சுபமங்களத்தம்மாள் கஞ்சியோடு வந்து கட்டில் முனையில் உட்கார்ந்து, கவுட்டிங்ஹோவை தோளில் சாய்த்துக்கொண்டு உபாத்தியாயரைப் பார்த்துப் புன்சிரித்தாள்.
“இவர் அடிக்கடி இப்படி நினைவு இல்லாம போயிடுவார். ஆனா இன்னிக்கு பகல்லேயே போய் தரையிலே விழுந்து கிடந்தார். வாங்க வாத்தியாரே, நீங்க அந்தத் தோளைப் பிடிச்சுட்டு, அவர் தோளை சொன்னேன், கட்டிலுக்கு பின்னாலே நில்லுங்க. இன்னும் பத்து நிமிஷத்துலே கஞ்சி குடிச்சுடுவார்” என்றாள் சாதாரணமான தொனியில் சுபமங்களத்தம்மாள்.
”அது என்னமோ செய்யலாம் தான். ஆனால் மயக்கம் தெளியாவிட்டால்?”
விக்ஞான உபாத்தியாயரின் மனைவி அவருக்காக இந்த ராத்திரிக்கு மீன் பொரித்து வைத்திருக்கிறாள். ஏரி மீன் என்று சாயந்திரம் லாந்திவிட்டு வர, என்றால் உலவிவிட்டு வரக் கிளம்பியபோதே சொன்னாள்.
பிரபு சின்ஹோரையும், அவரை அணைத்து பிடித்து நொய்க்கஞ்சி ஊட்டும் கிழவியையும் பார்த்துக் கொண்டிருப்பது தவிர அவருக்கு வேலை இல்லாமல் அஸ்தமித்து விட்டதா என்ன? அவர் சொல்லிக்கொண்டு கிளம்புவார். நான் காலையிலே வர்றேன் என்றோ சாயாந்திரம் வர்றேன் என்றோ சொல்லிவிட்டுக் கிளம்பலாம்தான். காலையில் அவர் நடப்பது ரதவீதிப் பக்கம். சாயந்திரம் மாதாகோவில் பக்கம். பாதையை மாற்றினால் காலை வயிறு சுத்தப்படாது. என்றாலும் சொல்லி விடலாம்.
அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சுபமங்களத்தம்மாளிடம் பேச முற்படும்போது கர்ர்ர் என்று சின்ஹர் கவுட்டின்ஹோ வாய்க்குள் போன கஞ்சி வெளியே வந்து கொண்டிருந்தது. இது ஏதோ தகராறு என்று உபாத்தியாயருக்குப் புரிந்தது. இப்போது வீட்டுக்குப் போவது எப்படி?
வாசலில் சத்தம். சாரட் ஓட்டிகள் இருவரும், தோட்டக்காரனும், உள்ளே குசினியில் உதவி செய்யும் பய்யனும் எல்லாம் அவசரமாக வந்து கொண்டிருந்தார்கள். குசினிப் பய்யன் எதற்கென்று தெரியாமல் விசும்பி அழுதபடி வந்து கொண்டிருந்தான்.
அவன் சொன்னான் – போனவாரம் எனக்கு இருமல் அதிகமாக இருந்தபோது இங்கே ராத்திரி தங்கச் சொல்லி ஏதோ மருந்தை அழுத்தி தடவினார் கவுட்டின்ஹோ பிரபு. இருமல் ஓடியே போச்சு.
சுபமங்களத்தம்மாள் கட்டிலில் உட்கார்ந்து, கண்மூடி இருக்கும் எஜமானரை தோளில் சாய்த்து கஞ்சி ஊட்டுவது அவர்களை ஆகர்ஷித்தது இத்தனை அத்தனை இல்லை என்று தோன்ற வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
”கூத்து பார்க்க போயிட்டிருக்கோம். இங்கே என்ன ஆச்சு விளக்கே எரியலியேன்னு பார்க்க வந்தோம் ஒண்ணும் இல்லையே” என்று தோட்டக்காரன் விசாரிக்க, பக்கத்தில் நின்ற விக்ஞான உபாத்தியாயர் அவர்களைப் பதட்டத்தோடு பார்த்து ”ஏம்ப்பா சின்ஹோர் கண்ணு திறக்காம இருக்கார் அது உங்க கண்ணுலே படவில்லையா?” என்று குற்றம் சாற்றும் தொனியில் கேட்டார்.
“முகத்துலே சாராயம் தெளிக்கலாமுங்க வாத்தியார் ஐயா” என்றான் குசினி உதவிப் பையன்.
‘சாராயம் தெளிச்சா மூச்சு முட்டும் அதற்கு அப்புறம் என்ன ஆகுமோ தெரியலே வேண்டாம்” என்றாள் சுபமங்களத்தம்மாள்.
”அப்போ வெறும் தண்ணி தெளிக்கலாமே” என்று உபாத்தியாயர் யோசனை சொன்னார்.
“அவருக்கு தண்ணி முகத்திலே சட்டுனு தெளிச்சா முகம் வீங்கிப் போய் ஒரு மணி நேரமாவது ஆகும் திரும்ப சரியாக வர்றதுக்கு” என்று சுபமங்களா திரும்பச் சொன்னாள்.
“ஆபத்துக்கு தோஷமில்லே. பிரக்ஞை திரும்பறது தான் இப்போது முக்கியம். தண்ணி, சாராயம், வென்னீர், பன்னீர் ஏதாவது எடுத்து வாங்க” என்றார் உபாத்தியாயர்.
காலையில் மயில் துத்தமும், ஒரு துளி ராஜதிராவகமும், கொஞ்சம் போல் பெர்மாங்கனேட் சாயநீரும், இன்னும் புகை விடும் இத்தனூண்டு கந்தகமும் சேர்த்துக் காய்ச்சிய நிறமற்ற அந்தக் கூழ் காலிலோ பேய் மிளகுக் கொடியிலோ பட்டால் நம்ப முடியாத விளைவுகள் ஏற்படுவதை நாளை ஆராய்ச்சி முடிவாக எழுதி சின்ஹோர் மூலம் லிஸ்பன் விக்ஞான பேரவைக்கு அனுப்ப நிச்சயம் செய்து கொண்டார் விக்ஞான உபாத்தியாயர்.
அவர்களுக்கு மிளகு பற்றித் தனியான ஆர்வம் எதுவும் இல்லை. நிற்காத யந்திரம், புவியீர்ப்பு விசையைக் கடந்து போவது, காலத்தில் பயணம் செய்வது போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சியும், சொற்பொழிவும் பேரவைக்குப் பிடித்தவை மட்டுமில்லை. வருமானம் கொண்டு வருகிறவை.
லிஸ்பன் நகரப் பணம் படைத்த தனவந்தர்கள், விக்ஞானத்தில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல், ஏதோ இந்த சொற்பொழிவுகள் அறிவு சேர்வதற்கு வழி செய்பவை என்று நினைத்து, அங்கனமே பறைசாற்றிக்கொண்டு, கட்டணம் கொடுத்து சொற்பொழிவுக்கு வந்து அங்கே கண்மூடி உறங்குவதெல்லாம் உபாத்தியாயருக்குத் தெரியும்.
அதெல்லாம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். விக்ஞான உபாத்தியாயர் வீடு போய், மீன் கறியோடு சோறு உண்டு நிம்மதியாக உறங்கப் போகவேண்டும். இந்த உச்சைக் கிறுக்கன் கண் விழித்து மிளகுக் கஷாயம் கேட்டால் என்ன, கண் மூடியே பரலோகம் போனால் என்ன?
அவர் நேரே சுபமங்களத்தம்மாளிடம் போய் ’வீட்டில் கட்டியோள் ஆரோக்யம் நலிந்து குருதரமாக இருப்பதால் நான் போய் நாளைக் காலை திரும்புகிறேன்’ என்று வாசலுக்கு வேகமாக நடந்தார். அவர் அதை மீறிப் போக முடியாமல் அவர் காலையும் பேய் மிளகுக் கொடி கட்டியது.
pic ack nytimes.com