என் பெருநாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி.
வழக்கம்போல் ஊர்ப் பிரமுகர்கள் என்னிடம் பேசத் தயாராக மேல் துண்டால் வாய் பொத்தி நிற்கிறார்கள். துண்டை அகற்றித் தோளில் போட்டுக் கொண்டு சுருக்கமாக, வாழ்த்து எல்லாம் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து பேசச் சொல்கிறேன். கேட்டதின் சாரம் இதுதான் –
இந்த ஏரியில் உத்தர கர்னாடாகப் பிரதேசத்தின் பல பகுதி நீர்நிலைகளில் இருப்பதுபோல் கோடையில் வெள்ளம் வடிவதும் மற்ற காலங்களில் கூடுவதும் சாதாரணமாக நடப்பதில்லை. மழைநீர் சேமிப்பு இருப்பதால் இந்த ஏரி வற்றுவதே இல்லை. ஆகக் குறைவான மழை பெய்தாலும், ஏரி சிறியதென்பதால் சேமிப்பு வழக்கம்போல்தான் இருக்கும்.
இந்த ஆண்டு மழை இருந்தது. ஆனால் வெய்யில் வழக்கத்தை விட மிக அதிகமாக நீண்டநாள் தொடர்ந்ததால் ஏரி வற்றிப் போய் உள்ளே இருந்து மரச் சிற்பமாக விநாயகர் வெளிப்பட்டிருக்கிறார்,
பேசிக்கொண்டே ஏரிக் கரையில் கிழக்கு மூலைக்கு நடந்தோம். பந்தல் போட்டு புது மணல் பரப்பி குலை தள்ளிய வாழை மரங்கள் கட்டி கல்யாண வீட்டு சூழ்நிலை வியாபித்திருந்தது அங்கே. நடுவில் ஜம்மென்று மூன்றடி உயரத்தில் விநாயகர் காட்சி கொடுத்துக்கொண்டிருந்தார்.
கரம் கூப்பி வணங்கினேன். கொண்டுபோன நைவேத்தியப் பொருட்களை கணபதிக்குப் படைத்து என் மகள் பானுமதி விரைவில் மால்பே போய் அவள் கணவனோடு ஊடுதலெல்லாம் தீர்ந்து கூடியிருந்து நிறைவாழ்வு வாழ அருளப் பிரார்த்திக்கிறேன்.
முதல் கிராமத்து ஏரிக்கு முறையான காவல் இன்னும் சிலர் செய்ய, இரண்டாம் கிராமத்து ஏரியில் இருந்து முதலை நீங்க விநாயகன் அருளை அடுத்து வேண்டுகிறேன். பிரார்த்திக்கும்போது கவனிக்கிறேன். வலம்புரியாகத் தும்பிக்கை கீழே சற்றே பின்னப்பட்டிருந்தது. காரணம் என்னவாக இருக்கும்?
மரத்தில் விக்ரகத்தைச் செதுக்கும்போது கைத்தவறுதலாக தும்பிக்கையில் பங்கம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் ஏரியில் எந்தக் காலத்திலோ விசர்ஜனம் செய்து விக்ரகத்துக்கு விடை கொடுத்திருக்கலாம்.
காணபத்யம் என்ற கணபதி வழிபாடு இருநூறு, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பெருவாரியாகத் தென்னிந்தியாவிலும் மேற்குக் கரையிலும் பரவியபோது அப்போதைய பேரரசுகள் அதற்குத் தடை விதித்தன. உயிர்நீக்கம் வரை கொடுமையான தண்டனைகள் மத நம்பிக்கை பேரில் ஏற்பட்ட அந்தக் காலத்திலும் பிடிவாதமாக அவசர அவசரமாக வழிபாடு நடத்தியிருந்ததாக வரலாறு சொல்கிறது.
கணபதி விக்ரகத்தை வைத்து வழிபட்டு அதை மரியாதைபூர்வமாக அகற்ற, களிமண் பிரதிமைகளே ஏற்றவை என்று அந்த விநாயக பக்தர்கள் அறிந்தார்கள். மஞ்சளிலும், களிமண்ணிலும், ஏன் ஆவின் சாணகத்திலும் கணபதியைப் பிடித்து வைத்து ஆறு, குளம், கடல், கிணறுகளில் அவற்றைப் பின்னர் அமிழ்த்திய காலத்து விநாயகர் இந்த ஏரி விநாயகராக இருக்கலாம்.
அதுவும் இல்லை என்றால் வீட்டில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்து தற்போது தினசரி வழிபட வசதி இல்லாமல் ஏரிக்குள் யாரோ கொண்டு வந்து விடுத்துப் போயிருக்கலாம்.
நான் சொல்லச் சொல்ல கிராமத்துப் பிரமுகர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதுவாக இருந்தாலும் வழிபட்டு விடைகொடுத்து ஏரித் தரையில் ஓய்வு கொள்ள அனுப்பிவைத்த கணபதியை மறுபடி கரைக்குக் கூட்டி வந்து வழிபடுவது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது. எதற்கும் மத அறிஞர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவர்களில் மூத்த பிரமாணி சொன்னார் – அம்மா நல்ல புரிதலோடு தெளிவாகச் சொன்னீர்கள். எங்களுக்கு இதேதான் பிரச்சனை. கணேசர் கரையில் இருக்கட்டுமா ஏரியில் இருக்கட்டுமா?
நான் சிரிக்கிறேன். ஏரிக்கரையில் ஏற்கனவே கணபதி வீற்றிருக்கிறார். ஊரெல்லாம் நகரெல்லாம் விநாயகர் தான். மஞ்சளில் பிடித்து வீடுதோறும் சுப காரியங்களைத் தொடங்கி வைப்பவர் அவர் தான். வெல்லத்தில் பிடித்த வெல்லப் பிள்ளையாராக அவரை வழிபட்டுக் வயிற்றடியில் இருந்து பிரசாதமாகக் கிள்ளித் தின்றாலும் கோவித்துக்கொள்ள மாட்டார் அவர்.
ஜெய்கண்பதி ஜெய்ஜெய் கண்பதி கோஷங்கள் அதிர, ஏரி கணபதியை ஏரிக்குள்ளேயே அழைத்துப் போய் இருக்க விட்டு அவருடைய ஏரிக்கரை பிரதிமையை வழக்கம்போல் வழிபடுவோம் என்றார்கள் அவர்கள்.
நாளை பௌர்ணமி. அர்ச்சனை, படையல், அபிஷேகம் எல்லாம் செய்வித்து விநாயகரை அனுப்பி வைக்கிறோம். மகிழ்ச்சியாக என்னையும் அனுப்பி வைத்தார்கள் கட்டோலி கிராமத்துப் பெருமக்கள்.
படம் நன்றி zee5.com