excerpts from the mega novel MILAGU
”பிரபு, வாசலில் விளக்கில்லேயே. உள்ளே மும்முரமாக வாசித்துக் கொண்டிருக்கிறீரா”?
உபாத்தியாயர் உள்ளே நுழையும்போது அழைத்தபடி வந்தார். கீழே தரையில் கிடந்த ஏதோ அவர் காலில் தட்ட சுவரில் கையை வைத்து விழாமல் நின்று கொண்டார்.
சின்ஹோர் சின்ஹோர் என்று இரண்டு தடவை கூப்பிட கீழே இருந்து ஏதோ மிளகு வாசனையோடு அவர் காலில் ஏறத் தொடங்கியது. அவர் கைகளை மிகையாக அசைத்துக்கொண்டு வாசலுக்குத் திரும்ப ஓட, காலையிலேயே சகோதரி வீட்டுக்குப் போயிருந்த சுபமங்களத்தம்மாள் விரைவாக வீட்டுக்குள் நுழைந்து, ’பிரபு காலமாகிவிட்டாரா?’ என்று தான் இழக்க இருக்கும் சுகங்களை நினைத்து வருந்தியோ என்னமோ அழ ஆரம்பித்தார்.
”அம்மே, பிரபு சுகம்” என்றபடி உபாத்தியாயர் நின்ற இடத்திலேயே நிற்க அவரைச் சுற்றிப் படர்ந்து ஏறும் பேய் மிளகைக் கண்டு மிரண்டு வார்த்தையின்றி நின்றாள் சுபமங்களத்தம்மாள்.
உபாத்தியாயர் காலில் படர்ந்து பந்தலித்த மிளகுக்கொடி சுபமங்களத்தம்மாள் காலில் ஏற முனைந்து அவள் கிறீச்சிடவோ என்னவோ, ,அவளைத் தவிர்த்து கீழே இறங்கி, தரையில் கிடந்த பிரபுவின் கழுத்தை நோக்கித் திரும்பி விட்டது.
விக்ஞான உபாத்தியாயர் இதுவரை செய்யத் தவறிய காரியத்தை உடனே செய்தாள் சுபமங்களத்தம்மாள். ”ஓடி வாங்க ஐயயோ ஓடி வாங்க” என்று உச்சக் குரலில் சத்தம் போட்டாள் அவள்.
உபாத்தியாயருக்கு, தனக்கு ஏன் இது தோன்றவில்லை என்று மனதில் பட, அவளுடைய பன்மொழிப் புலமை காரணமாக இந்தத் திறமை வந்திருக்கலாம் என்று நினைப்போடு நிற்க, அண்டை அயல், தெருவில் போனவர்கள் என்று ஏழெட்டு பேர் வீட்டுக்குள் ஓடி வந்து விட்டார்கள்.
பத்தே நிமிஷத்தில் கவுடின்ஹோ பிரபு அவர் படுக்கையில் கிடத்தப்பட்டார் தரையில் கிடந்த மிளகுக்கொடி பலவான்களாக நின்று கொண்டிருந்த இருவரால் அகற்றப்பட்டது. அவர்கள் போனபோது வரவேற்பு அறை மேசையில் இருந்த இரண்டு போர்த்துகீஸ் செப்பு மதுக் குவளைகளும் அகற்றப்பட்டிருந்தன.
சுபமங்களாம்மாள் விக்ஞான உபாத்தியாயர் கையைப் பற்றி பயப்படக் கூடாது என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள். உபாத்தியாயருக்கு அது ரொம்ப பிடிக்கவே அசங்காமல் அங்கே நின்று கட்டிலில் இன்னும் பிரக்ஞை திரும்பாமல் கிடக்கும் கவுட்டின்ஹோவைப் பார்த்தபடி இருந்தார்.
விலகுங்க நான் சின்ஹோருக்கு அரிசி நொய் கஞ்சி செய்து எடுத்து வரேன் என்று விலகிக் கொண்டாள் சுபமங்களத்தம்மால். நெய் வேணாம் சீரணம் ஆகக் கஷ்டப்படுவார் என்று உபாத்தியாயர் சுட்டிக் காட்டினார்.
அம்மாள் சொன்னாள் – நெய் இல்லே வாத்தியாரே, நொய், அரிசியை மாவாக அரைக்காமல் அது அரைகுறை திரிகையிலே அடிபட்டதுமே எடுத்து அதுலே கஞ்சி காச்சறது.
அந்த நொய் சமாசாரத்தை உண்டு பார்க்கவேண்டும் என்று உபாத்தியாயருக்குத் தோன்றியது. இன்னொருத்தர் வீட்டில் போய் எனக்கு நொய்க்கஞ்சி குடிக்கக் கொடு என்று கேட்கலாமா? அதுவும் வீட்டு எஜமானர் நினைவு தப்பிக் கிடக்கும்போது.
pic Science pursuit in middle ages
ack uppen.edu