக்கு வர இருக்கிறார். பதினொன்றரை மணிக்கு போர்த்துகல் அரசத் தலைமைப் பிரதிநிதி இமானுவல் பெத்ரோ சென்ஹோர் வர இருக்கிறார். அதற்கு முன் நீங்கள் காலைப் பசியாற உணவு காத்திருக்கிறது.
எடுத்து வரச்சொல் சரணா.
சென்னா எண்ணங்களில் மூழ்கியிருந்தாள். உணவு உண்டு சோதிக்கும் உத்தியோகஸ்தன் அப்படி உண்டு அரசி உண்ணலாம் என்று கைகூப்பித் தெரிவித்தான்.
ரெண்டு இட்டலிகளும் ஒரு இனிப்பு குழக்கட்டையும் வை.
உண்ணத் தொடங்கினாள் சென்னபைரதேவி.
சரணன் பரபரப்பாக மறுபடி உள்ளே வந்து வணங்கினான்.
உண்ணும்போது தொந்தரவு செய்வதை மன்னிக்க வேண்டும். தறிக்காரன் தெரு பஸதியில் தீர்த்தங்கரர்களின் பாதி செதுக்கிய திருவுருவங்கள் சுவரைப் பார்த்துத் திரும்பிக்கொண்டனவாம். தறிக்காரன் தெருவில் ஒரே ஜனநெரிசல்.
சென்னா அவனைக் கூர்ந்து பார்த்தாள். சிரித்தபடி சொன்னாள் –
சிற்பிகளையும் திரும்பி அமர்ந்து வேலையைத் தொடரச் சொல்.
அவள் மனதில், ஆனந்தபைரவி ராகத்தில், குழலும், நாகசுவரமும் இழைந்து சூழ்ந்தன.