ஹொன்னாவர் ரதவீதியில் பரபரப்பு ஏற்படுவதற்கு முன் மாந்தோப்புத் தெரு இல்லத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று நேமிநாதன் தீர்மானம் செய்திருந்தது நிலைகுலைந்து போனதற்கு பாதிராத்திரிக்கு மேலும் விழித்திருக்க வைத்த ரோகிணி காரணம் இல்லை.
மாந்தோப்புத் தெருவே மரங்களின் அணிவகுப்புக்கு இடையே இருப்பது. வேம்பும், மலை வேம்பும், நெடுநெடுவென்று நெட்டிலிங்க மரங்களும், அசோகமும், பலா மரங்களுமாக தெருவோரம் வரிசையாக நிற்கும். வீடுகளுக்கு நடுவே ஒன்றிரண்டு மாமரங்கள் தட்டுப்படாமல் இருக்காது.
நாள் முழுக்க வெப்பம் தட்டுப்படாமலும் ராத்திரியில் குளிர் மிகுந்தும் உள்ள சூழலில், படுத்தது தெரியும், எழுந்தது தெரியும். காலை ஐந்துக்கு எழ நினைத்தது, ஏழுக்கு எழுந்தானது.
இன்னும் ஒரு வாரம். நேமிநாதனுக்கு மனை வாடகைக்குக் கொடுத்திருக்கும் நாகேச பட்டர் நேற்றைக்கே சொல்லி விட்டார் –
”ஸ்வாமின், நீங்கள் பேஷாக நடுக்கூடத்திலே ஒத்தக்கால்லே நின்னுண்டு இருங்கோ, மூக்கிலே விரலை விட்டுண்டு சம்மணம் கொட்டி திண்ணையிலே உக்காந்துண்டிருங்கோ, சமையல் உள்ளுலே குப்புறப் படுத்திண்டிருங்கோ, தோட்டத்துலே இலை போட்டு பலகாரம் பண்ணிண்டு இருங்கோ. நீங்க வருங்கால மகாராஜா. நான் எப்பவும் பிரஜைதான். வருங்காலத்திலே ஜீவிச்சிருந்தா பல் இல்லாம போன பிரஜை. இந்த பிரஜைக்கு ஒரே ஒரு அபேக்ஷைதான். உங்க பார்யாளை கொண்டு வந்து வச்சுண்டு ஜாம்ஜாம்னு இருங்கோ. மத்த ஸ்த்ரிகள் ஆத்துலே சமைக்க, பெருக்கி மெழுக இப்படி வந்துட்டு போகட்டும். மத்ததுக்கு உசிதம் போல பண்ணுங்கோ. உங்களுக்கு தெரியாததில்லே”.
பட்டர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான் என்று நேமிநாதனுக்கும் பட்டது. மிளகுராணி மிர்ஜான் கோட்டை மாளிகைக்கு வெளியே போகச் சொன்னதும் இங்கே ரோகிணி முயற்சியில் நாகேச பட்டர் வீடு பூட்டியிருந்தது திறந்து துப்புரவு செய்யப்பட்டு நேமிநாதன் வசிக்க இடம் ஏற்படுத்தித் தரப்பட்டது. மாதம் முன்நூறு வராகன் பட்டருக்கு குடக்கூலியாகத் தரவேணும் என்றும் ஒப்பந்தமானது.
தத்துப் புத்திரன் நேமிநாதனின் மனைவி ரஞ்சனா தேவி எங்கும் போக வேண்டாம், கோட்டையிலேயே இருக்கலாம் என்று சென்னபைரதேவி மகாராணி நிர்ணயித்தது மூலம் நேமிநாதனுக்கு மட்டும்தான் வெளியே போக உத்தரவு என்று தெரிந்தது.
சந்தேசங்கள் எப்போதும் கீழ் உத்தியோகஸ்தர் மூலம் அறிவிக்கப்படுவது வாடிக்கை. என்றாலும் சென்னா தன் வளர்ப்பு மகனை வெளியேற்றி வெளியிட்ட அதிகார ஆணையை பிரதானி நஞ்சுண்டய்யா தான் அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பித்தார்.
அதற்கு முக்கிய காரணம் நேமிநாதனின் அரசகுமார அந்தஸ்து என்பதோடு நேமிநாதனின் மூத்த நண்பர், நேமிநாதன் புழங்கும் ஹொன்னாவர் ரதவீதியில் மனை இருக்கிறவர் அவர், முலைகளும் நிதம்பமும் வரும் கொங்கணிக் கவிதைகளை (எல்லாக் கவிதையும் அப்படித்தான்) போர்த்துகீஸ் மொழியாக்கம் செய்வதில் கூட்டு சேர்ந்த கவிதா ரசிகர்கள், என்பதால் எப்படியும் நஞ்சுண்டய்யா நேமிநாதனை சந்தித்து லிகிதத்தைக் கொடுத்து விடுவார் என்ற திடமான நம்பிக்கையும் தான்.
நேமிநாதன் அதேபடி சந்தேசத்தை வாங்கிக்கொண்டு, வலுக்கட்டாயமாக நஞ்சுண்டர் பிரதானியை இனிப்பு அங்காடிக்குள் இழுத்துப்போய், ஜயவிஜயீ இனிப்பு எடுத்து, வேண்டாம் என்று மறுத்தாலும் ஊட்டாத குறையாக நிர்பந்தித்துத் தின்ன வைத்தான்.
சென்னாவை விட்டு விலகி இருப்பதற்கான ஆணையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டு வந்தவருக்கு இனிப்பு வழங்கி அதைக் கொண்டாடுவதாகவும் காட்டிக் கொண்டான்.
அதற்கும் மேலே ஒருபடி போய் அந்த நேரத்தில் கடைக்கு வந்தவர்கள், தெருவில் அந்தப் பக்கமாக வந்தவர்கள், போனவர்களுக்கும் ஒருவர் விடாமல், சிலபேரைத் துரத்திச் சென்றும், ஜபர்தஸ்தியாக இனிப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லி நீட்டி ஊரோடு கொண்டாடினான் நேமிநாதன்.