பெரு நாவல் ‘மிளகு’ – Pepper Queen commences negotiations on diplomatic help, with Portugal ambassador

பெத்ரோ பிரபு மிர்ஜான் கோட்டை வாசலுக்கு வந்தபோது எந்தப் பரபரப்பும் இல்லாமல் அந்தப் பெருவெளி இருந்தது.

திட்டிவாசலைத் திறந்து யார் வந்திருப்பது என்று பார்க்கும் பெரிய மீசை வைத்த காவலாளி இல்லை. இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தியை உள்ளே தெரிவிக்க கோட்டை அலுவலகத்துக்கு ஓடும் வீரன் இல்லை. என்றாலும் கோட்டைக் கதவுகள் சார்த்தியிருந்தன.

சிக்கன நடவடிக்கையாக கோட்டை ஊழியர்கள் சிலருக்கு அரை ஊதியத்தில் விடுமுறை கொடுத்து வீட்டுக்குத் தற்காலிகமாக அனுப்பியிருப்பதாகக் கேட்ட வதந்தி பெத்ரோவுக்கு நினைவு வந்தது. கருவூலப் பணம் இருப்பு குறைந்திருப்பதாகக் கேட்டது நிஜமாக இல்லாதிருக்கலாம்.

ஓஓஓ என்று யாரோ கோட்டையை அணைத்து எழுந்த கொத்தளத்தில் இருந்து ஒலி எழுப்பியதுபோல் கேட்டது பெத்ரோவுக்கு. நிமிர்ந்து பார்த்தார். அங்கே சாதாரணமாக முரசு அறைவோர் இருப்பார்கள். வாசலில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளே வருகிறார் ஒரு வெளியார் என்று கோட்டையில் இருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்ல அந்த முரசு முழங்கும். வந்தவருக்கு மரியாதை செலுத்தும் முறையும் அதுவாகவே இருக்கும்.

இன்றைக்கு முரசு மேடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. ஓவென்று குரல் எழுப்பியது யாராக இருக்கும்? பெத்ரோ பார்த்துக் கொண்டிருந்தபோது அரண்மனை வைத்தியர் பைத்யநாத் உள்ளிருந்து வந்து ஓஓஓ என்று கையைக் குவித்து வாயருகில் வைத்துப் பெரும் பறவை கூவுவதுபோல் ஒலி எழுப்பினார்.

உள்ளே இருந்து சேடிப் பெண்டிர் இருவர் வந்து பார்த்துவிட்டு நின்றார்கள். வைத்தியர் பெத்ரோவின் நான்கு குதிரை சாரட்டைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்ல அந்தப் பெண்கள் உள்ளே ஓடினார்கள். உடன் திரும்பி வந்து அவரிடம் ஏதோ தெரிவித்துப் போனார்கள்.

வைத்தியர் கொத்தளத்தில் நின்றபடி பெத்ரோவின் கவனத்தைக் கவர, கணேச கௌஸ்துபம் ஆடுவதற்கு வெகு அருகில் வரும் அடவுகளை, அடுத்தடுத்து அபிநயித்தார். பெத்ரோ கையசைத்துத்துத் தான் கவனிப்பதாகப் புரியவைத்தார். வைத்தியர் ஒரு வினாடி உறைந்து நின்று இரு கரமும் உள்ளும் வெளியும் கவாத்து செய்கிறதுபோல் சமிக்ஞை காட்டி அடக்கமாகச் சற்று குனிந்து அங்கிருந்தபடியே பெத்ரோவை வணங்கினார். பெத்ரோவுக்கு ஆட்டபாட்டத்தோடு அனுமதி கிடைத்திருக்கிறது உள்ளே வர.

சாரட்டை விட்டு இறங்கி கோட்டை வளாகத்தின் ஈசான்ய மூலையில் காத்திருக்குமாறு அனுப்பிவிட்டு கோட்டை வாசல்களை நோக்கி நடக்க ஆரம்பித்தார் பெத்ரோ.

வெளிமண்டபத்தில் போட்டு வைத்திருந்த குரிச்சிகள் வரிசை குலைந்து இருப்பதைப் பார்க்க ஏனோ மனதுக்கு வருத்தமாக இருந்தது பெத்ரோவுக்கு. அந்த பிரம்பு நாற்காலிகளின் மேல் மெல்லிய தூசிப் பூச்சு காணப்பட்டதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

வெளிமண்டபம் முழுவதும், உள்மதிலுக்கு அருகே தோட்டத்தில் பிரம்மாண்டமாக வேர்விட்டு நின்றிருந்த ஆலமரத்தின் உதிர்ந்த இலைகள் காற்றில் அடித்து வரப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றும் ஒதுங்கி உலர்ந்து கிடந்தன. அவை மண்டபத்துக்கு கூடுதல் சோபை  அளித்தன.

கோட்டை அலுவலகர்கள் பெரும்பாலும் அவர்கள் அளவில் கொண்டு வரப்பட்ட விஷயத்தில் தீர்வு சொல்லி அனுப்புவது வெளிமண்டபத்தில் வைத்துதான். உள்மண்டப சந்திப்பு ஏதாவது தரப்பட்ட நேரம் கடந்து நீளும்போது, அடுத்த சந்திப்புக்காக வந்து சேர்ந்தவர்களை இருக்க  வைப்பதும் வெளிமண்டபத்தில் தான்.

தீபங்களும் லாந்தர்களும் ஒளியூட்ட அநேக முறை பெத்ரோ கலந்து கொண்ட நேர்காணல் சந்திப்புகள் மாலை மங்கி இரவாகும்போதும் நடந்து கொண்டிருப்பது வாடிக்கை. வெளிமண்டபத்திற்கு அவ்வப்போது உள்ளே இருந்து வந்து அற்பசங்கை தீர்க்க, குவளையில் எடுத்துப் பானைத் தண்ணீர் குடிக்க என்று ஐந்து நிமிடம் ஈடுபட்டு, மறுபடி உள்ளே போவதும் வாடிக்கை.

அந்த வெளிமண்டபம் இப்படி சோபை இழந்து காணப்பட்டதில்லை இதுவரை. பெத்ரோ வெளிமண்டபத்தின் வழியே நிதானமாக நடந்து உள்ளே போனார். கதவுகளும் ஜன்னல்களும் பாதுகாப்பு கருதியோ என்னவோ அடைத்து வைத்திருந்ததால் பகல் நேர பகுதி இருட்டும் அந்த இருட்டுக்கே உரிய புழுக்கமான வாடையுமாக வெளி, உள் மண்டபங்கள் குமைந்துகொண்டிருந்தன.

உள் மண்டபத்தில் இருந்து ராணியம்மாளின் அலுவலகமும் அங்கிருந்து கோட்டை அலுவலகங்களுக்குப் போகும் பாதையும். ராணியம்மாவின் தங்குமிடமான கோட்டை அரண்மனைக்கு நீளும் தோட்ட வீதியும் ஆள் நடமாட்டம் சிறிதுமின்றிக் கிடந்தன.

வழியில் ஓரமாக இருட்டில் நின்ற சின்ன பூனையின் கண்கள் இருட்டில் ஒளிர நீண்ட பற்கள் பெத்ரோவுக்குப் பயமுண்டாக்கின. அவர் தயங்கி நிற்க, வாருங்கள் என்று உள்ளிருந்து அழைப்பு.

ஜன்னல்களைத் திறக்கச் சொல்லி கூட நின்ற சிப்பந்திக்குக் கட்டளையிட்டபடி ஆசனத்தில் அமர்ந்து, பெத்ரோவையும் பக்கத்து நாற்காலியில் இருக்கச் சொன்னவர் நஞ்சுண்டையா பிரதானி. தலையில் குல்லா தரிக்காததால் யாரென்று அடையாளம் காண சற்றே சிரமப்பட்டார் பெத்ரோ.  தொப்பி தரிக்காத போர்த்துகல் மன்னர் போல வழுக்கை ஓடிய தலையோடு வித்தியாசமாகத் தெரிந்தார் நஞ்சுண்டையா.

நலம் விசாரிப்பு வழக்கம்போல் நடந்தேறியது. ஒரே தெருவில் அடுத்தடுத்த மாளிகைகளில் வசித்தாலும் இப்படி எப்போதாவது சந்திக்கிற அளவு நகர வாழ்க்கை பரபரப்பானதாக இருப்பதாக எப்போதும் மொழியப்படும் அங்கலாய்ப்புகள் வந்து போயின.

உள்கதவு திறக்க மகாராணியின் தாதி உள்ளே வந்து பெத்ரோ பிரபு மிளகு ராணியை சந்திக்கலாம் என்றாள்.

 

ack diplomacy.edu

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன