மதுரை போற்றுதும் நூல் அறிமுகம்
————————————————–
நானும் மதுரைக்காரன் தான்.
ப்ரோப்பர் மதுரையா என்று கேட்டால் மதுரைக்கு வெறும் 48 கிலோமீட்டர் கிழக்கே சிவகங்கை என்று கூடுதல் தகவல் வரும்.
நான் 1975 என்ற, எமர்ஜென்சி காலம் பற்றிய என் நாவலில் எழுதினேன் –
/
இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது.
“மேலமாசி வீதிவரைக்கும் போனேன், கீழ மாரட் ஸ்ட்ரீட்லே மெஸ்ஸுலே சாப்பிட்டேன்” என்று படு கேஷுவலாக மதுரைத் தெருக்களை ஊர்ப்பெயர் சேர்க்காது 48 கிலோமீட்டர் தூரத்து சிறுநகர வாசிகளான நாங்கள் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். மதுரையின் புறநகர் என்ற அடையாளம் கிடைக்கக் கூடும் விரைவில். செம்மண் பூமியின் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஊர் என்ற பழைய பெருமை எல்லாம் யாருக்கு வேண்டி இருக்கிறது.
ஒரே ஒரு ஆறுதல். கோவிலுக்குப் போய் வந்ததை மட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேன் என்பது போல் ஊர்ப் பெயரோடு தான் சொல்லப் பிடிக்கிறது சகலமானவர்களுக்கும்.
//
நண்பர் சுப்பாராவ் எல்லா விதத்திலும் மதுரைக்காரர். அவரே சொல்கிறபடி, ‘விபரம் தெரிந்த நாள் முதல் , மதுரையிலேயே வாழ்ந்து, அங்கேயே படித்து, அங்கேயே நல்ல வேலை பெற்று, அடுத்த தெரு பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டு, மகளுக்கு உள்ளூரிலேயே இரண்டு ஸ்டாப் தள்ளி இருக்கும் தெருவில் மாப்பிள்ளை பார்த்து சம்பந்தம் செய்து கொண்ட முழு மதுரைக்காரன்’. கடந்த ஐம்பது வருடமாக அவரும் மதுரையும் சேர்ந்தே வாழ்கிறார்கள். சேர்ந்தே மாறினார்கள். சேர்ந்தே மாறாமல் அப்படியே இருக்கிறார்கள்.
எப்படி? சுப்பாராவ் நம் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு சிம்மக்கல் ஜெயவீர ஆஞ்சனேயர் கோவிலில் இருந்து புறப்பட்டு நடந்தபடி சுவாரசியமாகச் சொல்லிப் போகிறார். ரொம்ப நிதானமும் இல்லாத, வேகுவேகென்று விரையவும் இல்லாத சரியான வேகத்திலான நடை அது.
சுப்பாராவ் வேடிக்கை பார்க்கக் கூட்டிப் போவதில்லை. ‘வேடிக்கை பார்க்க வந்தவனுக்குச் சத்தியம் புலப்படாது’ என்று பாரதியார் ஞானரதத்தில் சொன்னார். சுப்பாராவ் எழுத்தில் நோஸ்டால்ஜியாவாக நனைவிடைத் தோய்தல் மட்டும் இல்லை, மதுரையின் வளர்சிதை மாற்றங்கள் பற்றி விவாதிக்கிறார், மகிழ்ச்சியடைகிறார், கவலைப்படுகிறார். நுண்ணிய பார்வை, நகைச்சுவை, அங்கதம் இதெல்லாம் தான் மதுரை போற்றுதும்.
நான் எந்தப் புத்தகத்தை வாங்கினாலும் அதைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தைப் படிப்பேன். அந்தப் பக்கம் படிக்க சுவையாக, நேர்த்தியான மொழிநடையோடு இருந்தால் முழு நூலையும் பற்றி ஒரு திடமான நம்பிக்கை வரும். வராத நூலெதுவும் வாங்கமாட்டேன் தான். மதுரை போற்றுதும் நூலில் திறந்து படித்த பக்கத்தில் இருந்து –
//
ஆட்டுக்கார அலமேலு கல்பனாவில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. அதற்காக நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக (படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த) ராமு ஆடு கலந்து கொண்டது. ஆட்டுக்கு மாலை எல்லாம் போட்டு, நான்கு பெட்ரோமாக்ஸ் லைட், பேண்ட் செட்டுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அதன் முன்னாலும், பின்னாலும் ஏரியாவின் அத்தனை சிறுவர்களும். நான் அந்த ஊர்வலத்தில் பத்து அடி மட்டும் நடந்து செல்ல முடிந்தது. பதினோறாவது அடியில் என் அக்காவால் வீட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். பெரிய படிப்பாளியாக வரவேண்டியவன் இப்படி ஆட்டுக்குப் பின்னால் போய்விட்டானே என்ற என் தாயாரின் துக்கம் தீர ஒரு வாரம் ஆனது.
//
இந்தக் கலகலப்பைப் புத்தகம் முழுக்க அளித்துப் போகிறார் சுப்பாராவ்.
மகாத்மா காந்தியின் தலைமையில் நிகழ்ந்த உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு தமிழகம் 100 தொண்டர்களை அனுப்பியது. அவர்களில் 24 பேர் மதுரைக்கார்ர்கள் என்று பெருமையோடு சொல்கிறார் சுப்பாராவ். சொன்னதோடு நிற்கவில்லை.. இது தொடர்பாக, தமிழ் உரைநடை இலக்கியப் பிதாமர்களில் ஒருவரான சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம் -சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலில் இருந்து பளிச்சென்று மதுரைக் காட்சி விரிகிறது
//
ஊர்வலம் கீழச்சித்திரை வீதி திரும்புவதற்குள்ளேயே சத்தியாகிரகிகளின் கழுத்தில்தான் எத்தனை கதர்சிட்ட மாலைகள் விழுந்தன. கீழச்சித்திரை வீதிக்குள் திரும்பி அம்மன் சந்நிதிக்கு வந்து, கோவிலில் நுழைந்தோம்//
சி.சு.செல்லப்பா மட்டுமில்லை, சுஜாதா, இரா.முருகன், சு.வெங்கடேசன், பா.வெங்கடேசன் என்று சக இலக்கியப் படைப்பாளிகளின் கதைகளிலிருந்து மதுரைச் சித்தரிப்பை கோடி காட்டுகிறார் அங்கங்கே. ஞானக்கூத்தனின் ‘நரிகளைப் பரிகளாக்கும் திருவிளையாடல் முற்றுப் பெற்றது’ கவிதையும்.
சிம்மக்கல் ஜெயவீர ஆஞ்சநேயர் சந்நிதியில் ஒரு கும்பிடு போட்டுத் தொடங்கும் சுப்பராவ் திரும்பிப் பார்க்க, அனுமனைக் காணோம்.. பழைய அனும விக்ரகத்தை அகற்றிவிட்டு, தெருவில் இருந்தே பார்த்தாலும் தெரியும் மெகா சைஸ் வாயுபுத்திரரை சிலையாக்கி வைத்திருக்கிறார்களாம். காலம் மாறிப் போச்சு!
இன்றைய பலமாடிக் குடியிருப்பு போல் 1960-களூடாக சிம்மக்கல் பகுதியிலும், எஞ்சிய மதுரையிலும் ஸ்டோர், காம்பவுண்ட் ஒண்டுக்குடித்தன குடியிருப்புகளை நினைவு கூர்கிறார். அவற்றில் மின்சாரம் இல்லாத சில வீடுகளில் ’மாலை வேளைகளில் கோலப்பொடியை வைத்து ஹரிக்கேன் விளக்குகளை துடைத்துக் கொண்டிருப்பார்கள்’. ஆர்.கே.லட்சுமண் வரைந்த குறைந்த அளவு கோடுகளில் சூழலைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் கோட்டோவியம் போன்றது சுப்பாராவின் குறைந்த சொற்களில் விரியும் நுண்ணிய சித்தரிப்பு. ஆர் கே லக்ஷ்மண் கோட்டோவியம் மட்டுமில்லை, மதுரையின் அற்புதமான ஓவியர் மனோகர் தேவதாஸ், தன் வகுப்பறை ஓவியத்தில் வரைந்து நிலைபெறச் செய்த பள்ளிக்கூட வகுப்பறையைப் பார்க்க சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்துப் போய், ஓவியத்தில் வந்த ஜன்னல் அருகே அந்த வகுப்பறை பெஞ்சில் அமர்த்தி வைக்கிறார் சுப்பாராவ்.
நண்பனின் குடும்பம் நடத்தும் கடையில் அரிசி மூட்டைமேல் உட்கார்ந்து கேட்ட, தெருவில் நடக்கும் அரசியல் கட்சிக் கூட்ட சொற்பொழிவுகள், ஒண்டுக் குடுத்தன ஸ்டோரில் வீட்டுக்கு விலக்காகி ஒதுங்க வைக்கப்பட்ட பெண்மணிகள் மேட்னி ஷோ சினிமா பார்த்து விட்டு வந்து கொல்லைக் கதவைத் திறந்து உள்ளே பிரவேசிக்கக் காத்திருப்பது என்று புனைவுக்குரிய கதையாடலும் அங்கங்கே தலைகாட்டுகிறது.
கட்டபொம்மனோடு விவாதம் புரிந்த, ஜாக்சன் துரையின் சமாதியைத் தேடிக் கண்டுபிடித்த நிகழ்ச்சி மிகைப்படுத்தாமல் சொல்லப்படுகிறது. எண்பது வயது நாடக ராஜ நடிகை எஸ்.பி மீனாளின் நேர்காணலில் இந்த வயசிலும் அழகாகத் தெரியும் அந்த மூதாட்டியின் சினிமா கசப்பு அனுபவங்கள் பற்றிக் கோடி காட்டுகிறார் ஆசிரியர். 1970களில் வெளியான ’பொண்ணு ஊருக்குப் புதுசு’ திரைப்படத்தில் ‘ஓரம் போ ஓரம் போ’ பாடல் காட்சியில் வரும் அழகான நடுவயசு அம்மணி அவர்தானாம். (யூடியூபில் ஓரம் போ பார்த்தேன். அவர் சொன்னது உண்மைதான்).
1970=களில் தெருவுக்குத் தெரு மதுரையில் அரசியல் கட்சிகள் படிப்பகங்களை ஏற்படுத்தி, புத்தகங்கள் இல்லாவிட்டாலும் சுடச்சுட செய்தி வழங்கிய தினசரிப் பத்திரிகைளை வாங்கிப் போட்டு கட்சி வேறுபாடில்லாமல் வாசிப்பை வளர்த்த வரலாறு சுவையாகச் சொல்லப்படுகிறது அடுத்து.
மதுரையின் மெல்லிசைக் குழுக்கள், ராஜபார்ட் நாடகக் குழுக்கள், சினிமா அரங்கங்கள்,பதிப்பகங்கள், புத்தகக் கடைகள், ஜிம்னாஸ்டிக்ஸ் உடற்பயிற்சி நல்கும் ஜிம்கள் இவற்றோடு 1970-80களில் மதுரையில் இசை வளர்த்த, கேஸட்டில் சினிமா கானங்களைப் பகர்த்தித் தந்து பரபரப்பாக இயங்கிய கடைகள் பற்றி எல்லாம் அருமையாகச் சித்தரிக்கிறார் சுப்பாராவ்.
மதுரை சோமு, மதுரை மணி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சகோதரர் மிருதங்கம் சக்திவேலு, திரைப்படத்திலும் நாகசுவரம் வாசித்து அழியாப் புகழ் பெற்ற மதுரை எம்பிஎன் சேதுராமன், எம்பிஎன் பொன்னுசாமி பற்றியும் விரிவாகச் சொல்கிறது இந்நூல்.
எம்பிஎன் சகோதரர்கள் சாதா வேட்டி சட்டை அணிந்து கோவிலுக்கு வழிபட வந்தபோது பிரதோஷம் சாமி புறப்பாடு என்று எந்த பந்தாவும் இல்லாமல் சிஷ்யரிடம் நாகசுவரத்தை வாங்கி விஸ்தாரமாக கல்யாணியில் வாசுதேவயனி க்ருதியை வாசித்துக் கச்சேரி செய்தபடி நடந்து போவதும் கதைபோல் விவரிக்கப்படுகிறது.
வடக்கு பெருமாள் மேஸ்திரி தெரு குஸ்திப் பள்ளியில் பிரபல பாடகர் மதுரை சோமு அதிகாலை நேரத்தில் குஸ்தி ஒர்க் அவுட் பண்ணியபோது (மதுரை தமிழில் – உழைத்தபோது) குஸ்தி பள்ளியின் பின்பக்கத்து வீட்டு மாடியில் இளம் நாகசுவரக் கலைஞர்களான எம்பிஎன் சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் கடினமான நாகசுவர சாதகத்தில் ஈடுபட்டிருப்பர். அந்த இனிய இசை சோமு காதில் வந்து சற்றே பட்டதோடு அந்த மாடியும் அவர் கண்ணில் படும்.
மதுரைக் கோவிலின் சாயந்திரம் தொடங்கி அர்த்தஜாம பூஜை வரையான நிகழ்ச்சிகளைப் பற்றி சுப்பாராவ் எழுதியதைப் படித்ததும் உடனே ஃப்ளைட், ரயில், ஸ்பெஷல் பஸ் பிடித்து மதுரை போய் கோவிலுக்கு ஓடி அங்கே அங்கயற்கண் அம்மை சந்நிதியில் நெக்குருகி நின்று வணங்கிவரத் தூண்டும் சுப்பாராவ் ஓர் இடதுசாரி சிந்தனையாளர்தான். எனில் என்?
மதுரைக்காரர்களுக்கே உரித்தான ‘எங்கம்மா மீனாட்சி’ பெருமை சாற்றிக் கொள்வதும், தினசரி ஒன்றென வருடம் முழுவதும் நடந்தேறும் விழாக்களும் – நரியைப் பரியாக்கிய திருநாள், வன்னிமரம் சாட்சி சொன்ன நாள் இப்படி திருவிளையாடல் அடிப்படையில், பல கோவில் சார்ந்த விழாக்களின் சித்தரிப்பும் நூல் முழுக்க பாயசத்தில் கலந்து சுவைக்கும் முந்திரி போல் சுவை கூட்டுகின்றன. சித்திரைத் திருவிழாவில் பத்து நாள் உற்சவமாக மனம் கொள்ளை கொள்ளும் விழாப் பாங்கையும் விரிவாக, அழகாக விவரிக்கிறார் சுப்பாராவ்.
மாட்டுப் பொங்கலன்று மதுரைத் தெருவில் கரக ஆட்டமாக சரஸ்வதி பள்ளிக்கூடம் கதைப்பாடல் பாட்டும் ஆட்டமுமாக பரபரப்பாக நிகழ்வதை சமூகப் பொறுப்போடு கூடிய கலை வெளிப்பாடாக சுட்டிக் காட்டுகிறார் சுப்பாராவ். 1964-ஆம் ஆண்டு மதுரையில் சரஸ்வதி பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 36 குழந்தைகள் இறந்தது பற்றிய மனதை உருக்கும் கதைப்பாடல் அது. அதன் முடிவில் ஆண் பாடகர் கேட்பார் – ’இவ்வளவு நடந்திருக்கு. இந்த ஊர்லே ஒரு மகாராணி இருக்குது, அது என்ன செஞ்சுச்சு?’ அதற்கு பெண்குரல் பதில் சொல்வது – ’அது என்ன பண்ணிச்சு? அது பாட்டுக்கு பட்டாபிஷேகம் பண்ணிக்கும். திக்விஜயம் வரும். கல்யாணம் கட்டிக்கும்’.
சரஸ்வதி பள்ளி விபத்தை அங்கையற்கண் அம்மையின் சித்திரைத் திருவிழாவோடு இணைத்துக் கரகமாடும் அவர்கள் எல்லோரும் மீனாட்சி அம்மனின் பரம பக்தர்கள். அந்த பக்தியின் வெளிப்பாடு தான் ’என்ன செஞ்சே நீ?’ என்று மீனாளை இடித்துரைப்பது. சுப்பாராவ் அந்தத் தொனியை மிகச் சரியாக ’மதுரை போற்றுதும்’ நூலில் அடையாளம் காட்டியிருக்கிறார். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்று அனைத்துப் பரிமாணங்களிலும் வெற்றி காணும் படைப்பு இந்த நூல்.
நூல் – மதுரை போற்றுதும்
ஆசிரியர் – ச.சுப்பாராவ்
பதிப்பாளர் சந்தியா பதிப்பகம், அஷோக் நகர், சென்னை 83 (044 – 24896979)
விலை ரூ 200