ஆக இந்த கார்டெல் ஜீவனோட இருந்தா இதெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். போர்த்துகல்லுக்கு ஒரு அரசர் இருக்கார். ஒரு அரசவை இருக்கு. அவர்கள் ஒரு கையசைத்தால் கார்டல் இருந்த இடம் தெரியாமல் போயிடலாம். அப்புறம் எதை நம்பி நாம ஆற்றிலே இறங்கறதாம்? யோசிச்சுப் பாரு நேமி. நான் சொல்றது தப்பா?
இல்லையென்று தலையாட்டினான் நேமிநாதன். எது சரி என்றுதான் தெரியவில்லை அவனுக்கு.
அது இருக்கட்டும். நூறு வருஷமா கார்டெல் வேறே வேறே ரூபங்கள்லே செயல்பட்டு வருது. ஆனா இதுவரை இங்கே ஒரு சமஸ்தானத்து அரசரை, அரசியை பதவி விலக்க அறிவில்லாத அறமில்லாத வழிமுறைகளைக் கையாண்டதில்லே. சொல்லு வைதீக மதம், சமணம், இப்படி பெரிய மதங்கள், கிறித்துவம், இஸ்லாம் இப்படி இங்கே இன்னும் வேர் ஊன்றாத மதங்கள் இதிலே ஏதாவது ஒண்ணுலே இருந்துக்கிட்டு அவனவன் எந்த புகாரும் இல்லாமல் நிம்மதியா வாழ்கிறான். வைதீகம் சமணம் சண்டை, சமணம் பௌத்தம் தகராறு, வைதீக மதம் இஸ்லாம் அடிதடி இப்படி ஆரம்பிச்சா அதுக்கு தூண்டுகோலாக இருந்தா, அந்த பூதத்தை போத்தல்லே இருந்து இப்போ திறந்து விட்டு எப்படி அதை திரும்ப அடைக்கப்போறோம்? இது இன்னும் நூறு நூறு வருஷமா மோதல், சாவு, அடிதடி இப்படியே போய் மனுஷ குலத்துக்கே நாசம் ஏற்படுத்தி விடும். மேற்குலே அப்பப்போ சிலுவை யுத்தம் வர்ற மாதிரி, ஆனா அதிகம் உக்ரமா இருக்கும். நீ மிளகுராஜா ஆக மனுஷ குலம் நசிக்கணுமா சொல்லு நேமிநாதா.
வெங்கடப்ப நாயக்கர் மேலே வழிந்த வியர்வையை உத்தரீயம் கொண்டுவரச் சொல்லித் துடைத்துக் கொண்டார். குடிக்க குளிர்ந்த தண்ணீர் கேட்டு கூஜாவில் வாங்கி கடகடவென்று தொண்டையில் சத்தம் ஒலிக்கக் குடித்து கூஜாவை மடியில் இருத்திக் கொண்டார். மழை பெய்து ஓய்ந்த மாதிரி ஒரு அஞ்சு நிமிஷம். தம்பிக்கு பழக்கூழ் எடுத்து வந்து கொடு என்று பிரத்யட்சமாகாத யாருக்கோ உத்தரவு பிறப்பிக்க, நேமிநாதன் வேண்டாம் என்று சொல்வதற்குள் மா, பலா, கனிந்த வாழை, ஆரஞ்சு, கிச்சிலி என்று எல்லாப் பழமும் சின்னச் சின்னத் துண்டுகளாக அரிந்து போட்டு தில்லியில் இருந்து வரவழைத்த முகலாய பாணி ஷர்பத் நனைக்க விட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு பெண். கெலடி நகர்ப் பெண்கள் எல்லாரும் அழகானவர்கள் என்று நேமிநாதனுக்குத் தோன்றியது. அவன் பார்வை போகிற திசை பார்த்து நாயக்கரும் புன்சிரித்து அதை ஆமோதித்தார்.
நேமி, இந்த கார்டல் விநோதம் என்னிடம் தானே முதலில் சொல்கிறாய்? நல்லதாகப் போச்சு. அதில் பலவீனம் பலம் எல்லாம் நான் சொல்லி சரி பண்ணிக்க வைக்க முடியும். அது இல்லையா ஒரு வேளை வேறு யாரிடமோ. அப்பக்கா புருஷன் வீரு போல் புத்திசாலி அரசர்களிடம் கலந்தாலோசித்திருந்தால். வாக்கியத்தை முடிக்காமல் சிரிக்கத் தொடங்கினார் வெங்கடபதி நாயக்கர். அடுத்த மழை ஆரம்பமானது.
மன்னிக்கணும் மாமா, மாமா எப்போதும் நிர்வாக மும்முரத்தில் இருப்பதால் ஒரு அளவு கார்ட்டெல் திட்டம் உருவாகி வரட்டும் அப்போது மாமா நேரத்தை வீணாக்காமல் என்ன திட்டம், எப்படி நடக்கிறது, என்ன வேண்டும் என்று நீங்கள் பேசுவது போல் இல்லாவிட்டாலும் அதில் கொஞ்சம்போலவாவது நேர்த்தியாகப் பேசலாமே என்று நினைத்தேன். ஆகவே போன வாரம் பில்ஜி அரசர் திம்மராஜு அண்ணாவிடம் இதைப் பற்றிக் கொஞ்சம் போல்.
நேமிநாதன் முடிப்பதற்குள், யாரங்கே, எனக்கும் பழக்கூழ் எடுத்து வா என்று சத்தமாகச் சொன்னார்.
சந்தன நறுமணமும் மை எழுதிய பெரிய விழிகளும் நீளக் கருங்கூந்தலுமாக தனக்கு பழக்கூழ் கொண்டு வந்தவளை எதிர்பார்த்திருக்க, உயரமான ஆப்பிரிக்க காவலன் பழத்தோடு வந்தான். அவன் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டது அறிந்தவர்போல் இன்னொரு முறை பலமாகச் சிரித்தார் வெங்கடபதி நாயக்கர்.
நான் தவறு செய்துவிட்டேன். மன்னிக்கணும் மாமா. உங்களிடம் கலந்தாலோசனை செய்ய முதலில் வந்திருக்கணும். மன்னிக்கணும். நேமிநாதன் மன்றாடினான். வெங்கடபதி நாயக்கர் நரை பாய்ந்த மீசையை நீவியபடி அவனைக் கூர்மையாகப் பார்த்தார். மறுபடி தப்பு செஞ்சிட்டிருக்கே மருமகனே. பில்ஜி திம்மப்பாவை நீ முதல்லே பார்த்தது தப்புன்னு நான் சொன்னேனா? நீயா சூழ்நிலையை தவறுதலாக புரிஞ்சுக்கிட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இது அரசியல் பாலபாடம் மருமகனே.
அவன் கைகூப்பி வெங்கடப்ப நாயக்கரை வணங்கினான். திம்மப்பாவும் நானும் நகமும் சதையும் போல். அவன் கிட்டே பேசினால் எங்கிட்டே பேசிய மாதிரி. அது இருக்கட்டும் உனக்குத் தெரியுமோ திம்மப்பாவுக்கு பிரான்ஸ் சிவப்பு ஒயின் பொண்டாட்டி மாதிரி. ரொம்பப் பிடிக்கும். சமயத்துலே ரொம்ப வெறுப்பான். இல்லாமல் முடியாது. அவ்வளவு பிரியம். உங்க அப்பக்கா சித்திக்கு சமண சாமியார்களை அழைக்கச் செய்து பிரசங்கம் செய்ய வச்சு அவங்க காலைத் தொட்டு கும்புடறது மற்றும் குழிப்பணியாரத்திலே ஆசை அதிகம். உன் அம்மா சென்னாவுக்கு ரொம்ப பிடிச்சது நீதான். உசிரையே வச்சிருக்கா உன் மேலே. இப்படி பிச்சுக்கிட்டு கிளம்பிட்டியேப்பா.
அவர் குரல் கரகரத்தது. நேமிநாதன் அதிர்ந்து போனான். பேச்சு போக வேண்டியதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்கிறது என்று புரிகிறது. குறுக்கிட்டால் புரிதல் தப்பு என்று தள்ளிவிடுவார். பொறுத்திருந்தே பார்க்கலாம் என்று முடிவு செய்தான் நேமிநாதன்.
Middle Ages Travel
ack nytimes.com