நேமிநாதன், நாலு அடி நடந்தவன் திரும்ப அறைக்கு வந்து மேசை மேல் வைத்திருந்த அனுமதி இலச்சினையை எடுத்துக் குப்பாயத்தில் வைத்துக்கொண்டு நடந்தான். அவன் போய்ச் சேர்வதற்குள் போஜனசாலையில் வேலைப்பாடமைந்த சொகுசு நாற்காலியில் நீலமும், பச்சையும், சிவப்புமாக பட்டு உத்தரீயம், குப்பாயம், அரையில் மொகலாய முழு நிஜார் என்று அணிந்து காத்திருந்தார் கெலடி மன்னர் வெங்கடபதி நாயக்கர்.
அவர் கண்கள் மூடியிருக்க கை விரல்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்தன. உடல் உபாதை ஏதாவது பற்றியிருக்குமோ. நேமி பயப்பட்டான்.
”ஒன்றுமில்லை, அவர் கவிஞராயிற்றே மனதில் வரிவரியாகக் கவிதை கவனம் செய்கிறார் தெலுங்கில்”. வெங்கட லட்சுமணன் எங்கிருந்தோ வந்து நேமிநாதன் காதில் சொல்லிவிட்டுப் பூஞ்சிட்டாக ஓடி மறைந்தான்.
அவன் ஓடும்போது தரையில் வைத்திருந்த செம்பு கால் பட்டு உருள, கண் திறந்து பார்த்த வெங்கடப்ப நாயக்கர் பார்வை நேமிநாதன் மேல் விழுந்தது. சிரித்தபடி அவனை தீனிமேசையில் எதிர் நாற்காலியில் அமரச் சொல்லிக் கைகாட்டினார்.
கைகூப்பி வணங்கி அது போதாது என்று பட குனிந்து அவர் பாதம் தொட்டு வணங்கினான் நேமிநாதன். ஆயுஷ்மான் பவ என்று வாழ்த்தி அவன் தோளை இறுக்கி உட்கார்ந்தபடியே அணைத்துக் கொண்டார் நாயக்கர்.
வாரும் நேமிநாதரே, நலம் தானா? அவர் குரல் ஆகிருதிக்குப் பொருந்தாமல் சற்று கிரீச்சென்று ஒலித்ததை வெளிக்காட்டிக் கொள்ளாத வியப்புடன் கவனித்தான் நேமிநாதன். ஷேமலாபங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நேமிநாதனின் காலம் சென்ற தந்தையும் மிளகு ராணி சென்னபைரதேவியின் சகோதரனுமான பாரஸ்வநாதரும் வெங்கடப்ப நாயக்கரும் சேர்ந்துதான் இக்கரெ குருக்களிடம் மல்யுத்தமும், அங்கவெட்டும் கற்றுக் கொண்டார்களாம். அது ஒரு வருடம் மிக சிறப்பாகப் போனதாம். பிறகு சமஸ்கிருத ரூபத்தில் கஷ்டம் ஏற்பட்டதாம். கட்டாயமாக சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேணும், அதுவும் அதே இக்கரெ குருக்கள் வித்தியாலயத்தில் என்று நாயக்கரின் தந்தை மகாராஜா வற்புறுத்தினாராம். சமஸ்கிருதம் படிக்க சிரமப்பட்டு நாயக்கர் படிப்பை நிறுத்தியவர் தான், குருகுல நண்பர்களைத் தொலைத்து விட்டாராம் அப்புறம்.
ஒரு நிமிடம் பரஸ்வநாதரின் பதினைந்து வருடம் முன்பு நிகழ்ந்த மறைவுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்திய வெங்கடப்ப நாயக்கர் நேமிநாதன் தீன்மேசை முன்னிட்ட நாற்காலியில் அமர்ந்ததும் சொன்னார் – நேற்று ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது நேமிநாதரே.
என்ன அது என்று குழம்பி அவன் கண்களில் மிரட்சி தென்பட்டது. ஜெர்ஸோப்பாவில் ஏதும் விபத்து அல்லது வேறேதும் அசம்பாவிதமா?
“அதொண்ணும் பெரிய அசம்பாவிதமில்லை, சிறியதுதான். பசியாற என்ன சாப்பிடுகிறீர்கள் நேமிநாதரே?” அவர் சமையலறைப் பக்கம் நோக்கியபடி நேமிநாதனைக் கேட்டார்.
”சைவ உணவாக எது பாகம் செய்திருந்தாலும் சரிதான்” என்று வினயமாகத் தெரிவித்தான் நேமிநாதன்.
சமையலறை உள்ளிருந்து வந்த உபசாரிணிப் பெண்ணை அழைத்து தாழ்ந்த குரலில் ஏதோ தெலுங்கில் சொல்லிச் சிரித்தார் நாயக்கர். அந்தப் பெண்ணும் சிணுங்கிச் சிரித்தபடி உள்ளே போக, பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் –
“உடுப்பி-மால்பேயில் சாயம் தோய்த்து வைத்த நெசவான துணிகள் முதல் முறையாக இத்தாலிக்கு ஏற்றுமதியாகக் கப்பலில் ஏற்றப்படும் நிகழ்ச்சி நேற்று அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு, என்னை வரச்சொல்லி தரையில் விழுந்து புரண்டு வேண்டினார்கள். நம்முடைய நேமியன்றோ நீர், எனக்காக ஒரு பிற்பகலும் ராத்திரியும் காத்திருந்து நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாமா என்று நான் கோரிக்கை விடுத்தால் மாட்டேன் என்றா சொல்வீர்? அந்த நம்பிக்கையில் உம்மை இருக்கச் சொல்லி மால்பே புறப்பட்டு அரண்மனை வாயிலில் தேர் வெளியேற முற்பட்டேனா? ஏன் கேட்கிறீர், அரண்மனை புரோகிதன் நாராயண பட்டன் குறுக்கே வந்து கடந்து போனானே பார்க்கலாம். ஒற்றைப் பிராமணன் குறுக்கே போனால் என்ன ஆகும் அதுதான் ஆனது. தேர் அச்சு மாளிகை முகப்பில் கட்டுமான வேலைக்காகக் குவித்த கல்லில் பட்டு முறிந்தது. நான் உஷாராகி உடனே மால்பேக்குப் பயணத்தை ரத்து செய்தேன். பேசாமல் ஒரு உத்தரவு போடலாமா என்று பார்க்கிறேன். கெலடி தேசத்தில் பார்ப்பனர்கள் எங்கே போனாலும் ஒற்றையாகப் போகக் கூடாது, இன்னொரு பார்ப்பனர் கூடப் போக வேண்டும். தனியாகப் போக நேர்ந்த பிராமணர்கள் அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று சட்டம் இயற்றலாமா என்று கூடத் தோன்றியது. அந்தச் சட்டம் இயற்ற நல்ல நேரம் தேவை. அதைக் கணித்துச் சொல்வதற்கு அரண்மனை புரோகிதரிடம் தான் கேட்கவேண்டும் என்பதால் தடம் புரண்டு ஓடிய சிந்தனையை ஒதுக்கி வைத்தேன்”.
சொல்லி விட்டு ஓவென்று சிரித்தார் நாயக்கர். நேமிநாதனும் ஒரு வினாடி தாமதித்து அவர் நகைப்பில் கலந்து கொண்டான். சட்டென்று நகைப்பை நிறுத்தினார் நாயக்கர்.
நீர் நினைக்கலாம், அதுதான் ஒற்றைப் பார்ப்பான் போயாச்சே மீதி நேரத்தில் நேமிநாதனைச் சந்தித்திருக்கலாமே என்று. யோசித்தீர் இல்லையா, யோசித்தீர்தானே?
ஆம் என்று சொல்லிச் சிரித்தான் நேமிநாதன். இவ்வளவு கலகலவென்று எதற்கும் சிரித்து சூழ்நிலை இறுக்கம் தவிர்த்துத்தான் விஜயநகரத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட குறுநில அரசுகளில் பிரபலமானவராக இருக்கிறார் வெங்கடப்ப நாயக்கர் என்று நினைத்தான் அவன்.
நேமிநாதரே, நேற்று என் அதிர்ஷ்டம் குறைவான தினம். நீர் இளசு. பெரிய பெரிய திட்டங்களோடு எதிர்காலத்தை ஒளிமயமாக்க முனைப்போடு வந்திருக்கலாம் நீர். அதை நல்ல நாள் பார்த்து, ஆலோசனை சொல்ல வேண்டிய மூத்தவனான நான் சகல அதிர்ஷ்டத்தையும் உமக்குக் கடத்தி நல்லபடி எல்லாம் நடக்க வாழ்த்த ஒரு பகலும் ஒரு இரவும் உம்மைச் சந்திக்காமல் தள்ளிப் போட்டேன். தவறு என்றால் மன்னிக்கணும் பிள்ளாய்.
ஐயோ ஒரு தப்பும் இல்லை என்று நேமிநாதன் அவசரமாக நாயக்கரோடு சேர்ந்து சந்தோஷமாகக் கட்சி கட்டினான். இறுக்கம் தளர்ந்த சூழ்நிலை பசியைத் தூண்டுவதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை
pic Good omens -Medieval Times
Ack uab.edu