Excerpt from my forthcoming novel
சமணன் குற்றம் சொன்னா, பஸதியிலே பத்து திகம்பர தீர்த்தங்கருக்குப் பதிலா பதினைந்து பேர் சிலை. சொல்லப்போனா ஒரு தீர்த்தங்கரருக்கும் இன்னொருத்தருக்கும் வித்தியாசமே தெரியாமத்தான் சிற்பிகள் கொத்தி வச்சுட்டுப் போயிடறாங்க. பத்து பதினஞ்சாகிறதால் பெருசா ஒண்ணுமில்லே.
மிளகு வித்தோம் லிஸ்பன்லே. வர்ற பணத்திலே கணிசமாக வரி எடுத்து மீதியை ஏற்றுமதி செஞ்சவங்களுக்கு வெகுமதி, வருமானமாக எடுத்துக்க விட்டுடறாங்க. அவங்க, அரண்மனை தவிர வேறே எல்லா இடத்திலேயும் வருமானம் குறைஞ்சிருக்கு.
அரசாங்கத்திலேயே பணம் எல்லாம் நிர்வாண சாமிகளுக்கு உபசாரம் செய்ய போயிட்டிருக்கு. பிறந்த பிள்ளைக்கு பால் கொடுக்க பிரசவித்த அம்மாவுக்கு உடம்பிலே சக்தி இல்லே. அவங்க கையிலே பூஜை பிரசாதத்தை ஒரு நெல்லிக்காய் அளவு கொடுத்து பசிக்கு இதைத் தின்னுன்னா நியாயமா?
மதமும் மிளகும் தவிர ராணியம்மா கவனிக்க வேறே எதுவுமே இல்லைன்னு நினைக்கறாங்களா?
பணம் படைச்சவன் வீட்டை, நிலத்தை, காசு பணத்தை எல்லாம் பொன் ஆக்கி ஜாக்கிரதையாக பதுக்கி வச்சுப்பான். நம்ம கிட்டே இருக்கறது சட்டி பானை, ஓலைக் குடை, கூழ் காய்ச்சி வார்த்து குடிக்கற கும்பா, அழுக்கு வேட்டி, கிழிஞ்ச பிடவை, கழுத்திலே பாசிமணி மாலை, குடிசைக்கு பின்னாடி ரெண்டு வெங்காயச் செடி. இதை எடுத்துக்கிட்டு யார் தங்கம் கொடுப்பாங்கன்னு தேடிக்கிட்டிருக்கேன். யாரும் இதுவரை கிடைக்கலே. கோட்டைக்குள்ளே போய் ராணியம்மா கிட்டே தான் விசாரிக்கணும்.
சண்டை வரும், யுத்தம் வருது. இதைத்தான் எல்லோரும் சொல்றாங்க. யாரு யாரோட யுத்தம் செய்யப் போறாங்க? யாரு யாருக்கு ஆதரவு தரப் போறாங்க?
இருந்த பழைய வீட்டை எல்லாம் இடிச்சு வச்சுட்டு போறதை அவனவன் எதிர்பார்த்துக்கிட்டிருக்கான். இருக்கற குடிசையைப் பிரிச்சு துரத்திவிட்டா, பஸதியிலே போய்த் தங்க விடுவாங்களா, கோவில் பிரகாரத்திலே உறங்க விடுவாங்களா?
ராணி அம்மா கிட்டே சிப்பாய், குதிரைப்படைன்னு நூறு பேர் கூட இல்லையாம். பத்து குதிரை, ஐம்பது காலாட்படை, இதை வச்சுக்கிட்டு சம்பளம் கொடுத்து பராமரிக்கறதே மகா சிரமமாக இருக்க யுத்தம் செய்ய வாளை வச்சுக்கிட்டு இன்னமும் பழைய காலத்திலே இருக்க முடியாது.
பீரங்கி, துப்பாக்கி, கண்ணிவெடி இதெல்லாம் வாங்கி வச்சிருக்காம யுத்தத்துக்கு போனா, அது யாரோட போனாலும், வெற்றி கிடைக்கிறது கடினம்ங்கறது உனக்கு தெரியுது எனக்கு தெரியுது ராணியம்மாவுக்கு தெரியலியே.
உலகம் முழுக்க அடுத்த தலைமுறை, அதுக்கு அடுத்த தலைமுறைன்னு பதவிக்கு வந்துட்டாங்க. இவங்களுக்கு அப்படி என்ன பிடிவாதம்? அறுபத்தைந்து வயசிலேயும் மிளகுராணின்னு பட்டம் வாங்கி கழுத்திலே மாட்டிக்கணும். நாலு வேலையத்தவன் மிளகுராணி வாழ்கன்னு எல்லா மொழியிலேயும் கூப்பாடு போடணும். ஒரு பசதியிலே சங்கு ஒலிச்சு கல்கண்டும் உலர்ந்த திராட்சையும் பிரசாதமாக கொண்டு வந்து தரணும், இன்னொரு கோவில்லே இருந்து மிளகுப் பொங்கல் பிரசாதம் வரணும், தாதி மிங்குவோடு ஓடிப் பிடிச்சு விளையாடணும், நிம்மதியா தின்னுட்டு தூங்கணும். யார் எக்கேடு கெட்டா மிளகுராணிக்கு என்ன போச்சு?
ராணி மகாராணியா நாற்காலியை இறுகப் பிடிச்சுக்கிட்டு பதவி போதையிலே, அதிகார போதையிலே, புகழ் போதையிலே இருக்கணும், மகனே ஆனாலும் ராஜ பதவி எல்லாம் தர முடியாது. மூணு வேலை நெய் விட்டு சாப்பிட்டுவிட்டு வயத்தைத் தடவிக்கிட்டு நிம்மதியாக உறங்கி உறங்கி மோர்க்குழம்பிலே போட்ட சேப்பங்கிழங்கு மாதிரி வழவழ கொழகொழன்னு ஏதாவது பேசிக்கிட்டிருக்கணும். அதான் ராணியம்மாவுக்கு வேண்டியது.
மகன்னு இல்லே, நாளைக்கே பேரனை அந்தப் பொண்ணு ரஞ்சனாதேவி பெத்துப் போட்டா கூட அப்பவும் தொண்டு கிழவியா மிளகுப் பொம்பளை தான் சர்வத்துக்கும் தலைமை.
சரி ஊரூரா பசதியைக் கட்டு கோவிலைக் கட்டுன்னு பிடிவாதமா அலைஞ்சிட்டிருக்காங்களே. நாளைக்கே இவங்க திடீர்னு செத்துக்கித்து போயிட்டா என்ன ஆகும் ஜெருஸொப்பா மாநிலத்துக்கு? அரை குறையா நிக்கற அந்தக் கோவில்களும் பசதிகளுமெல்லாம் என்ன ஆகும்? அதுக்கு இதுவரை செலவழித்த பணம் நஷ்டக் கணக்குலே காட்டுவாங்களா?
ஏதாவது ஒரு கோவில் எங்கேயாவது கோவில் இல்லாத இடத்திலே கட்டு அது நியாயம். ஒரே நேரத்துலே எட்டு பசதி, ஏழு கோவில். அவங்க அப்பன் வீட்டு காசா? மிளகு சாகுபடின்னு வெய்யில்லே வாடி, மழையிலே நனைஞ்சது அவங்களா? நாங்க. அந்தப் பணம் முழுக்க எங்களுக்கு வரணும். நாங்க பார்த்து அவங்களுக்கு ஏதாவது தரணும். அப்படி இருந்தா, தண்டச் செலவு ஒரு துட்டு போகாது.
வரத்தான் போகுது அந்தக் காலம், பார்த்துக்கிட்டே இரு. எப்படி பதவி சிரமமில்லாமல் தேர்ந்த கைக்கு மாறும், நடவடிக்கை எல்லாம் எப்பவும்போல் கிரமமாக நடந்தேறும்னு எந்த சிரமமும் இல்லாம கைமாற என்ன திட்டம் பண்ணி வச்சிருக்காங்க?
படம் A medieval cuisine
Acq en.wikipedia.org