மருமகப்புள்ள! ஓ வைத்தியரே!
மருத்துவச்சி அம்மாள் வாசல் கதவுப் பக்கம் நின்று கூப்பிட்டது காதில் விழ வைத்தியர் அவசரமாக வீட்டுக்குள் நடந்தார்.
பனிக்குடம் இப்போ தான் உடைஞ்சது. இனி எந்த நேரமும் பிரசவம் நடக்கும். முதல்லே இங்கே ரெண்டு தீபம் கொண்டு வந்து வையுங்க வைத்தியரே. அப்படியே பெரிய பாத்திரத்திலே மஞ்சள் கரைச்ச தண்ணியும் வேணும். அதிலே நாலு கொழுந்து வேப்பிலை போட்டுக் கொண்டாங்க, விரசா வேணும்
வைத்தியர்தான் நோய் கண்டவரையோ உறவுக்காரர்களையோ வென்னீரைக் கொண்டுவா, நல்லெண்ணெய் எடுத்து வா, சூரணத்தை இருப்புச் சட்டியில் இளம் சூட்டில் வாட்டி எடுத்துவா, கட்டுப்போட துவைத்த வெள்ளை வேட்டியைக் கிழித்து எடுத்து வா என்று விரட்டுவார். இது பரவாயில்லை, நோயாளியோட மூத்திரம் கொஞ்சம் எடுத்து வா, அவர் கழிக்கறது கொஞ்சம் எடுத்து வைங்கோ. பார்த்துட்டு தூர போட்டுடலாம் என்று அசாத்தியமாகக் கருதப்பட்ட மருத்துவ கோரிக்கைகளை வைப்பார்.
மருத்துவச்சி திரும்ப காமரா அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். என்னாத்தா வேணும்? பணிவோடு கேட்டார் வைத்தியார். மருமகனே, வெத்திலை, பாக்கு, இடிக்கற உரல் அங்கே தான் வெளியிலே இருக்கு. கொஞ்சம் எடுத்தாங்க.
வைத்தியம் பார்த்து முடித்துப் புறப்படும்போது வைத்தியரின் மருந்துப் பையைச் சுமந்து கொண்டு வாசல் வரை அவரோடு நடப்பது பெரிய மனுஷர்களும், அதிகாரிகளும், தளபதிகளும், பிரதானிகளும், கல்விச்சாலை அதிபர்களும் கூடச் செய்ய விரும்புகிற பெருமைக்குரிய செயல்.
இந்தோ இருக்கு உங்க உரல். இடிச்சுத் தரட்டா என்று வைத்தியர் வினயமாகக் கேட்டார். அதை நான் தான் பண்ணனும் என்று உரலை வாங்கிக்கொண்டு உள்ளறைக்குப் போய்விட்டாள் மருத்துவச்சி. அவள் பின்னால் போவதா வேண்டாமா என்ற குழப்பம் வைத்தியருக்கு.
வரச் சொன்னேனே என்று திரும்பிப் பார்த்து மருத்துவச்சி கைகாட்டினாள். வைத்தியர் மருந்துப் பெட்டியோடு உள்ளே போக, அது எதுக்கு, வெளியே வச்சுட்டு வாங்க மருமகனே என்று அன்பொழுகச் சொன்னாள். அவரும் திரும்பிப் போய் மருந்துப் பெட்டியை வெளியே இறக்கி வைத்துவிட்டு உள்ளே ஓடினார். எதுக்கும் இருக்கட்டும். அதை எடுத்துட்டு வாரும் என்று நேரெதிர் தீர்மானத்தை அடுத்து வெளியிட்டாள் மருத்துவச்சி ராஜம்மா.
வரும் கோபம், அலுப்பு, சோம்பல் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளியே மறுபடி போனார் வைத்தியர். அவர் வரும்போது தரையில் கால் நீட்டி உட்கார்ந்து மருத்துவச்சி சொன்னாள் –
தலை தட்டுப்பட நேரம் வந்தாச்சு மருமகனே. மீங்கு முக்கு. நல்லா முக்கு. உள்மூச்சை அடக்கிப் பிடிச்சு மெல்ல வெளியே விடணும். சொல்லுங்க மருமகனே சொல்லுங்க. நல்லா முக்கணும்
உரலில் மிச்சமிருந்த இடித்த தாம்பூலத்தை வாயில் அடக்கிக்கொண்டு சொன்னாள் மருத்துவச்சி.
மூச்சு அடக்கி பத்து எண்ணு செம்பா. அவள் எப்படி எண்ணுவாள்? வாய்க்குள்ளே எண்ணிக்கோ. இப்போ முக்கு.
வைத்தியர் தரையில் படுத்து அவளோடு சரிக்கு சரியாக முக்கியபடி மருத்துவச்சியைப் பார்க்க, பார்த்து, கக்கூசு போயிடப் போறீங்க மருமகனே என்று சிரித்தாள்.
வந்தாச்சு நான் என்று மிங்கு வயிற்றின் கீழ் அசைவு.