நான் பார்த்தபோது முழங்கால் வரை ஏரிநீரில் மூழ்க விட்டுக்கொண்டு பலபேர் எந்த காரியமும் இல்லாமல் ஏரிக்குள் இருந்து எல்லா திசையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏரிக்குள் இறங்கி நிற்கும் எல்லோரையும் இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து அவரவர்களுக்கான காரியங்களில் செயல்படுவதை தொடரச் சொல்லி உத்யோகஸ்தர்கள் பலமாகக் கூவுகிறார்கள். அப்படி வரவில்லை என்றால் முதலை ஊர்ந்து வந்து பிடித்துக் கொண்டால் மீட்க ஒரு முயற்சியும் செய்யப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஏரிக் கரையில் நிற்பவர்கள் முதலையைப் பிடிக்க எடுக்கப் போகிற ஒரு ராஜாங்க நடவடிக்கையில் பங்கு பெற அழைக்கப்படுகிறார்க்ள். கிட்டத்தட்ட எல்லோரும் உடனே கலைந்து போய்விடுகிறார்கள்.
அம்மா, இவர் தான் இந்த ஏரிக்குக் காவல் இருக்கும் குகன் என்று வயசன் ஒருவனை என் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார் பிரமாணி.
இந்த வாரம் ஷராவதி நதியிலிருந்து திசை திரும்பிய வெள்ளப் பெருக்கில் இந்த முதலை ஏரிக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்று கிராமப் பேச்சாம். முதலை வந்தால் முதல் காவு என்னை மாதிரி காவல்காரங்கதான் என்று ஏரிப் பாதுகாவலன் குரல் தழுதழுக்கச் சொல்கிறான்.
முதலை வெளியே வந்தால் அதன் ஆயுளை ஓய்த்து விடலாம் ஆனால் வருவேனா என்று அடம் பிடிக்கிறது என்கிறார் பிரமாணி. ஏரியில் மீன்பிடித்தமும் கடல்முகத்துக்கான போத்துவரத்தும் நான்கு நாட்களாக நடக்காமல் வர்த்தகம் நின்று போயிருக்கிறது என்று கிராமப் பெரிய மனிதர்கள் சிலர் என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் என்ன செய்து முதலையை வெளியே கொண்டு வரவேண்டும்? அதனோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா?
அம்மா ஒரு கன்னுக்குட்டி அல்லது ஆட்டுக்குட்டியை முளையடிச்சு ஏரிக்கரையில் கட்டி வச்சா, அதுவும் காதை அறுத்து ரத்த வாடையடிக்கக் கட்டி வச்சிருந்தா, இளசு ரத்தம், சதைக்காக முதலை வெளியே வரும். ஆட்கொல்லி புலியை சுலபமாகப் பிடிக்க இதான் செய்யறாங்க என்கிறார் ஒரு ஊர்ப் பிரமுகர்.
எனக்கு சபையில் கோபம் வருவது அபூர்வம். இப்போது வருகிறது. அப்படித்தான் முதலை பிடிக்கணும்னா மனுஷ ரத்தவாடை, மனுஷ உடம்புன்னு படைக்கலாமே. என்னை எடுத்து காதை அறுத்து கட்டி வைக்கச் சொல்லுங்க. முதலைக்கு அப்பக்கா ராணி மாமிசம் பிடிக்காமல் போகாது சதை கொஞ்சம் குறைவு தான் என்றாலும்.
நான் சொல்லி முடிப்பதற்கு முன் அவர் என் காலில் விழுந்து பிழை பொறுக்கச் சொல்லி மன்றாடுகிறார். அவரை எழுப்பி நிற்க வைத்து நகர்கிறேன்.
பாதுகாப்புப் படையில் இருந்து வந்த வீரர்கள் மொத்தம் எண்பத்தேழு பேர் என்று என்னிடம் கணக்குச் சொன்னார் அவர்களின் தலைவர். அவர்கள் கரையில் ஏரி நீர்ப் பரப்பை ஒட்டியும் பத்து பேர் மட்டும் பெரும் கவனத்தோடு நீர்ப் பரப்பில் நின்றும் தொடங்கலாமா என்று ஒரே குரலில் கேட்டு ஜெயவிஜயிபவ என்று முழங்குகிறார்கள்.
இன்னும் பத்து பேர் பெரிய வலைகளோடு ஏரிக் கரையில் இருந்து ஏரிக்குள் மெல்ல நகர்ந்து போகிறார்கள். திடீரென்று நிசப்தம். எல்லாக் கண்களி, ஏரிக்குள்ளிருந்தன.
ஏரி உள்ளே ஏதோ பெரிய உடம்போடு ஊர்ந்து வருவது கண்டு தண்ணீரில் இறங்கி நின்றவர்கள் அவசரமாக விலகி நீர்ப் பரப்பை விட்டு வெளியே ஓடி வருகிறார்கள்.
முதலை முதலை என்று குரல்கள் உச்சத்தை அடைய நான் வெகு சிரமப்பட்டு அவர்களை அடக்குகிறேன்.
முதலை நான் நிற்கும் பக்கமாக முன்னேறுகிறது என்று என் பாதுகாப்பு வீரர்கள் கையில் எடுத்த வாளோடு தண்ணீரில் இறங்கப் போகும்போது நான் தடுத்து நிறுத்துகிறேன். இந்த வாளும் வில்லும் முதலைக்கு சாதாரணம். நெருப்பு அம்பு இருந்தால் சித்தம் பண்ணுங்கள் என்கிறேன்.
உடனே பாதுகாப்பு வீரர்கள் உடம்போடு சேர்த்து வைத்திருந்த சிறு பெட்டகத்தில் இருந்து வெடியுப்பையும் கந்தகத்தையும் எடுத்துக் கலந்து நாட்டுத் துப்பாக்கியில் அதை உள்ளாக்கி விசையை முதலை பக்கம் நகர்த்தி இழுத்து விரல் சுண்ட பெரும் சத்தத்தோடு துப்பாக்கி வெடிக்கிறது.
இல்லை, அதன் மேல் படவில்லை. முதலை வந்த வேகத்தில் ஏரிக்குள் திரும்ப ஓடுகிறது. ஷராவதி நதியில் நீர்ப்பெருக்கு அதிகமாகி வருவதாக ஒன்றுக்கு மேல் பலர் சொல்கிறார்கள். தண்ணீர் மட்டம் உயரும்போது வெள்ளத்தோடு முதலையும் கரைக்கு வரலாம் என்று நேரிட வேண்டியிருக்கக் கூடும் பெரும் இடர் அத்தனை பேர் மனதிலும் எழுந்திட எல்லோரும் அமைதியாக நிற்கிறார்கள்.