an excerpt from MILAGU
“வாத்தியாரே, இன்னும் தாமதிக்காமல் பெத்ரோ பிரபுவிடம் வந்து பார்க்கச் சொல்லி அவசரச் செய்தி அனுப்பினால் என்ன” என்று சுபமங்களத்தம்மாள் கேட்டாள். அதுவுஞ்சரிதான் என்று ஒரு சாரட் வண்டியில் தோட்டக்காரனையும், குசினிக்காரனையும் அனுப்பி வைக்கச் சொன்னார் விக்ஞான உபாத்தியாயர்.
அனுப்பி வைக்கப்பட்டது. போனவர்கள் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்கள். பெத்ரோ பிரபு கிழக்குக் கரையில் காளிகட்டம் பயணம் வைத்து நேற்றுக்காலைதான் புறப்பட்டுப் போனதாகவும் இன்னும் மூன்று வாரம் ஆகும் அவர் திரும்பிவர என்றும் பெத்ரோ பிரபு மாளிகை நிர்வாகி கஸாண்ட்ரா சொல்லியனுப்பியிருந்ததாக சுபமங்களத்தம்மாளிடம் தெரிவித்தார்கள்.
கஸாண்ட்ரா, பெத்ரோ இங்கே வைத்துவிட்டுப்போன கூடுதல் மருத்துவப் பெட்டியிலிருந்து ஏதோ சில குளிகைகளையும், நாசித் துவாரங்களில் சளி நிவர்த்திக்காகப் பூசும் களிம்பையும் அனுப்பிவைத்திருந்தாள்.
கவுட்டின்ஹோவை அந்தக் குளிகையை விழுங்க வைக்க சிரமமாக இருந்தது. விழுங்கியும் கண் திறக்கவில்லை. என்றாலும் சுபமங்களத்தோடு தன் தன்னை அட்டைப்பூச்சி மாதிரி ஒட்ட வைத்துக்கொண்டு கிடந்தார் அவர்.
அந்தக் களிம்பு பிரயோஜனமாக இருக்கும் என்று எடுத்து அதை பிரபுவின் நாசித் துவாரத்தில் அடைக்க, கண் மூடியபடியே அவர் கை உயர்ந்து அதை எடுத்து சுபமங்களத்தின் வயிற்றில் பூசி அங்கே மீண்டும் தலை வைத்தார்.
ரோஜாப்பூக்கள் தன் வயிற்றுக்குள் இறக்கை முளைத்துப் பறக்கின்றன என்றும், மிளகுக் கொடிகள் சரிகை உடுப்பணிந்து பாடுவதைத் தன்னால் கேட்க முடிகிறதென்றும், வண்ணத்துப் பூச்சிகள் நீந்தும் பச்சைநிற நீர் நிறைந்த குளக்கரையில் வயிறு மின்னும் தவளைகள் பாதிரி உடுப்பணிந்து ஆடுகின்றனவென்றும் சுபமங்களத்தம்மாள் தெரிவிக்க, விக்ஞான உபாத்தியாயர், அவள் பூசியதும், அவள் வயிற்றில் பிரபு வழித்துப் பூசியதும், அபின் கலந்த களிம்பு என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இன்னொரு முறை வாசலுக்கு நடந்தார். அந்தப் பேய் மிளகு தன் உக்கிரம் எல்லாம் தீர்ந்தோ என்னமோ சும்மா கிடக்க, அவர் வாசலுக்கு செருப்பைக் கையில் எடுத்துப் போய், அங்கிருந்து ஓடி ரட்சைப்பட்டார்.
தோட்டக்காரன் சுவாதீனமாக உள்ளே வந்து சுபமங்களத்தம்மாளிடம் சொன்னது இது – ’மூப்பரை அரண்மனை வைத்தியர் பைத்யநாத்திடம் காட்டினால் உடனே சுவஸ்தமாகும். அதற்கான பணம் கொஞ்சம் கூடுதலாகுமே”. அவனே வைத்தியன் மாதிரி கூட்டிச் சேர்த்தான்.
“மருத்துவக் கூலி பற்றி எல்லாம் நீ ஒன்றும் கவலைப்பட வேணாம். நீயும் குசினிக்காரனும் போய் பைத்யநாத் வைத்தியரை விவரம் எல்லாம் சொல்லி, ஸ்திதி ரொம்ப மோசம் என்று அறிய வைத்து, அவரோடு உடனே வந்து சேருங்கள். கவுட்டின்ஹோ பிரபு என்றால் அவரும் வந்து விடுவார்”.
என்றெல்லாம் பலதும் சொல்லி சுபமங்களத்தம்மாள் அனுப்பி வைத்தாள். கவுட்டின்ஹோ பிரபு அதற்குள் ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தார். அவர் சுபமங்களாவைப் பற்றிப் பிடித்திருந்த தலம் சொல்லக் கூடாதது என்பதால் அவள் நீளம் அகலம் மிகுந்த போர்வையைப் போர்த்தி, இரண்டு பேரையும் தேவையான அளவு மறைத்து இருக்கும்படி செய்திருந்தாள்.
போர்வை விலகினால் பார்த்துப் போக உத்தேசத்தோடு, கடை எடுத்து வைத்துவிட்டு வீடேகும் சிறுகடை உடமையாளர்களும், அடுத்த, எதிர் மாளிகை நவரத்ன வியாபாரிகள் வீட்டு நவுகர்கள், என்றால் வேலைக்காரர்களும், தெருவில் திரியும் வெறுந்தடியர்களும் உள்ளே வந்து கையைக் கட்டிக்கொண்டு, சட்டமாக நின்று கொண்டிருக்க, உட்கார்ந்தபடிக்கே சுபமங்களத்தம்மாள் பலமாகக் குரல் விட்டு விரட்டினாள்.
அரை மணி நேரத்தில் அம்மாள் தலையணைகளைப் பின்னால் அண்டக்கொடுத்து வைத்தபடி, சாய்ந்து கட்டிலில் உறங்கியிருந்தாள். கவுட்டன்ஹோ பிரபு அவளோடு ஈஷிக் கொண்டு உறக்கமா பிரக்ஞை தவறியதா என்று சொல்ல முடியாத நிலையில் கிடந்தார். கூத்து பார்க்கப் புறப்பட்ட சிப்பந்திகள் கதவை மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துவிட்டுப் போய்விட்டிருந்தார்கள்.
சாரட் ஒன்று சத்தமில்லாமல் வந்து நின்றது. குதிரைகள் நாள் முழுதும் ஓடி ஓய்ந்து, இப்படி ராத்திரியிலும் ஓடச் செய்யும் கொடுமையை ஆட்சேபிப்பதுபோல் ஓங்கிக் கனைத்த சத்தம் வெளியில் நிறைந்தது.
சாரட் சாரதி உடனே வண்டிக்குள் ஓரமாக வைத்திருந்த பிரப்பங்கூடைக்குள் இருந்து பசும்புல்லும் கொள்ளும் கொடுக்க, போடா மயிரு என்று அந்தக் குதிரைகள் அதைப் புறக்கணித்து இன்னொரு முறை கனைத்துவிட்டு, வாடை எழக் கழிந்து, நின்றபடியே உறங்க ஆரம்பித்தன.
குதிரைகள் என்று சொல்லி சிரித்தபடி, குதிரை லத்தியை மிதிக்காமல் தாண்டிக் குதித்து, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டியோடு கவுட்டின்ஹோ மாளிகைக்குள் நுழைந்தபோது, ஓரமாக வைத்திருந்த பெரிய கடியாரம் டண்டண்டண என்று நிறுத்தாமல் அடிக்க, நெட்டுயிர்த்தபடி நடுராத்திரி என்றாள் சுபமங்களத்தம்மாள்.
வைத்தியர் முன் பிரபுவிடமிருந்து விலகி இருக்க அவள் முயன்றாள். பிரபு நீங்குகிற வழியாக இல்லை. போர்த்திய துணியை வைத்தியர் எடுக்க, கவ்டின்ஹோவின் விரல்கள் உடுப்போடு சேர்த்து சுபமங்களத்தமாளின் அந்தரங்க பாகத்தை கெல்லி எடுப்பதுபோல் பிடித்திருந்தன.
Scientific Pursuit During Middle Ages
Ack history.com