யூத நண்பர்களிடம் கொடுத்து வைத்த தங்கத்தில் கொஞ்சம் போல் எடுத்துக்கொண்டு இந்துஸ்தானம் திரும்ப, நானே எதிர்பாராத விஷயமாக ராஜகுமாரர் நேமிநாதனின் நட்பு கிடைத்தது.
லிஸ்பன் பணக்காரர்கள் போல் பணம் ஆனால் அவர்கள் வயசில் பாதி மட்டுமான இளமை. என்னை விடவும் ஐந்து வயது சின்னவன் நேமிநாதன்.
என்றால் என்ன? என்மீது காமம் மீதுர நான் வலையை விரிக்காமல் அவனே எடுத்து விரித்து தலைகுப்புற சந்தோஷமாக வீழ்ந்தான்.
ரோஜா அத்தரில் நீராடி வந்த முதல் ராத்திரி அது. ரோஜா நறுமணம் என்று அவன் கண்மூடி ரசிக்க, நான் கனகவல்லி அல்ல என்றேன். புரியாமலேயே சிரித்தான் அந்தச் சிறுவன். இப்போதும் அவன் சிறுவன் தான். நான் சொன்னால் அவன் செய்வான். நான் சொல்லாதவரை கைகட்டி வாய்பொத்தி ரோஜாவாடை பிடித்து நிற்பான்.
நான் அளிக்கும் ஊமத்தம்பூ ரச மது என் வாயில் ஊறி இதழ்களில் வழங்கப்படுவது. அவன் மனைவி ரஞ்சனாதேவியைப் பிரிந்தான். மிளகுராணி என்ற சென்னபைரதேவியின் மாற்றாந்தாய்ப் பிரியத்தைப் பிரிந்தான்.
எல்லாம் எதற்கு? அவன் அடுத்த அரசராக வேண்டும். அவனுடைய ராணி நானாக வேண்டும். ரஞ்சனா தேவி எனக்கு எச்சில் படிக்கம் ஏந்தி இரவு முழுவதும் நிற்க வேண்டும். மிளகுராணிக்கு கண்ணாடிக் கத்தியோ பனிக்கத்தியோ காத்திருக்கிறது.
நேமிநாதன் தலையாட்டி பொம்மையாக எனக்குக் கிடைத்தது நல்லதாகப் போயிற்று. நான் மிளகுராணியைப் பதவி இறக்கச் செலவழிக்க.
ஒரு சிவராத்திரி இரவில் பாங்க் என்ற அரிசி மது கண்மண் தெரியாமல் பருகி கலந்தபோது என் அருமை மகன் மஞ்சுநாத் உருவானான்.
நேமிநாதனை எத்தனை மிரட்டினாலும் கட்டளையிட்டாலும், எல்லாப்பூவும் என்னில் வாசம் அடிக்க கிறுகிறுக்க வைத்தாலும் நேமிநாதனால் மஞ்சுநாத்தை மகனாகக் கண்டு அன்பு செலுத்த முடியவில்லை.
மஞ்சுநாத்தை விரட்டி அடிக்கலாம் தெருப் பொறுக்க என்று ஒரு நாள் என் பெற்ற வயிறு கலங்க யோசனை சொல்வான். அவன் மேலும் கண்ணாடிக் கத்தி எறியச் சொல்வான் ஈவிரக்கமே இல்லாமல். அவனை இருட்டறையில் சதா பூட்டி வைத்து உணவு இல்லாமல் பட்டினி போட்டு குடிக்கத் தண்ணீரும் தராமல் வைத்திருக்கச் சொல்வான் இகழ்ச்சியோடு.
இந்த சித்திரவதை எல்லாம் அந்தப் பச்சைக் குழந்தை மேல் பிரயோகிக்க எப்படி மனம் வருமோ. என்னை விட கிராதகன் நேமிநாதன். மென்மையான பேச்சும், கௌரவம் மிகுந்த இடைகலந்து பழகுதலும் எல்லாம் பொய். இந்த ராட்சசன் தான் நேமிநாதன். அவனை அரசராக்க நான் பாடுபடுவது என் தலைவிதி.
அவன் அரசனானதும். நான் மகாராணி ஆவேன். அடுத்து அவனையும் ஒழித்துக்கட்டுவேன்.
என் லியனார்டோவுக்கு ஊமத்தைப் பொடி கலந்த மது கொடுத்து கிறுக்கனாக்கிக் கொன்ற மிளகுராணி குடும்பம் சீரழிந்து போகட்டும்.
நேமிநாதனை நேசமான புன்னகையும், சிருங்கார சேஷ்டைகளுமாக என் தோளடி வியர்வையை முகர்ந்து மயங்க வைத்து எல்லாம் முடிப்பேன்.
நேமிநாதன் எனக்கு வழியில் கிடைத்த பொன் தனம் என்றால், பரமன் எனக்கு அதே வழியில் கிடைத்த வைர வைடூர்யப் பொதி. அவன் அவர் என்னை விட பத்து இருபது முப்பது வயது மூத்தவராக இருக்கக் கூடும். இருந்து விட்டுப் போகட்டும்.
ஊமத்தைச் சாறு பருகாமலேயே விமானம் எதிர்காலம், பம்பாய், மதறாஸ், நாக்பூர் என்று ஏதோ சதா பிதற்றிக் கொண்டிருக்கிறார் பரமன். நல்ல சமையல்காரர். மஞ்சுநாதனுக்கு நல்ல விளையாட்டுத் தோழன்.
நேமிநாதன் சொன்னபடி அந்த அரைக்கிறுக்கன் பரமனை நான் கல்யாணம் செய்து கொண்டு, நேமியோடு படுத்து அந்தத் திருமணத்தைக் கொண்டாடியாகி விட்டது. அது மட்டுமில்லை, பரமனின் பிள்ளைதான் மஞ்சுநாத் என்று ஊரெல்லாம் சொல்லியாகி விட்டது. நம்பினவர்கள் நம்பட்டும். நேமிநாதனுக்கு பரம திருப்தி. பரமன் கொடுத்த திருப்தி.
பரமனுக்கு ஆப்பிரிக்க மந்திரவாதி மூலம் காலத்தில் முன்னால் போக ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று வாக்குக் கொடுத்தாகி விட்டது. பரமன் சொன்ன கிறுக்குப்பேச்சு எல்லாம் நம்புவதாக நடித்து, அவன் மனதில் மஞ்சுநாத் மூலம் பச்சாதாபத்தையும் கிளப்பி விட்டு கல்யாணமும் முடிச்சாச்சு.
சீக்கிரம் நேமிநாதனை விட்டுத் தொலைத்து நான் ஏகசக்ரவர்த்தினி ஆகும்போது பரமனையும் கிறுக்கர்களுக்குச் செய்யும் கல்லெறி, சாணிப்பால் குடித்தல் உபசாரங்கள் நடத்தி நக்னனாக்கித் துரத்தி விடவேண்டியதுதான்.