பெரு நாவல் ‘மிளகு’ – Making the Portugal ambassador feel at home, as part of the détente

Excerpts from the forthcoming novel MiLAGU

உள்கதவு திறக்க மகாராணியின் தாதி உள்ளே வந்து பெத்ரோ பிரபு மிளகு ராணியை சந்திக்கலாம் என்றாள். நன்றி சொல்லி பெத்ரோ நஞ்சுண்டையாவை நோக்கினார். மொழிபெயர்ப்பாளராக துபாஷி பணி செய்ய அவர் இல்லாமல் கொங்கணி பேசும் சென்னபைரதேவி மகாராணியும் போர்த்துகீஸ் மொழி பேசும் இமாலுவேல் பெத்ரோவும் நேர்காணலோ, ஆலோசனையோ, பேச்சு வார்த்தையோ நடத்த முடியாதே.

நஞ்சுண்டையா குனிந்து பெத்ரோ காதில் சொன்னார் –

நீங்கள் கடந்த ஐந்து ஆண்டில் கொங்கணியில் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டீர்கள். எங்கள் போர்த்துகீஸ் மொழியறிவு தான் கொஞ்சம் குறைவு. அதை ஈடு செய்ய ராணியம்மா போர்த்துகீஸ் மொழியிலேயே பேச முயல்வார். பிரபு, நீங்கள் சற்று வேகம் தவிர்த்து மெல்லப் பேசினால் நல்லது.

நிச்சயமாக என்றார் பெருமகிழ்வோடு பெத்ரோ.

ராணி சிரித்தபடி தயங்கினால் வேறு எளிய சொற்களைப் பயன்படுத்தி பேச்சு தடம் மாறாமல் நேர்கோட்டில் பயணம் செய்ய முன்கை எடுக்கக் கோருகிறேன் என்றார் பின்னும் நஞ்சுண்டையா பிரதானி சிரித்தபடி.

முயற்சி செய்கிறேன் சென்ஹர் நஞ்சுண்டய்யா. நீங்கள் இல்லாமல் எப்படி நடக்குமோ என்று விசனத்தைக் களைகின்றேன்.

கவலைப்படாதீர்கள், சமாளிக்க முடியாமல் போனால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக நான் இங்கேயே இருப்பேன் என்றார் பிரதானி.

பெத்ரோ வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே போக முற்பட, அவரைக் கையைக் காட்டி ஒரு வினாடி நிறுத்தினார் நஞ்சுண்டய்யா.

பிரபு, தங்கள் காலணிகளை கதவருகில் விட்டுச் சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.

ஓ மறந்துவிட்டேன் என்று கூறியபடி காலில் கையை வைத்து நடனமாடுகிற மாதிரி காலணிகளைக் களைய முற்பட்டார். ஒரு வினாடி கீழே விழுகிறது போல தள்ளாட, நஞ்சுண்டய்யா அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

உள்ளே இருந்து சிரிப்பு சத்தம்.

பெத்ரோ பிரபு ஆடிப் பாடி இந்த சந்திப்புக்கு வர உத்தேசித்தது போல் தெரிகிறது. அப்படித்தானே? என்னால் ஆட முடியாது. வயதாகிவிட்டது.

சிரித்தபடி அரசி தாம் அமரும் சிறப்பு ஆசனத்தில் இருந்து எழுந்து நிற்க பெத்ரோ இருகரமும்  சேர்த்துக் கூப்பி வணங்கினார். சென்னபைரதேவி மகாராணியோ ஐரோப்பிய பாணியில் வலதுகையை நீட்டி பெத்ரோவோடு அன்போடு கைகுலுக்கினார்.

பெத்ரோவுக்கு முன்னொரு பொழுதில் மகாராணி அவருக்குக் கைகொடுத்து விட்டு உடனே கை அலம்பிக் கொண்டது நினைவு வந்தது. இப்போதும் கைகழுவத் தண்ணீரோடு சேடிப்பெண் அல்லது தாதியோ வரலாம் என்று எதிர்பார்த்திருக்க யாரும் வரக்காணோம்.

சூழல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், கலாசார சமன்பாடுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. பெத்ரோ ஐந்து வருடம் முன்பு மிளகு ராணி சென்னபைரதேவி என்று சொல்லக்கேட்டு பிரமிப்பும், வியப்பும், மனதில் படபடப்புமாக முதல் தடவையாக மிர்ஜான் கோட்டையில், தன்னை போர்த்துகீஸ் அரசர் விவேகன் பிலிப் அரசப் பிரதிநிதியாக நியமித்து எழு,திய கடிதத்தைக் கொடுத்தபோது அவருடைய கரங்கள் நடுங்கியது நினைவு வந்தது.

மூச்சு பேச்சு நீங்கி தரையில் கிடத்தி விடுமோ மேனி நடுக்கமும், தலை சுற்றுதலுமாக உடல் நிலை என்று பயம் உண்மையிலேயே ஏற்பட்ட நேரம் அது. போர்த்துகல் அரசின் வருடாந்திர செலவில் கணிசமான தொகையை ஏற்றுமதி வருமானமாகத் தொடர்ந்து பெற்று வரும் மெலிந்த இந்துஸ்தானத்துப் பெண்மணியாக மிளகு ராணியைச் சந்தித்ததில் ஏற்பட்ட வியப்பை விவரிக்க அவரிடம் வார்த்தையில்லை. .

அதற்கப்புறம் மிளகு விலை நிர்ணயித்தல் பற்றிக் கறாராக மகாராணி பேசிய பல நேர்காணல்கள், யாருக்கு எவ்வளவு லாபம் என்று தெளிவாகத் தெரிந்து செய்தி பகிர்ந்து உரையாடும் திறமை, அபாரமான நகைச்சுவை ரசனை, வாசிப்பு ரசனை என்றெல்லாம் பெத்ரோவை ஆச்சரியப்படுத்தியவள் சென்னா மகாராணி.

ஆற்றலும் அதைக் கொண்டாடும் பாங்கும் இரண்டு பக்கமும் உண்டு. வியந்து கரகோஷம் செய்து வணங்கி வானம் நோக்கி வியப்பைப் பகிர்தல் மட்டும் இல்லை. சென்னா என்ற மனிதப் பிறவி பற்றி, சொந்த வாழ்க்கையில் சுகப்படாத, தேசம் தேசம் என்று மிளகு மூட்டையை மனதில் எப்போதும் சுமந்து விற்று அதிகக் காசு வரவழைத்து வருமானத்தை அதிகப்படுத்துவதிலேயே கண்ணாக இருக்கும் மூதாட்டி மேல் பரிவும் அனுதாபமும் பெத்ரோ மனதில் இப்போது மேலெழுகின்றன.

வாருங்கள் பெத்ரோ நான் இன்றைக்கு முழுக்க போர்த்துகீசில் தான் உங்களோடு உரையாடப் போகிறேன். உங்களுக்கு விரோதம் ஏதுமில்லையே

யுவர் எக்ஸலென்ஸி, நீங்கள் எம் மொழியில் இந்த சந்திப்பில் பேசப் போகிறீர்கள் என்பது எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும். உங்கள் பேச்சு மிக அருமையாக, லிஸ்பனில் மகாராணி மற்றும் மகாராஜா ஆகியோரின் மேட்டுக்குடி அரச உச்சரிப்பு கொண்டுள்ளது. நன்றி மகாராணி. நன்றி மிளகு மகாராணி என்று மெதுவாகச் சொன்னார், பெத்ரோ.

சென்ஹோர் பெத்ரோ, உங்கள் வயது என்ன?

சென்னபைரதேவி மகாராணி உரையாடலைத் தொடங்கிய விதமே பெத்ரோவுக்கு ஆச்சரியகரமானதாக இருந்தது. லிஸ்பனில் இருந்து இங்கே பெத்ரோ பணி நிமித்தம் வந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக   மிர்ஜான் அரண்மனைக்கு வந்து மகாராணியோடு எவ்வளவோ தடவை விரிவான நேர்காணலும், குறிப்பிட்ட காரிய காரணங்கள் பற்றி சிறு சந்திப்பும் உரையாடலுமாக அலுவல் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.

இதுவரை சென்னபைரதேவி மகாராணி பெத்ரோவின் சொந்த வாழ்க்கை பற்றிக் கேட்டதே இல்லை. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் பெத்ரோ குடும்பம் பற்றிய குற்றச்சாட்டு இங்கே பேச்சு நடக்கும்போது அடிபட்டது. பெத்ரோவின் மாமனார் கோழிக்கோட்டில் விவசாயத் தொழிலாளிகள் மூலம் மறைமுக மிளகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதை விசாரித்துக் கடுமையாக எச்சரித்தார் மகாராணி. அதுவும் முழுக்க அரசுப் பணி சார்ந்ததுதான்.

வயது என்ன? பெத்ரோவுக்கு ஐம்பத்தைந்து வயது. சென்னபைரதேவி மகாராணிக்கு அறுபதாம் ஆண்டு விழா மாநிலமே கொண்டாடி இப்போது அவர் வயது அறுபத்தைந்து என்று அனைவரும் அறிவர். பெத்ரோவை விட பத்து வயது மூத்தவர் அவர்.

சிரித்தபடி ”யுவர் எக்சலென்ஸி, நான் மகாராணியாரை விட பத்து வயது இளையவன். அனுபவத்திலும் திறமையிலும் வைத்துப் பார்த்தால் இன்னும் பிறக்கவே இல்லை.  யுவர் எக்ஸெலன்சியிடம் பார்த்து, கேட்டு, உரையாடி, கற்றுக்கொள்ள வேண்டியவன்” என்று தலை வணங்கிச் சொன்னார்.

”உங்கள் வயதில் எனக்கு ஒரு இளைய சகோதரன் இருந்தான். மகாமாரி நோய்த் தொற்று ஐம்பது வருடங்களுக்கு முன் உத்தர கர்னாடகப் பிரதேசத்தில் நிறைய உயிர்களைக் காவு  வாங்கியபோது அவனும் நோய் கண்டு இறந்து போனான். போகிறது. நீங்கள் இப்போது என் இளைய சகோதரனாக  இருக்கிறீர்கள்”.

ராணி பெருமூச்செறிந்து ஒரு நிமிடம் தரையைப் பார்த்தபடி இருந்தாள். பெத்ரோ அரசியல் சந்திப்புகள் பலவற்றையும் பல பிரமுகர்களோடு நடத்தி இருக்கிறார். மரியாதை விலகாமல் அதே நேரத்தில் பேசும் பொருளை, பேச்சு நடக்கும் போக்கினை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் கொண்டு செலுத்துவதாக இருக்கத் தேவையான பயிற்சி கொடுத்துத்தான் இந்துஸ்தானத்துக்கு அனுப்பியுள்ளார்கள். ஆனால் இது போல் ஒரு சூழ்நிலையை அவர்கள் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியாது.

இந்த நேர்காணல் எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்றே அனுமானிக்க முடியவில்லை. பெத்ரோ அவருக்குப் பழக்கமான உரையாடல் போக்கை சற்றே மாற்றி நிறுத்திவிட்டு ஆத்மார்த்தமாக உரையாட முடிவு செய்தார்.

ராணிக்கு இளைய சகோதரன், ரத்த பாசம் அடிப்படையான உறவின் வார்ப்பு தான். அந்த அன்பை கூடப் பிறக்காவிட்டாலும், சகோதரி என்ற பிரியம் வெளிப்பட பெத்ரோ திரும்பச் செலுத்துவார். இதில் ராஜாங்கம் ஏதுமில்லை.

எனின், அரசர்களும், அரசிகளும், இளவரசர்களும் இளவரசியரும் மிகுந்த உலகில் பெத்ரோ எப்போதும் அரசராக மாற முடியாது. செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ஒரு பதவி கிட்டினாலும் அது ஆள வழி செய்யாது. செயல்படுவதைக் கட்டுப்படுத்துவதும் புதுக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அப்படியான மக்கள் பிரதிநிதி தேர்வுகளால் சாதிக்க முடியும். சரித்திர நாடகம் எழுதி மேடையில் நடித்தால் தவிர அவர் அரசராக மாட்டார்.

சகோதரரே, உங்கள் மனைவி குழந்தைகள் நலமாக உள்ளார்களா?

மிளகுராணி கேட்டது ஒரு அளவில் தன் போர்த்துகீஸ் பேச்சு ஞானத்தைச் சோதித்துக் கொள்வதற்கான சொற்றொடர் அமைப்புப் பயிற்சி போல தெரிந்தாலும், ராணி வினவிய கேள்விகள் தகுந்த பதில் சொல்ல வேண்டியவை என உணர்ந்த பெத்ரோ, ”யுவர் எக்சலண்சி, என் மனைவியும் இரு குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று ஹொன்னாவரில் என் வீட்டுக்குத் திரும்பினார்கள். அவர்கள் அனைவரும் நலம்” என்று பணிவோடு பதில் சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்திருந்தார்.

pic detente

ack  yale.edu

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன