நாதா, எடோ நேமிநாதா.
இந்த அழைப்பு அவனை இன்னும் காமாந்தகாரனாகி என் முழு அடிமையுமாக்கி ரசவாதம் புரிகிறது. எஜமானி என்று என் பாதங்களை முத்தமிட்டு அவன் சிரசில் வைத்துக்கொள்ள நான் உபசாரம் எல்லாம் பெற்றுக்கொண்டபடி உபதேசம் நல்கினேன் இப்படி-
பில்ஜி அரசர் திம்மையராஜு உன்னை விட ஐந்து வயது பெரியவன். என்னைப் போல். அவனை சந்திக்க என்ன கொண்டு போகப் போகிறாய்?
அப்பாவியாக நான் நேமிநாதனின் விரல்களைச் சொடுக்கியபடி கேட்டேன்.
என்ன எடுத்துப் போவார்களாம்? பழம். இனிப்பு. வைரமும் தங்கமுமாக வார்த்தெடுத்த கிருஷ்ண பிரதிமை.
மடையா இதை வைத்துக்கொண்டா ஆட்சி மாற்றம் கொண்டு வரக் கூடிய முக்கியமான அரசியல் சந்திப்பை நடத்தப் போகிறாய் என்று அவன் தலையில் உதைத்தேன். அவன் என் பாதங்களைக் கொண்டு தன் கண் இமைகளை மூடி அவற்றை முத்தமிட்டான்.
இந்த ரீதியில் புத்தி போதனை செய்து கொண்டிருந்தால் இன்னும் இரண்டு நாள் அறுபத்து மூன்று கரணமும் அரங்கேறிக் கழியுமே தவிர உருப்படியாக போதனை ஏதும் நடக்காது.
நேமி நாதருக்குத் தெரியாததையா நான் சொல்லப் போகிறேன். இந்த வார்த்தை சொல்லுதல் முற்றிலும் வேறு வகைப்பட்டது. உங்களுக்குத் தெரியாதா
உங்களுக்குத் தெரியாதா என்று முன்னொட்டு வைத்து அவனுக்குத் தெரியாத ராஜதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டும் முறை. மடியில் போட்டுக்கொண்டு புகட்டலாம். மடியை பிடித்தவன் இறங்காமல் அடியைப் பிடியடா பரத பட்டா என்று கைகள் ஊர்ந்து அப்புறம் போதனை திசை திரிந்து போய்விடும்.
ஆக நான் சொல்ல விரும்பியது அவன் பில்ஜி அரசர் திம்மராஜுவை சந்திக்கப் போகும்போது பழமும், தேங்காயும், இனிப்பும், விக்ரகமும் அன்பளிப்பாக எடுத்துப் போகலாம். கூடவே ரஞ்சனாதேவியும் வர முடியுமானால், வேறே எதுவும் சொல்ல வேண்டாம் எந்த மாதிரிப் பேசவும் நடக்கவும் தேவையில்லை.
வீட்டு விசேஷத்துக்கு கணவன் மனைவியாக அடுத்த ஊர்ப் பிரமுகரை அழைக்க வந்தவர்களாக இரண்டு பேரும் போகணும் என்றேன். அவன் உடனே சொன்னது – அவள் என்னோடு பேசுவது கூட அபூர்வமாகி விட்டது. என்னோடு நீ வாயேன் நீ கூட இருந்தால் முகலாய சக்கரவர்த்தி அக்பர் முகல் எ ஆஸம் அவர்களைக்கூட தைரியமாகச் சந்தித்து சலாம் வைத்து வீட்டில் சத்தியநாராயணா பூஜைக்கு வருக என்று அழைத்துத் திரும்புவேன்.
அக்பர் எதற்கு சத்யநாராயண பூஜைக்கு? நான் சிரிக்கும் போதே பில்ஜி திம்மராஜுவுக்கான திட்டம் மனதில் உருவானது. ரஞ்சனா தேவியும் வேறு வேசி எவளும் போக வேண்டாம். மிளகு ராணியோடு நேமிநாதன் பிணங்கித் தனியாகப் பிரிந்து போனது அரண்மனை ரகசியமும் இல்லை அங்காடி பரஸ்யமும் முழுக்க இல்லை.