பெருநாவல் மிளகு – Street Scenes in the town of Keladi and the artful streetwalkers

மெல்ல நடந்தான் நேமிநாதன்.

கெலடி வீதிகள் நடக்க நடக்க கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தாலும் ஹொன்னாவர் வீதிகள் போல் விசாலமானவைகளாக இல்லாத காரணத்தால் தோளோடு தோள் இடிக்க நடக்க வேண்டி இருந்தது. இரண்டு கடைகளுக்கு ஒன்று மதுசாலையானதால் தெருவில் கள்ளு மாந்தி போதம் கெட்டுத் திரிகிறவர்கள் அதிகமாக இருந்தனர். சும்மா அலையாமல் போகிறவன் வருகிறவனை வம்பிழுத்துக் கொண்டு நடமாடும் அவர்களைத் தவிர்த்து நடந்தான் நேமிநாதன்.

நான்கு மதுக்கடைகளும் சூதாட்ட விடுதிகளும் இருந்த தெருவில் நெரிசலுக்கு நடுவே யாரோ நேமிநாதனின் இடுப்புக்குக் கீழே தொட்டது போல் இருந்தது. பணப்பையை இடுப்பில் மாட்டி வைத்திருப்பது தெரிந்து அறுத்தெடுத்துப் போகப் பின்னாலேயே வந்த யாரோ நேமிநாதன் விழிப்பாக இருந்ததால் தோற்றுப் போய் நாயின் மகனே என்ற வசவு மொழிந்து ஓடியதைப் பார்த்து நேமிநாதனுக்குச் சிரிப்பு வந்தது.

தெருவின் இருவசமும் காட்சிகள் மாறி இருக்க, தீர்க்கமான மல்லிகைப்பூ மணம். ஒருகதவு மட்டும் திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்த வீடுகளில் வாசல் கதவைப் பிடித்தபடி நின்ற இளம் பெண்கள் ’சுகிக்க வா, திருப்தி இல்லையேல் இன்னொரு முறை வா’ என்று கிசுகிசுக்கும் குரலில் அழைத்தார்கள்.

எல்லாப் பெண்களும் மூக்குத்தி அணிந்து கூந்தலை இறக்கி வாரித் தலையில் மல்லிகையும் பிச்சிப் பூவுமாக, கண்ணில் அழுத்தமாக இட்ட கண்மையுமாக சுந்தரிகள்.

வா வா ஓர் இரவுக்கு பத்து வராகன் கொடுத்தால் போதும் என்று சிரிக்கிற அவர்கள் அதரங்களில் சிவப்புச் சாயம் அதிகமாகப் பூசி ரத்தப் பிசாசு சாயலிலும் சிலர் தென்பட்டார்கள்.

உதடுகளைச் சற்றே பிரித்து, ஒளிரும் இரு வரிசைப் பற்களும் நடுவே இடைவெளியின்றி மூடியிருக்க சற்றே குனிந்து பார்த்து எச்சில் உமிழும் காட்சி காமம் எழச் செய்வதென்று நேமிநாதனுக்குத் தோன்ற இறுகி வந்த உடல் ஆமாம் என்றது.

அவன் வலதுகைப் பக்க வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் கணிகை பாய்ந்து பற்றி இழுத்து, வாரும் வாரும் உம்  அந்தரங்கம் எல்லாம் நானறிவேன் வாரும் என்று பற்றியதை விடாமல் ஆசையோடு அழைத்தாள். அவள் அழைப்பைப் புறக்கணித்து நாளைக்கு வரேன் என்று கழன்றுகொண்டு சிரிப்போடு வந்தான் நேமிநாதன்.

ரோகிணியை இப்படி சிருங்காரமாக உமிழச் சொல்லி வாயில் முத்தமிட அவசரம் என்று உடல் இன்னொரு சந்தேசம் பிறப்பித்துச் சொன்னது. வீடெல்லாம் துப்பலாகி இருக்கும் அந்த மோக விளையாட்டுக்குப் பதில் வேறே சுத்தமான எத்தனையோ உண்டே என்று யோசித்தபடி நடந்தான்.

தெரு முனையில் நாட்டிய சாலை இருந்தது. அரை வராகன் கொடுத்து உள்ளே ஆட்டபாட்டம் பார்க்கப் போனான் நேமிநாதன். குதித்து ஆடிய பேரிளம் பெண்கள் மேல் வராகன்களை விட்டெறிந்தும் முலைக் குவட்டில்  வராகன் பொற்காசை இருத்தியும் அவர்களை கொங்கை அற்று வீழ குதியுங்கடி என்று கூச்சல் போட்டபடி தேறல் அருந்துகிறவர்களை வெளியே கொண்டு போய் விடுவதும் நிகழ்ந்தது. அலுக்கவே வெளியே வந்தான் நேமி.

இருட்டு ஆட்சி செய்யும் பிரதேசங்கள் தொடர்ந்து வர தனியாக சஞ்சரிக்க தோதுப்படாத பகுதிகளைத் தவிர்க்கலாம் என நேமிநாதன் திரும்பி நடந்தான். அரண்மனை வாசல் கதவுகள் பெரும் ஒலியோடு சார்த்திக்கொள்வதை  அப்போது தான் கவனித்தான் நேமிநாதன்.

படம் 1600களில் ஒரு நகரத் தெரு

ack wikiart.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன