அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அதிகாலை ஐந்து மணிக்குச் சுறுசுறுப்பாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தான்.
ஐந்து மணி காலை எல்லாம் ஒன்றுமே இல்லை இவனுக்கு. உறங்கினால் தானே புதுசாக விழிக்க. விடிகாலை அல்லது நடுராத்திரி கழிந்த மூன்று மணிக்கு மேல்சாந்தியையும், தந்த்ரியையும் எழுப்பி விடுவான் இவன்.
இந்த பூஜாரிமார் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு சம்பிரதாயத்துக்காக நீராடி, கோவில் பரப்பில் அருவி போல் மிதமான சூட்டோடு வெந்நீர் பிரவகிக்கும் நவீனமான குளிமுறியில், என்றால் குளியலறையில், கால்கேட் பற்பசையால் தந்தசுத்தி செய்து மைசூர் சந்தன சோப் தேய்த்து நீராடுவார்கள்.
சில சமயம் நன்றாக மழை பெய்யும்போது அல்லது கோடை காலத்தில் குளம் வற்றி பாசி மிதக்கத் தண்ணீர் கொஞ்சம் போல சிறுக்கும்போது, இன்னும் நுண்ணிய சம்பிரதாயபூர்வம் குளத்து நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வந்து அதைச் சிரசில் ஊற்றிக்கொண்டு அடுத்து இவர்கள் குளிமுறி ஸ்நானம் செய்வது வழக்கம்.
இவனுக்கு திருக்குளத்து நீரைக் குடங்களில் துணி சுற்றி வடிகட்டி வைத்து நாள் முழுவதும் திருமஞ்சனம் செய்விப்பது வழக்கமாகப் போனது. இவனுக்கு கோல்கேட் பற்பசையும், ஷவரில் வெந்நீரும் விலக்கி வைக்கப்பட்டவை.
குளித்து முடித்ததும் காலை மூன்றரை மணிக்கு சூடும் சுவையுமான காப்பி பானம் செய்ய இவனுக்குக் கிட்டாது. காலை ஐந்து மணிக்கு துளசி இலையும், கற்பூரமும், ஏலக்காயும் ஊறிய குளிர்ந்த நீரில் ஸ்நானம் முடித்து பாலும் சோறும் நெய்யும் ஆராதனையாக இவனுக்கு அளிக்கிறார்கள்.
நடுப்பகல் வரை இவனுக்கு அவ்வப்போது சிறு கிண்டியில் பால் தரப்படுகிறது. குடிக்க இல்லை, குளிக்க.
அப்புறம் சற்று நேரம் ஸ்ரீகிருஷ்ணன் அதிகாரம்தான். தினசரி நடுப்பகலுக்கு அம்பலப்புழை பால்பாயசம் இவனுக்கு நைவேத்தியம் ஆகிறது. பொன் நிறத்தில் பாலும் நெய்யும் சர்க்கரையும் தேங்காயும் கலந்து மர அடுப்பில் காய்ச்சப்படும் பாயசம் நாள் தவறாமல் இவனுக்கு உணவு.
——————–
திரை விலகியபோது மஞ்சள் நிறத்தில் எரியும் தீபங்களும், உயர்ந்து ஐந்து முகம் திரி கொளுத்தி நல்ல எண்ணெயும் சுகந்தமான தேங்காய் எண்ணெயும் சந்தனமும் சேர்த்து மணக்க ஸ்ரீகிருஷ்ணன் இங்கே சிரித்தபடி நின்றான்.
சாரதா சங்கரனின் கைகளைச் சேர்த்து மார்புக்கு நேரே நீட்டி வணங்க வைத்து அச்சுதம் கேசவம் சொல்லுங்க என்றாள் மிக மெதுவாக.
சத்தம் அதிகமாக்கி தரையில் அமர்ந்து இருகையும் ஊன்றி சங்கரன் அச்சுதம் கேசவம் சொன்னார்.
சத்தம் அதிகமாக, யாரோ முணுமுணுக்க, திலீப் ராவ்ஜி மிக சுருக்கமாக அவரிடம் சொன்னது – ”போன மாசம் டிசம்பர் 1999, ஆப்கானிஸ்தானுக்கு ஹைஜேக் ஆன ப்ளேன்லே இருந்த ஹோஸ்டேஜ். இப்போதான் பேசறார். கொஞ்சம் பொறுத்துக்கணும். உயிரோட விளிம்புக்கு போயிட்டு திரும்பினவர்”.
அதற்கு அப்புறம் சங்கரன் குரல் உயர்த்த சந்நிதியில் ஒரு கண்ணும் அவர்மேல் ஒன்றுமாக சக பக்தர்கள் வழிபட்டு இருந்தார்கள்.
pic Ambalapuzha Temple Festival
ack alappuzha.nic.in