பெரு நாவல் ‘மிளகு’ – யாதனின் யாதனின் நீங்கியான் – To renounce is to attain eternal bliss

ராணியின் தாதி கையில் ஏந்திய சிறு குப்பியில் மருந்து மணக்கும் ஏதோ ரசாயனத்தை எடுத்து வந்திருக்க, இதோ வருகிறேன் என்று பெத்ரோவிடம் சொல்லிவிட்டு ராணி வாசலுக்குப் போனாள்.

ராணி திரும்பி வந்து கேட்கப் போகும் கேள்விகள் எப்படி இருக்கும்? பெத்ரோ யோசித்தார் –  உங்கள் மாளிகையில் வளர்க்கும் பசுக்கள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் பொழியும் பால் சுவையாக இருக்கிறதா? சனிக்கிழமை பகலில் கருப்புக் குடை பிடித்து காய்ச்சிய பால் பருகுகிறீர்களா?

பொருள் இருக்கிறதோ இல்லையோ, புது மொழியைக் கற்றுக்கொள்ள இப்படியான உதிரிக் கேள்விகள் மூலம் மொழிப் பயன்பாட்டைப் பரிச்சயம் செய்து கொள்வதே எளிய வழி என்று கேள்விப்பட்டிருக்கிறார் அவர். இந்தக் கேள்விகளுக்கு அதே போல அல்லது இதைவிட அபத்தமாகப் பதில் சொல்வதும் நினைவு வந்தது.

ஆரஞ்சு வர்ணப் பசுக்கள் புதன்கிழமை பால் ஈந்தன. வியாழனன்று      பிற்பகலில் தாடி வைத்த, சரிகைப் பிடவை அணிந்த அரசாங்க அதிகாரிகள் சருக்கரை சேர்த்து பாலைச் சுண்டக் காய்ச்சி எனக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அதை உம்மிடம் சொல்ல மறந்து போனேன். மன்னிக்கவும்.

இந்த பதிலை மனதில் ஓட விட்டு சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தார் பெத்ரோ. ராணியம்மாள் தாதி கொண்டுவந்த மருந்தை அருந்திவிட்டுத் திரும்பி வரும்போதே வினாத் தொடுத்தபடி வந்தாள் – லிஸ்பனில் பிற்பகல் நேரத்தில் இப்போது மழை இருக்காதோ?

ஆம் இது மழைக்கொண்டல் மேகங்கள் வெளிவாங்கும் காலம் என்பதால் அப்படி நடக்கும் என்று பதில் சொன்னார் பெத்ரோ.

வெளிவாங்கும் என்ற சொல்லுக்கான பொருள் புரியாமல் அதை இருமுறை உச்சரித்தாள் மகாராணி அவர்கள். அதிலிருந்து வெளியே வருவது என்று பெத்ரோ சொல்ல, அதிலிருந்து வெளியேறுவது. நல்லது அதிலிருந்து வெளியேறுவது என்று திரும்பத் திரும்பச் சொன்னாள் சென்னபைரதேவி,

வெளிவாங்கினேன். உறவில் இருந்து வெளிவாங்கினேன். லிஸ்பன் பயணம் செய்து கண்டு வர நினைத்த ஆசையிலிருந்து வெளிவாங்கினேன். சொல்லியபடி பெத்ரோவை நோக்கிக் கனிவாகச் சிரித்தாள் சென்னா.

வளர்ப்பு மகன் நேமிநாதனை அரச மாளிகையிலிருந்து வெளியேற்றியாகி விட்டது. வாழ்க்கையில் ஒரே ஆசை கடல்மேல் பயணப்பட்டு ஐரோப்பாவில் லிஸ்பன் சென்றடைந்து தன் சரிசமனான அந்தஸ்து உள்ள போர்த்துகல் அரசரோடு மிளகு ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றியும் மிளகு தருவோம் மிளகாய், வெங்காயம் கொடுங்கள் என்று பண்ட மாற்று வணிகத்துக்கு வழி வகுத்திருக்கலாம். ஆனால் இப்போது எந்தப் பயணமும் இல்லை. எல்லாவற்றில் இருந்தும், எல்லோரோடுமிருந்தும் வெளிவாங்கி விட்டேன். துன்பம் ஏற்படுத்தும் எல்லாவற்றிலிருந்தும் வெளிவாங்கி விட்டேன். இன்பம் தரும் எல்லாவற்றிலிருந்தும் வெளிவாங்கி விட்டேன்.

சிரிப்பு வெளிவாங்காத மனம் முகத்தில் பிரதிபலிக்கச் சொன்னாள் மிளகு ராணி.

pic ack amazon.com

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன