நான் ரோகிணி.
நான் எல்லா மதப் பண்டிகைகளையும் இனிப்பு அங்காடியில் கொண்டாடுகிறேன். அங்கே வேலை பார்க்கிற யார் என்ன மதம் என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை.
அது அவர்கள் சொந்த விஷயம். தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. தெரியாததால் ஏதும் குறை வரவும் வாய்ப்பில்லை. மதம் இனிப்பு அங்காடியில் வேலை பார்ப்பதில்லை. ஆனால் எல்லாக் கொண்டாட்டத்த்திலும் ஏதாவது ஒரு மதம் மகிழ்ச்சியோடு பங்கு பெறுகிறது. அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் அங்காடியின் படி இறங்கிப் போய்விடுகிறது. அடுத்த கொண்டாட்டத்துக்கு இன்னொரு மதம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது.
இத்தனையும் சொல்லி என்னை நான் நிலையுறுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நான் லிஸ்பனில் போர்த்துகல்காரி அம்மாவுக்கும், இந்தியத் தமிழ் தகப்பனுக்கும் பிறந்தவள் என்பதால் இரண்டு பக்கமும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். அப்பா இறந்து போய் அம்மாவின் கவனிப்பில் வளர்ந்தேன். அவளை கவனிக்க ஏழெட்டு புருஷன்மார் உண்டு என்பதால் வளர்ச்சி எந்த திசையில் போயிருக்கும் என்று ஊகிக்கலாம். என் பதினெட்டு வயதில் என் கணவர், முதல் கணவர், பத்தாவது இணை அந்த லியனார்டோ. மாதாகோவிலில் கல்யாணம் நடத்த பிஷப் ஒத்துக்கொள்ளாததால் சர்ச்சுக்கு வெளியே நாங்கள் மோதிரம் மாற்றிக் கல்யாணம் செய்து கொண்டோம்.
அம்மா வீட்டுக்கு வரவேண்டாம் என்று மென்மையாகத் தெரிவித்து விட்டு தன் ஆசைநாயகனோடு உறவு தொடரப் படுக்கையை சித்தமாக்கிக் கொண்டிருந்தாள். நானும் லியனார்டோவும் கொஞ்சநாள் லிஸ்பன் யாத்ரிகர் விடுதியில் தங்கியிருந்தோம். நல்ல வேளை அவனுக்கு ராணுவத்தில் குதிரைப்படையில் உத்தியோகம் கிடைத்தது. எங்கள் விருப்பப்படி சிறிய அழகான ஒரு இல்லத்துக்குக் குடிபுகுந்தோம்.
முதல் வருடம் முழுவதும் ராணுவத்துக்கு எந்தப் போரும் இல்லாத காலம் என்பதால், வேளாவேளைக்கு சாப்பிட, சாயந்திரம் கவாத்து பழக, ராத்திரி களித்து உறங்காமல் உறங்கி உறவு கொண்டு நாட்கள் பறந்தன. அப்போது தான் ஊமத்தை யுத்தம் இந்துஸ்தானத்தில் அதுவும் கோவா துறைமுகத்தில் தொடங்கியது. ராணுவ வீரனாக லியனார்டோ இந்துஸ்தானம் போயிருந்த நேரம் அது. ஊமத்தை யுத்தம் கேட்டிருக்கிறீர்கள் தானே?
மதுசாலைக் காரர்களும், இந்துஸ்தான அரசாங்கமும் கணிகையரும் ஒன்று சேர்ந்து போர்த்துகல் ராணுவ வீரர்கள் அருந்திய மதுவில் கொடிய ஊமத்தைச் சாற்றைக் கலந்து குடிக்கத்தர, அதை குடித்து புத்தி கெட்டு ராணுவ வீரர்கள் இந்துஸ்தான வீதிகளில் பைத்தியமாகத் திரிய வைத்து போர் தொடங்கும் முன்பே தோற்றுப்போகச் செய்த ஏற்பாடு அது.
எப்படியோ திட்டம் வெளியேவர நூற்றுக்கணக்கான போர்த்துகல் வீரர்கள் தப்பிப் பிழைத்தார்கள். அவர்களில் லியனார்டோவும் ஒருவன். லிஸ்பன் துறைமுகத்தில் திரும்பி வந்த இருபத்தாறு ராணுவ வீரர்களை வரவேற்றுப் பெண்களும் குழந்தைகளும் ஒரு சில ஆண்களும் குழுமி இருந்த சாயங்காலம் அது. நானும் கண்ணில் கண்ணீர் திரைபோட நின்றிருந்தேன். இந்துஸ்தானம் போய்த் திரும்ப அவர்களுக்கு நான்கு மாதம் தான் பிடித்தது. மற்றவர்களை விட பலகீனமாக, கண்கள் அலைபாய்ந்து சூனியத்தில் வெறிக்க, வாயில் எச்சில் தன்னிச்சையாக ஒழுக, ஈர்க்குச்சி மனுஷன் போல தலைமுடி கொட்டிப் போய் தொளதொளத்த, கசங்கி அழுக்கான ராணுவ உடுப்போடு என்னைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தான் லியனார்டோ.
வீட்டுக்கு சாரட் வண்டி பேசிப் போய்ச் சேருவதற்குள் என் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டான் பலகீனம் காரணமோ என்னமோ. ராத்திரி ஏழு மணிக்கு அவனோடு இருந்து அனுபவித்து உண்ண வேண்டிய ராச்சாப்பாடு நடுராத்திரிக்கு குளிர்ந்திருக்க,ரெண்டு பேரும் சாப்பிட்டோம். அப்போது தான் அவன் சொன்னான் – எல்லோருக்கும் விரல் நகக்கண் அளவு கூட ஊமத்தைப் பொடி மதுவில் கலந்து ஹொன்னாவர் தேவடியாள்கள் கொடுக்க, ஊரிலேயே மகாபிரசித்தமான கணிகையான கனகவல்லி விரித்த வலையில் விழுந்தானாம் லியனார்டோ. இவன் படைத்தலைவன் என்று வேறு அவள் கவனத்தை ஈர்க்கச் சொல்லி வைத்திருந்திருக்கிறான். உடுப்பு களைந்து லியனார்டோவை மடியில் சாய்த்து குடி குடி என்று அவனுக்கு அந்தப் பெண்பிள்ளை கொடுத்த ஊமத்தைப் பொடி கலந்த ஒயின் அதிகம். மிக அதிகம்.
அவள் மேல் சதா மல்லிகைப்பூ வாடை லகரி ஏற்றியதாக லியனார்டோ மறக்காமல் குறிப்பிட்டான். மற்றவர்கள் எல்லாம் ஊமத்தைப் பொடி விளைவித்த கிறுக்கு கொஞ்சமானதால் உதிர்ந்து விட, நிரந்தர நோயாளியாக எதற்கும் லாயக்கற்றவனாக வந்திருக்கிறான் என் லியனார்டோ. அப்படியே ஒரு மாதத்தில் அவன் இறந்தும் போனான்.
படம் லிஸ்பன் மாநகரம்
நன்றி lonelyplanet.com