Excerpt from my forthcoming novel MILAGU
நான் அப்பக்கா. இப்படிச் சொன்னால் போதாது. எந்த அப்பக்கா? என் அம்மா பெயரும் அதேதான். போதாக்குறைக்கு என் தங்கையும் அப்பக்கா தான். உலகத்தில் புதிதாகச் சூட்டப் பெயர்களே இல்லாமல் அஸ்தமித்து, எல்லோரும் வேறு வழியின்றி அப்பக்கா என்று நாமகரணம் பெறவேண்டும் என்பது எழுதாவிதியோ என்னமோ.
நான் மூத்த மகள் அப்பக்கா சௌதா. சௌதா என்பது வீட்டுப் பெயர். வடக்கு கர்னாடகத்தில் உள்ளால் மற்றும் புட்டிகே பிரதேசங்களுக்கு துளுவ வம்ச அரசி. அரசியோ அரசனோ நாளும், பொழுதும் ஒரு கணம் விலக்காமல் நிர்வகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்க, நான் இந்த அதிகாலையில் படகுத்துறையில் நின்று கொண்டிருக்கிறேன்.
என் ஆட்சிக்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் திடீரென்று கிளம்பிய பிரச்சனைகள் என்னை வரச்சொல்லி அழைக்கின்றன. ஆட்சி உட்படுதல் எல்லாம் பெரிய சொற்றொடர் பயன்பாடுகள். நூறு இருநூறு கிராமம், கூடவே ஒன்றிரண்டு சிறு நகரங்கள். இவை தான் நான் நிர்வாகம் செய்யும் நிலப்பரப்பு. எனக்கான நகரங்கள் உள்ளாலும் பட்டிகேயும். சென்னபராதேவிக்கு ஜெருஸோப்பாவும் ஹொன்னாவரும். என் கணவன் வீரு என்ற வீரநரசிம்ம்மருக்கு நாற்பத்தைந்து குக்கிராமங்கள் மட்டும்.
விஜயநகரப் பேரரசுக்குக் கப்பம் கட்டி சுல்தானிய, முகலாய ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறது எல்லா குறுநில மன்னர்களும் வழக்கமாகச் செய்வது. விஜயநகரைப் பாதுகாக்கவே வலுவான படை வேண்டியிருக்க, நாங்கள் மாசாமாசம் அளிக்கும் கப்பமும் திறையும் அவர்களுடைய தினப்படி பராமரிப்புக்கு வழி செய்கின்றன என்பதே பொருத்தமானது. அமைப்பு இருநூறு வருடம் பழையவை என்பதால் அவற்றை மாற்ற யாரும் முற்படுவதில்லை. நானும் தான்.
உள்ளால் மகாராணியாக நான் அதிகாலையில் ஆட்சி செய்யப் போகவேண்டும்.
உள்ளால் துறைமுகத்துக்கு வடக்கே பத்துமைல் தூரத்தில் அம்பெலி என்ற ஒரு கிராமத்தில் ஏரி உடைத்துக்கொண்டு விட்டது என்று விடிவதற்கு ஐந்து நாழிகை முன் தாக்கல் வந்து சேர்ந்தது, அது காலை நாலு மணி. சேதம் எதுவும் இல்லை உடைப்பு அடைபட்டிருக்கிறது என்றாலும் ஏரிக்குள் நீர் வரத்து மெல்ல உயர்ந்துதான் கொண்டிருக்கிறதாம். எங்கிருந்து நீர் வருகிறது என்று தெரியவில்லையாம். நிலத்தடி நீராக இருக்கும் என்று தோன்றுகிறதாம்.
அங்கிருந்து இன்னும் தென்மேற்கே துர்கி என்று இன்னொரு பெரிய கிராமம். அங்கேயும் பெரிய ஏரி. அது உடையவில்லை. ஆனால் ஒரு வேண்டாத விருந்தினர் வந்திருக்கிறாராம் ஏரிக்கு. என்றால், முதலை ஒன்று எங்கிருந்தோ வந்து ஏரிக் களிமண் சதுப்புப் பிரதேசத்தில் மறைந்து திரிகிறதாம். இன்னும் முதலை வாயில் யாரும் போகவில்லை என்றாலும் அதற்கான காலம் வரலாமாம்.
இந்த இரண்டு ஏரிகளுக்கும் கிழக்கே இருக்கும் இருபது சின்னக் கிராமங்களின் தொகுதியில் நடுநாயகமாக கட்டோலி கிராமத்தில் பரந்து விரிந்த மற்றொரு நீர்நிலை. ஏரிக்குள் இருந்து கணபதி தும்பிக்கை பின்னமான மர விக்கிரகம் ஆக நீர்ப்பரப்புக்கு மேலே வந்து இருக்கிறாராம். முன்னூறு வருஷம் முந்திய கோவில் விக்கிரகம் என்று சொல்கிறார்கள். கட்டோலி கிராமத்தில் தினம் ஆயிரம் பேராவது தினம் வந்து தரிசித்துப் போகிறார்களாம். சுற்றுப்புற கிராமங்களில் இந்த நிகழ்வு சிரத்தையாகக் கவனிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லைதான். கட்டோலி கிராமத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட, ஒவ்வொரு வீட்டிலும் தினம் யாராவது உறவுக்காரர்கள் விருந்தாட வந்து கிரமமான விவசாய, தறிநெய்தல், பசு பராமரிப்பு, எருமை வளர்ப்பு, ஆடு கோழி பராமரிப்பு எல்லாம் தறிகெட்டுப் போகிறதாம். கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் பரவி கணிசமான கோழி, சேவல்கள் மடிந்து விட்டனவாம். வெளியூர்க் காரர்களுக்கு, கணபதி வரவு புல்லரிக்க வைப்பது. குடும்பத்தோடு போய்க் காண வேண்டிய வேடிக்கை, அவசர பக்தி, கூட்டு ப்ரார்த்தனை. மிஞ்சினால் ஒருநாள் விடுமுறை. தரிசனமும் தொடர்ந்து, கட்டோலி கிராமம் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் நிகழ இதற்கு ஒரு வழி காண வேண்டும். ஆக நான் இந்த மூன்று கிராமத்து ஏரிகளையும் பார்வையிட்டு மூன்று விதமான பிரச்சனைகளை தீர்த்து வரவேண்டும்.
pic Ullal beach, Karnataka
ack en.wikimedia.org