சாப்பிடாமல் வாருங்கள் என்று இரண்டு தூதர்கள் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பியிருந்தார் மதுரை மாமன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். சாயந்திரம் ஏழு மணிக்குச் சந்திக்கலாம் என்று செய்தி அனுப்பியிருந்தார் அவர்.
கோழிக்கோடு ஸாமுரின் போல் நல்ல உயரமும், கெச்சலான கருத்த உருவமும், மேலுடம்பு மறைக்கும் வெள்ளி, பொன் ஆபரணங்களுமாக நாயக்கரைக் கற்பனை செய்திருந்ததது தவறாகப் போனது.
ஆகிருதி குள்ளமும் இல்லை உயரமும் இல்லை. இந்துஸ்தானத்தில் மேட்டுக்குடி இயற்கை உடலம்சமாகக் கருதும் சிவப்புத் தோல் என்ற கறுப்பு இல்லாத, ஐரோப்பியர் போல் வெண்மையுமில்லாத தோல் நிறம்.
தலையில் மணிமகுடமாக இல்லாமல் ஜரிகைத் தலைப்பாகை, வயிற்றுப் பக்கம் தொந்தி போட்டு உப்பி, பட்டுக் குப்பாயத்துக்குக் கீழே பெரிய வயிறு.
பட்டுக் கால்சராய் தொளதொளப்பாகக் கணுக்கால் வரை அணிந்த கனமான கால்கள், முன்னால் வளைந்த சீனத்துக் காலணிகள், கை விரல்களில் ஒன்றிரண்டு கனமான மோதிரங்கள். மதுரை அரசர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் இருந்த கோலம் அது.
இடி இடித்தது போல் கடகடவென்று சிரிப்பு. பக்கத்தில் இருந்து ரகசியம் பேசினாலே பத்து அடி தூரம் கேட்கும் சிநேகிதமும் பிரியமுமான குரல்.
என் கையைக் குலுக்கி ”சின்ஹோர் பெத்ரோ, சேஜா பெம் விண்டோ சேஜா பெம் விண்டோ” என்று வரவேற்ற நிமிடம் முதல் எனக்கு நல்ல சிநேகிதராகி விட்டார் அவர்.
”எதுவும் பேசுவதற்கு முன் எங்கள் எளிய உணவை பெத்ரோ அவர்களோடு பங்கிட்டுக் கொள்ள எங்களை அவர் அன்போடு அனுமதிக்க வேண்டும்” என்றார் நாயக்கர். நாடகீய பாணியில் இரு கை கூப்பி சற்றே வளைந்து நின்று வணங்கினேன்.
“மாமன்னர் விஸ்வநாத நாயக்கரின் பேரனும், குமார கிருஷ்ணப்ப நாயக்கரின் மகனுமான முத்து கிருஷ்ணப்ப நாயக்கனின் நன்றி” என்று அரண்மனை போஜன சாலைக்கு அழைத்துச் சென்றார் நாயக்க மன்னர்.
அவருடைய குடும்பத்தினர் ஒரு பத்து பேர் இருந்தார்கள் அங்கே. இரண்டு நாயக்க மகாராணியரும் நான்கு புதல்வர்கள், இரண்டு புதல்வியர் இருந்தார்கள். ஒரு மரஸ்டூலில் தமிழும் போர்த்துகீஸ் மொழியும் அறிந்த துவிபாஷி அமர்ந்திருந்தார். சாப்பிடும்போதே மொழிபெயர்ப்பு தொடங்கி விட்டது.
ராத்திரியில் சந்திப்பு மிக சுவாரசியமானது என்றேன் இட்டலியை கோழிக் குழம்போடு வாயில் போட்டுக் கொண்டு. விஜயநகர அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எங்கும் மெலிந்த இட்டலிகள் உண்ணக் கிடைக்கும். அவற்றின் நான்கு சேர்ந்து ஒன்றாக மதுரை அரண்மனையில் உண்டேன். நல்ல வெள்ளை நிறம், உப்பு சற்றே தூக்கலாக இட்ட, நல்ல சூடான இட்டலிகள் அவை.
”ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரிஒன்பதுக்கு நகைக்கடையில் நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாம் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கி, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம். வேறு எந்த ஊரிலும் லிஸ்பனில் கூட இந்த வசதி இருக்காது” விவரமாகச் சொன்னார் நாயக்கர்.
வேகமாகப் பேசியபடி உண்ண முடிந்தது அவரால் என்பதைக் கவனித்தேன். இந்துஸ்தானத்தில் பலரும் அப்படித்தான்.
கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் எப்போதும் இயக்கத்தில் இருக்கும் தன்மையை விளக்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. அதை அவரிடம் சொன்னேன்.
”என்ன செய்ய, நாங்க கொஞ்சம் விஷமக்காரங்க. எங்க தாத்தா விஸ்வநாத நாயக்கர் ராயசம் துணையாக, என்றால் எழுத, படிக்க அவைக்கு உதவி செய்ய ஒரு படிப்பாளியை நியமிக்க ரெண்டு முரட்டு நாயக்கர் பய்யன்களை வரச் சொன்னார் –
”ரெண்டரைக்கு ஒருத்தன் வரட்டும். மூணுக்கு இன்னொருத்தன்”.
”பகல் ரெண்டரைக்கு வந்து ராஜாவை சந்திக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார் முதல் ஆள்.
ராஜாவோட விஷயம் – விஷமம் தெரிஞ்ச ரெண்டாவது ஆள் மூணு மணிக்கு தானே வரச் சொன்னார், பகல்லே மூணு மணியாக இருக்காது. ராத்திரி மூணு மணிக்குப் போய்ப் பார்க்கலாம்னு ராத்திரி மூணு மணிக்கு அரண்மனை போனா, விஸ்வநாத நாயக்கர் வந்திருக்கார்! அந்தப் பையன் ராயசம் உப பிரதானியாக எங்க அப்பா காலத்திலே ஓய்வு பெற்றார்”.
நாயக்கர் ரொம்ப சுவாரசியமாகப் பேசியபடி கை அலம்பி அரண்மனை முக மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தோம்.
pic Lisbon, Capital of Portugal