This is an excerpt from பெரு நாவல் ’மிளகு’ – A morning in Honnavar Agrahara 1606 AD

 

ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஆண்கள் யாரும் தட்டுப்படாத காலை நேரம் அது.

பிறந்து மருத்துவச்சி கையில் விழுந்த சிசுவுக்கு  காலுக்கு நடுவே குஞ்சாமணி தட்டுப்பட்டால், சுபஸ்ய சீக்கிரம் என்றபடி, கூடிய சீக்கிரம் சுபமுகூர்த்தத்தில் காது குத்தல், நாமகரணம், சோறூண், அப்புறம் பூணூல் கல்யாணம்.

முப்புரி நூல் அணிந்த பய்யன்கள் வேத அத்தியாயனம் செய்து கொண்டிருக்கும்போதே வாழ்க்கைக்கு அவசியமான மந்திரங்களை ஓதப் பயிற்சியோடு, சடங்குகளை நிறைவேற்றித் தரவும் பயிற்சி அளிக்கப்படுவர்.

உதாரணமாக காதுகுத்தலையே எடுத்துக் கொள்ளலாம். எளிமையான சடங்கு, சின்னக் குழந்தையோடு பெற்றோர் வந்து உட்கார்ந்தால் பத்து நிமிஷத்தில் மங்கலகரமாக நிறைவேறிவிடும் என்று தோன்றலாம். அப்படி இல்லை.

குட்டி வாத்தியாருக்கு, என்றால் சாஸ்திரம் படிக்கும் சாஸ்திரிப் பையனுக்கு, பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். நாள், நட்சத்திரம், திதி இவற்றோடு, ’ஆத்துக்காரி ஆத்துலே இருக்க மாட்டா’, என்றால் மாதவிலக்கு நாட்கள், எல்லாம் கருத்தில் கொண்டு சுபநிகழ்ச்சிக்கு நாளும், நேரமும் தீர்மானித்து அறிவிக்க வேண்டும்.

கிரஹஸ்தன் என்ன எல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மஞ்சள் முதல் தேன் வரை பட்டியல் ஒப்பித்து, எழுதுவித்துத் தர வேண்டும். குறிப்பிட்ட நாளில், பவித்ரம், வீபுதி மட்டை, கூடுதல் பூணூல், சில சமயம் பஞ்சகவ்யம் சகிதம் கிரஹஸ்தனின் இல்லத்தில் வந்து சேரணும். குழந்தைக்கு காது குத்து ஆகவே முக்கிய பிரஜை அந்தக் குழந்தைதான். குழந்தையாச்சா, அது இன்னும் எழுந்திருந்திருக்காது. அல்லது தொட்டிலில் சிறுநீர் கழித்து உடம்பு மினுமினுக்கக் கிடந்து சிரிக்கக் கூடும்.

வாத்தியாரையும் வைத்தியரையும் பார்த்து சிரிக்கும் சிசுக்கள் ரொம்ப அபூர்வம். கூடவே வந்த தன் சொந்த தாயார், தகப்பனாரை அடையாளம் கண்டு அந்தச் சிரிப்பு.

குழந்தைக்கு வென்னீரில் வெதுவெதுவென்று நாலு சொம்பு ஊற்றி குளியல். புத்தாடை அணிவித்தல் எல்லாம் கழித்து அப்பா அம்மா அருகருகே உட்கார பின்னால் மற்றவர்கள் நிற்க பூ மாலையோடு குழந்தையை தாய்மாமன் மடியில் இருத்துவதற்குள் இன்னொரு  வாத்தியார் துணையோடு,  அவர் கிரஹஸ்தராக இருந்தால் விசேஷம், கணபதி ஹோமம் செய்து முடித்து விட வேண்டும்.

சமையலறையில் பாயசமோ வேறே எதுவோ செய்ய வேண்டும் என்றால் செய்து வைத்திருக்க உள்ளே வரும்போதே நினைவூட்ட வேண்டும். ஆயுஷ்ஹோமம் என்று சிசுவின் ஆரோக்கியத்துக்கும் தீர்க்க ஆயுளுக்கும் வேண்டி இன்னொரு வாத்தியாரோடு ஹோமம் வளர்க்க வைத்து மந்திரம் எல்லாம், எதுவும் தவறாமல் சொல்லி நாமகரணம் அறிவிக்க வேண்டும்.

குழந்தைக்கு  உறவில் ஆளுக்கொரு நாமம் சூட்ட எல்லாவற்றையும் உரக்கச் சொல்லி வாழ்த்தி அடுத்த  பெயரை செவியோர்க்க வேண்டும்.

அது முடிந்து நகையாசாரி வரக் காத்திருக்க வேண்டும். குழந்தை காதில் துளைத்து, அது பரிதாபமாக அழுதபடி கையில் பிடித்த லட்டு உருண்டையில் கண்ணீர் விழுந்திருக்க அம்மா மடியில் படுத்துக் கொள்ள, அப்படியே உறங்கி இருக்க, மீதி மந்திரங்கள் சொல்லி முடிக்க வேண்டும்.

உறவினர்கள் பட்டுத்துணி, கிண்டியில் இருந்து கால் பவுனில் மோதிரம், மரப்பாச்சி பொம்மை வரை அன்பளிக்க, ஒவ்வொன்றையும் ஆயிரம் கட்டி வராகன் என்று பெருமதிப்பாக்கி மந்திரம் சொல்லி, விழித்திருந்தால், குழந்தை கையில் கொடுத்து வாங்கக் காத்திருந்து ஆரத்தி எடுக்கச் சொல்லி அதுவும் முடிந்து ’ரொம்ப சந்தோஷம்’ அறிவித்து சம்பாவனை வாங்கிப் புறப்பட வேண்டும்.

இருப்பதிலேயே குறைவான சடங்கு சம்பிரதாயம் கொண்ட சிசுவுக்கு நாமகரணம், பெயர் சூட்டலுக்கு இந்த கிரமம் என்றால், கல்யாணத்துக்கெல்லாம் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கும். இது ஜீவனோபாயத்துக்கான மந்திரங்களை மனனம் செய்திருந்தாலே கிரமமாக நடைபெறும்.

pic medieval  office in India

ack nytimes.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன