Excerpt from my forthcoming novel MILAGU
சகோதரரே, ஹொன்னாவரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பொதுவாகக் கேட்டாள் சென்னபைரதேவி மகாராணி.
நாட்டு நடப்பை ஹொன்னாவர் குடிமக்கள் எப்படி சீர்தூக்கி எடைபோட்டுப் பேசுகிறார்கள், நடக்கும் சம்பவங்கள், நடக்க வேண்டிய ஆனால் நடக்காத சம்பவங்கள் குறித்து மக்கள் கருத்தென்ன என்றுதான் ராணியம்மாள் கேட்கிறாள் என்று பெத்ரோவுக்குப் புரிந்தது.
பெத்ரோ சற்று தயங்கினார். யோசிக்க வேணாம். உங்கள் காதில் விழுந்ததை விழுந்தபடி பகிர்ந்து கொண்டால் நன்றி. உங்களுக்கு கொங்கணி தெரியாது என்ற நினைப்பில் உங்கள் முன்னால் ஜாக்கிரதை குறைவாகப் பேசுவார்கள் ஜனங்கள், அதைத்தான் நினைவிருந்தால் சொல்லுங்கள் என்றாள் சென்னா மகாராணி.
சகோதரி, நான் என் காதில் விழுந்த சில அபிப்ராயங்களைப் பற்றி மட்டும் கூடியவரை ஒரு சொல்லும் மாற்றாது எடுத்துச் சொல்கிறேன். அவை எதுவும் என் கருத்து இல்லை. சரிதானா?
பெத்ரோ எங்கிருந்து தனக்குள் இவ்வளவு நன்மை வேண்டுதலும், தைரியமும், வாக்கில் தயக்கமில்லாத தெளிவும் வந்து சேர்ந்தது என்று தெரியாமல் ஆச்சரியப்பட்டார்.
சென்னபைரதேவி போன்ற நியாயமும் கண்ணியமும், திறமையும், தன்னையே தியாகம் செய்து தேசத்துக்கு நன்று இதென்றும் அன்று அதென்றும் பிரித்து நல்லவை நிறைவேற உழைப்பும் பொறுப்புமாக வாழ்வை நடத்திப் போகும் அரச பரம்பரையினர் யாரையும் பெத்ரோ பார்த்ததில்லை.
சென்னா எப்படியும் இந்தத் துன்பம் சூழ்ந்த காலத்தின் ஊடாக வெகுவிரைவில் வெளியே வந்து இன்னும் பத்து ஆண்டுகளாவது சிறப்பாக ஆட்சி செய்யவேண்டும் என்று அவர் திடமாக நம்பினார், அந்த அடிப்படையில் ஊர் நிலவரம் சொல்ல ஆரம்பித்தார்.
ஊர்க் கொச்சை கொங்கணி அவருக்கு சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆனால் முகபாவமும், கைகால் அசைவும் அதற்கு ஈடு செய்து பேசியது பேசிய மாதிரி புரிந்துகொள்ளப்பட கொஞ்சம் போல் உதவின. அப்புறம் போர்த்துகீஸ் மொழியிலும் மொழிபெயர்த்து, கூற வேண்டியதைக் கூறினார்.
தெருவில் பொரி உருண்டை விக்கறவன் சொன்னது – அவங்க நல்லவங்க தான். ஆனா எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கணும்னு பார்க்கறாங்க. அது ராமச்சந்திர பிரபு திரும்பி வந்து ஆட்சி செய்ய ஆரம்பிச்சாக்கூட நடக்காது.
இந்த மாதிரி கொங்கணி பாஷை கொச்சையாக பேசினது எல்லாம். அது இல்லாமல், யார், எங்கே, எப்போது பேசினது என்ற தகவல்களைத் தவிர்த்துப் பேசட்டுமா சகோதரி? பெத்ரோ அனுமதி கேட்க, நடக்கட்டும் என்று கையசைத்தாள் சென்னபைரதேவி மகாராணி.
இவங்க, யாராவது தன் ஆட்சியைப் பற்றி குறை சொன்னா அவங்களுக்கு உடனே மிட்டாய் கொடுக்கறதை ஒரே வழியாக வச்சிருக்காங்க. சமணர்கள் சிவன் கோவில்லே நரகல் சட்டியை விட்டெறிஞ்சதா ஊர்ஜிதம் ஆகாத தகவல்கள் சொன்னா, உடனே சைவர்களுக்கு ஒரு புது கோவில் அல்லது விக்ரகத்துக்கு அல்லது கோபுரத்துக்கு பொன் வேய்ந்து தர்றதா வாக்குதத்தம்.
நிறுத்தி, மேலே போகட்டுமா என்று சைகையால் வினவினார் பெத்ரோ. போ என்றாள் சென்னா.