பெரு நாவல் ‘மிளகு’ – Gerusoppa expects an imminent war while Honnavar does not forecast it

ஆக ஹொன்னாவரிலே யுத்தம் வர்றதப் பற்றி அவ்வளவா கவலைப்பட்டுக்கலே. ஜெரொஸுப்பாவிலே நிலைமை எப்படி?

யுத்தம் கட்டாயம் இன்னும் ரெண்டு மாசத்திலே வந்துடும்னு நம்பறா அவா. தெருவிலே காய்கறி விக்கறவன், வீடு கூட்டற பெண், கல்லை உடைச்சு கட்டடம் கட்டறவா, தெருவிலே புட்டும் கடலை சுண்டலும் விக்கறவா, சர்க்கார் உத்தியோகஸ்தன் இப்படி சாமான்ய ஜனங்கள் சண்டை வரும்னு எதிர்பார்க்கறா.

அவா எல்லாம் ஸ்வாமிக்கு பயந்தவா. ஆனா கோவில், பசதின்னு செலவு பண்ணி மத்தபடி ஊரை கவனிக்காம விட்டதா ராணியம்மா மேலே கோபம்.

சண்டை வரட்டும் நியாயம் ஜெயிக்கட்டும்கிறா அவா எல்லாரும். கடந்த நாலு மாசமா அவா எல்லாம் சொத்தை எல்லாம் தங்கமா மாத்தி எடுத்துண்டு போய் உடுப்பி, உள்ளால், மங்கலாபுரத்துலே பத்திரமா வச்சுட்டா. வீட்டை என்ன பண்றது? அதை எடுத்துண்டா போக முடியும்? அப்புறம் ஒண்ணு. நம்ப மாட்டேள்.

சொன்னாத்தானே நம்பறதும் மத்ததும் பார்க்கலாம் ராயரண்ணா?

ஒரு வேளை யுத்தத்திலே தோற்றுப் போய் வெளியூருக்கு குடிபெயர வேண்டி வந்தா வரலாம். அப்போ ஜெயிச்ச படைகள் வீடு வீடாகத் தேடிப்போய் காசு பணம் விலையுயர்ந்த பொருள் எதாவது இருக்கான்னு கொள்ளையடிக்கப் போவா. வீடு நன்னா இருந்தா அவனவன் அங்கேயே குடியிருப்பை மாத்திக்கக் கூடும். ஜெருஸோப்பா வீடு எல்லாம் களிமண் பூமிங்கறதாலே  சோறு வட்டையிலே வார்த்த மாதிரி ஒண்ணுக்கும் மத்ததுக்கும் வித்தியாசமே தெரியாது. ரொம்ப எளிசான கட்டிடம் எல்லாம். இருந்தாலும் விரோதி குடிபுகாம இருக்கணுமே.

அதுக்கு என்ன பண்றாளாம்?

அதுக்கு கொத்தனாரை விட்டு அங்கே இங்கேன்னு இடிச்சு வெளியிலே தெருவிலே இருந்து பார்த்தா, முழுசா இடிஞ்ச கட்டிடமா எல்லா வீடும் தெரியும். உள்ளே மரம், கதவு எல்லாம் அப்படியே வச்சு இல்லே எடுத்து அடுக்கி வச்சுட்டு, பேய் மிளகு கொடியை சுத்தி பயிர்பண்ணிட்டா அப்புறம் உள்ளே யாரும் போக மாட்டா.

இன்னும் புரியலே இது அண்ணா

நல்ல காலம் திரும்பி சென்னபைரதேவி ஆட்சி திரும்ப வந்தா ஜெருஸொப்பா ஜனக்கூட்டமும் ஊர் திரும்பும், வீடு திரும்பும். குறைந்த பட்ச மராமத்து செய்து பேய் மிளகை எடுத்து போட்டுட்டா வசிக்க தகுதியாகிடும் வீடெல்லாம். அல்லது அதுக்குள்ளே பேய்மிளகு சாத்வீகமான பயிராகி இருக்கும் அதுக்கு எதிர்மறை மருந்து கண்டு பிடிச்சிருப்பா. அல்லது வெட்டிப்போட்டு காரை பூசி தரைக்குக் கீழே புதைச்சிருப்பா, இப்படி ஊரோடு அபிப்ராயமாம். இப்போதைக்கு பேய் மிளகுல்லேருந்து ரசாயனம் எடுத்து எலி பாஷாணம் பண்ணினா அதை முழுங்கின எலி எல்லாம் தானே கழுத்தை நெறிஞ்சுண்டு பரலோகம் போயிடுமாம்

என்ன மூஷிக ஸ்வர்க்கமோ! அது கிடக்கட்டும். கோவில், பசதி, பஜனை மடம் இப்படி பொதுக் கட்டடங்களைக்கூட கிரமமா இடிக்க திட்டம் எல்லாம் கொத்தனாரை வச்சு பூர்த்தி பண்ணியாகிறதாம்.

யுத்தம் மட்டும் தான் வருமா, வந்தா யாருக்கும் யாருக்கும்னு நிச்சயமா தெரியலெ.

கட்டற கொத்தனார் எல்லாரும் முதல்லே இடிக்க மாட்டேன்னாளாம். என் கையாலே கட்டி என்கையாலேயே இடிக்க மாட்டேன்னு கண்ணீர் விட்டு அழுகையாம். காசு கூடக் கொடுக்கறேன்னதும் பார்க்கலாம்னு சமாதானமானதா கேள்வி. இப்பவே கொத்தனாருக்கெல்லாம் வீட்டை இடிக்க வரச் சொல்லி நிறைய வேண்டுகோளாம். இருபது வராகன் தரும் வேலைக்கு நூறு வராகன் தர தயாராம் ஊர் ஜனங்கள். கிருஷ்ணராயர் சொன்னார்.

கட்டறதுக்கு செலவை விட இடிக்கறதுக்கு அதிக செலவு பிடிக்கும். ராமராயர் சொல்லும்போதே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

அதானே, ஒரு பணம் கொடுத்து கட்டு. ஒம்பது பணம் கொடுத்து வெட்டு.

இரண்டு வைதீகர்களும் ஒரே நேரத்தில் சிரித்துக்கொண்டிருக்க, ராமராயரை சிவராம பட்டர் கேட்டார் –

ஹொன்னாவர் அக்ரஹாரத்திலே நாம் என்ன பண்ணப் போறோம்? அக்ரஹாரம் இருக்கட்டும், நீர் என்ன பண்ணப் போறீர்?

ராமராயர் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து ஒரு காய்ந்த வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். வெற்றிலையா இது, பேய் மிளகு மாதிரின்னா இருக்கு என்று ஆச்சரியப்பட்டார்.

எழுந்து வேஷ்டியை இன்னொரு முறை கிட்டத்தட்ட அவிழ்த்தே கட்டி கச்சத்தை முடிந்தபடி சொன்னார் –  வரும் வியாழக்கிழமை, கோட்டை கார்யஸ்தன் சுப்பு சஷ்டியப்த பூர்த்தி. நடத்திக் கொடுத்திட்டு, திருப்தியா போஜனம் செஞ்சுண்டு, சிரம பரிகாரம் பண்ணிண்டு, யோசிக்கலாம்.

படம் பழங்காலக் கடை
நன்றி – en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன