மிளகு நாவலில் இருந்து – I, Neminathan


நான், நேமிநாதன்….

ரஞ்சனாவை வெளியே வந்த கூண்டுக் கிளியைப் பார்க்கிறது போல் கழுத்தில் கை வைத்து நோக்கிச் சொன்னேன் – ”முகம் கழுவிக்கொண்டு வாடி. வெளியே போகணும்”.

நான் நடுராத்திரிக்கு வந்து அவளை எழுப்பிவிட்டது கூட அவளை வருத்தமும் கோபமும் அடையச் செய்யவில்லை. டி என்ற தொண்டச்சியை விளிக்கும் இழிவு தான் அவளை ரொம்பவும் பாதித்தது.

”மதுசாலைக்குப் போய் நிரம்ப மது பருகி தாறுமாறாக நடக்க வந்திருக்கிறீர்கள் என்றால், உடனே வெளியேறுங்கள். அம்மா மகாராணியிடம் புகார் அளிப்பேன் உங்கள் நடத்தை குறித்து”.

அவள் தீவிழி விழித்தாள்.

நான் பதவி போதையும், அதைத் தூண்டி முதன்மைப்படுத்தும் திராட்சை மதுவின் போதையையும் உச்சம் தொட்டு ஊசலாடியபடி, ”வாடி தேவடியாளே, உன்னைக் கொண்டு போய் விடணும் , உனக்காக ஒருத்தன் காத்திருக்கான்” என்று குழறிக்குழறிச் சொல்ல அவள்பின்னால் நகர்ந்து, பக்கத்தில் இருந்த குரிச்சியை என்மேல் எறிந்தாள்.

ஏதோ தோன்ற குசினிக்கு ஓடி கையில் மூடியிட்ட செப்புக் குழல் பாத்திரத்தோடு வந்தாள். கை நிறைய மிளகுப் பொடியை அதிலிருந்து அள்ளி என் உடுப்பை வயிற்றுக்குக் கீழே நெகிழ்த்தி, அதை என் பிரத்தியேக இடத்தில் பூசினாள், மிஞ்சிய பொடியை என் கண்ணிலும் பூச வந்து, சே பிசாசே போ என்று தரையில் விசிறினாள்.

எரியுதே என்று நான் கூச்சலிட என்னை வலுக்கட்டாயமாக வாசலுக்குக் கொண்டு போய்த் தள்ளினாள். ஒலியெழக் கதவையும் என் முகத்துக்கு நேராக சாத்திவிட்டாள். நடுராத்திரியில் குருடன் போல் தட்டுத்தடுமாறித் தோட்டத்தில் வீட்டுக் குளத்துக்கு ஊர்ந்தேன். அந்தத் தண்ணீரும் நீண்ட நேரம் பீஜத்தில் நனைத்து எரிச்சலை மிகைப்படுத்தியது. அப்புறம் அது மெல்லத் தணிந்து வர, என் போதையும் விலகியது.

ரஞ்சனா என்று விளித்தபடி இல்லத்தைச் சுற்றி வர, எல்லா கதவுகளும், ஜன்னல்களும் அடைத்து பாதுகாப்பாக இருந்தது வீடு. பிச்சைக்காரனைப் போல், சரியாகச் சொன்னால் அப்பக்கா மகாராணியின் கணவர் வீரு போல் என்னை உணர்ந்தேன் ஒரு கணம். வீரு ராஜ்யம் இல்லாத ராஜா. நானும் தான். ஆனால் வீருவின் மனைவி எல்லா சக்தியும் வாய்ந்த, சென்னா மகாராணி போல் மக்களால் விரும்பப்படும் அரசி அப்பக்கா. ரஞ்சனாவை இனிமேல் தான் பரவலாகத் தெரியப்படுத்த வேண்டும்.

பெத்ரோவுக்கு முதலில் அவளை அறிமுகப்படுத்தி, அவனை நிதிக்குழுமம் கார்டெல் பக்கம், ரோகிணி பக்கம், என் பக்கமாக இழுக்க வேண்டும். எத்தனை நாள் அவனும் பெண்டாட்டி பக்கத்தில் இல்லாமல் வேலைக்காரி கஸாண்ட்ராவின் மடியில் கிடந்து அலுக்க வேண்டும். ராஜவம்ச ரத்தமும் அழகு நிரம்பி வழியும் பட்டுப் போன்ற சதையுமாக ரஞ்சனாவை எடுத்துக் கொள்ளட்டும். போர்த்துகல் அரச பிரதிநிதிக்கு ரஞ்சனா ஒரு அழகான தூண்டில்.

I with my daughter Aishwarya Arun

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன