Excerpt from my forthcoming novel MILAGU
பெத்ரோ நின்றபடி குனிந்து மரியாதையோடு சொல்லத் தொடங்கினார் – அம்மா, உங்களை சம்பிரதாயங்கள் மீறி அன்புச் சகோதரி என்று அழைக்கிறேன் இந்தச் சந்திப்பின் மிகுதி நேரத்தில் மட்டும். சகோதரி, நான் சந்திப்பு என்றதும் நீங்கள் லிஸ்பன் பயணத்தைத் தள்ளிப்போடுவது பற்றி பேசத்தான் அழைக்கிறீர்கள் என்று மனதில் பட்டது. நீங்கள் சந்தித்திருக்கும் இடர்களை ஒரு அரசரோ அரசரில்லாது தனியே வாழும், ஆளும் ராணியோ எப்படிச் சமாளிப்பார்கள் என்று வியப்படைகிறேன். உங்களுக்கு இதைத் தாங்க மனதில் துணிவையும், பலத்தையும், உடல் நலத்தையும் எங்கும் பரந்த இறை அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
பெத்ரோ முழங்காலில் மண்டியிட்டு பிரார்த்தனையை உரக்கச் சொல்லி எழுந்தார். இந்தப் பிரார்த்தனையை அவர் மனதிலிருந்து செய்தார்.
சகோதரி, நீங்கள் கட்டாயம் லிஸ்பன் பயணத்தை மேற்கொள்வீர்கள். சற்று தாமதமாகப் புறப்படலாம். சரியான காலத்தில் சரியான நேரத்தில் சென்றடைவீர்கள். ஆண்டவன் அருள் உங்களுக்குண்டு.
முழுக்க பாதிரியாராகத் தன்னை உணர்ந்தார் பெத்ரோ.
அதிகாரபூர்வமாக பயணத்தை ரத்து செய்து லிகிதம் எழுதியனுப்ப வேண்டுமானால் எப்படி எழுதுவது என விசாரிக்க நினைத்திருந்தேன். ஆனாலும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மீதியுண்டு என்று உங்கள் வாக்கிலிருந்து எனக்கும் நம்பிக்கை முழுக்க அழியவில்லை. தொண்ணூறு வயதில், இன்னும் இருபத்தைந்து வருடம் சென்று கண் பார்வை பழுதுபட்டும், வாயில் பல் எல்லாம் உதிர்ந்தும், காது சரியாகக் கேட்காமலும் இருப்பேன். எனினும் கப்பலேறி லிஸ்பனும் லண்டன் அடைய டோவரிலும் நான் போய் இறங்குவேன். இன்னும் அதிகம் என் நாட்டு வாசனை திரவியங்கள் ஏற்றுமதியாக வழி செய்வேன். முடித்து அப்போது ஜெர்ஸோப்பாவின் அரசரிடம் யாராக இருந்தாலும் சரி பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாகக் கண் மூடுவேன்.
கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்ததைத் துடைக்கக் கூடச் செய்யாமல் எதிரே விளக்குத் தூணை உற்றுப் பார்த்தபடி இருந்தாள் சென்னா.
நான் விடை வாங்கிக் கொள்ளலாமா மகாராணி? பணிவோடு கேட்டார் பெத்ரோ பிரபு. அவரை உடனே உற்றுப் பார்த்து சென்னபைரதேவி கேட்டாள் – புறப்பட்டு விட்டீர்களா? நான் உங்களைப் போகச் சொல்லவில்லையே.
இது பெத்ரோவுக்குப் பழக்கமான சென்னபைரதேவி. ஒரு நிமிடம் கருணையும் பரிவும் அடுத்த நிமிடம் அரசாளும் வம்சத்துக்கே உரிய மேட்டுமைத் தனமும், கண்டிப்புமாக உரையாடும் ஜெர்ஸோப்பா மகாராணி.
பெத்ரோ பிரபு குனிந்து வணங்கி மன்னிக்க வேண்டும் மன்னிக்க வேண்டும் மகாராணி அவர்கள் ஓய்வெடுக்கும் நேரத்தில் அவருக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது என்று நானே முடிவு செய்து புறப்பட்டிருக்கிறேன். என் தவறுதான். மன்னிக்க வேண்டும்.
அவர் நாற்காலியில் அமர்ந்து பேசுவதா, நின்றபடி உரையாடுவதா என்ற தீர்மானத்துக்குவர முடியாமல் குனிந்து நிமிர்ந்ததைக் காண சென்னபைரதேவிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
Pic Royal etiquettes
Ack Nobility Association