Excerpts from my forthcoming novel MiLAGU
யுத்தம் வருமா?
தனக்குத்தானே பேசுகிற முணுமுணுப்பாகக் கேட்டாள். பெத்ரோ ஏதும் சொல்வதற்குள் சென்னபைரதேவி தொடர்ந்தாள் –
போர் வரும். அரசாள ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருந்த என் வளர்ப்பு மகன் நேமிநாதன் சும்மா இருக்க மாட்டான். கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பில்ஜி அரசன் திம்மையாவும் அவனுக்கு உடனே ஆதரவு தருவார்கள். எனக்கு ஆதரவுக்கு யாருமில்லை. அப்பக்கா ராணியை எனக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து மாற்றிக்கொள்ளக் கட்டாயப்படுத்தி விட்டார்கள். அவள் நல்ல தோழி ஆனால் இந்த முறை அரசியலில் காயப்பட்டு ஒதுங்கி விட்டாள் அப்பக்கா. ஆக நான் காசு கொடுத்து ராணுவம் சேர்க்க வேண்டி உள்ளது.
குத்திருமல் காரணமாகப் பேச சிரமப்பட்டாள் மிளகுராணி. வாசலில் மிங்கு வந்து நின்றாள் ஒரு சிறு குப்பியில் மருந்தோடு. அவளே நேரே உள்ளே நடந்து வந்து ராணிக்கு மருந்தைப் புகட்டிவிட்டு வெளியே போனாள்.
என் பக்கம், என் பட்டாளமாக யுத்தம் செய்ய போர்த்துகல் அரசு முன்வருமா? எனக்குக் கோரிக்கை லிஸ்பனில் இருந்து படை வரவேண்டும் என்பதில்லை. கோவா பஞ்சிமில் நீங்கள் நிறுத்தி வைத்து ஊர் ஒழுங்கைப் பராமரிக்க பயன்படுத்தும் அந்த ஐநூறு வீரர்களை துப்பாக்கி சகிதம் இரண்டு வாரம் ஹொன்னாவருக்கு கப்பலில் வந்து நங்கூரம் பாய்ச்சி நிற்கச் சொல்ல வேண்டும். அது போதும்.
பெத்ரோவைக் கூர்ந்து பார்த்தபடி ஒரு வினாடி மருந்துக் குப்பிக்காகக் கை நீட்டினாள் சென்னா. மிங்கு ஓடிவந்து சிசுவுக்குச் சங்கில் மாந்தத்திற்கு மருந்து புகட்டுவது போல் புகட்டித் தாயாகத் தலையைத் தடவிப் போனாள்.
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு நாளைக்கு இரண்டு வராகன், உணவு விலையின்றித் தரப்படும். இப்படி என் பக்கம் போர்த்துகல் இருந்தால் நிச்சயம் நான் வெல்லுவேன். குறைந்த பட்சம் இன்னும் பத்து வருடம் அரசாளுவேன். அதற்குள் கையில் எடுத்த கோவில், பஸதி கட்டுமானப் பணிகளோடு சாலை பராமரிப்பு, புது சாலை இடுதல், சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டம் என்று ஊர்தோறும் நல்லன செய்வேன். பண்டகசாலை அமைத்து மிளகு தவிர சாயம் தோய்த்த கைத்தறித்துணி, ஏலம், பலத்த கண்காணிப்போடு வெடியுப்பு என்று வேறு பொருள் மிகுந்த ஏற்றுமதிக்கும் வழிசெய்து வருமானம் பெருக்க, அது கடைசிக் குடிமகனுக்கும் போய்ச்சேர வழி செய்ய எப்படியும் பத்து ஆண்டுகள் தேவைப்படும். யுத்தத்தில் நான் போர்த்துகல் அரசு ஒத்துழைப்போடு வென்றால் இதைக் கட்டாயம் நடத்தி முடிக்கலாம்.
இருமல் மறுபடி எட்டிப்பார்க்க, தாதி மிங்கு மருந்தோடு வந்தாள்.
எந்த ஆதரவும் கிடைக்காத பட்சத்தில் எனக்கு ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்று விலகிக் கொள்வேன்.
சென்னா சொல்லியபடி பெத்ரோவைப் பார்த்த பார்வையில் ‘சரிதானா?’ என்ற வினா தொக்கி இருந்தது. பெத்ரோ புன்முறுவலித்தார்.
சகோதரரே பெத்ரோ, உங்களுக்கு அரச தலைமைப் பிரதிநிதியாக மிக உயர்ந்த பதவி அளித்து உங்கள் அரசர் அனுப்பியிருக்கிறார். உங்கள் பஞ்சிம் துறைமுக படையை இரண்டு வாரம் இரவல் தருவீர்கள் தானே?
பெத்ரோ சற்றும் எதிர்பார்க்காத கேள்வி அது. அதை அரசியல் வாய்ப்பாக அவர் கருதலாம். போர்த்துகல் அரசரும், அரசாங்கமும் என்ன நினைப்பார்கள்? அரசத் தலைமைப் பிரதிநிதி பதவி மட்டும் போதாது இது தொடர்பாக முடிவு செய்ய என்று பட்டது பெத்ரோவுக்கு.
என்ன சகோதரரே, நான் கேள்வி கேட்டு ரெண்டு நிமிடமாகி விட்டது. கோவாவில் இருந்து போர்த்துகல் படையை எப்படி ஹொன்னாவர் கொண்டு வரலாம் என்ற சிந்தனையில் மூழ்கி விட்டீர்களா? யோசியுங்கள். நாளை மறுநாள் தகுந்த மறுமொழியோடு வாருங்கள்.
உள்மண்டபத்துச் சுவரை அலங்கரித்த சுவர்க் கடியாரம் பதின்மூன்று முறை அடித்தது. பெத்ரோ தன் இடுப்பு வார் கடியாரத்தைப் பார்த்து மாலை ஐந்து மணி பதினெட்டு நிமிடம் என்று தனக்குள் முணுமுணுத்தார்.
மகாராணி, சிறு பழுதுதான். நான் எடுத்துப்போய் கோழிக்கோட்டில் என் மாமனாரின் வர்த்தக நிறுவனத்தில் பிழை திருத்த ஏற்பாடு செய்கிறேன் என்று கடியாரம் மாட்டியிருந்த சுவர்ப் பக்கம் போனார் பெத்ரோ.
இருக்கட்டும், சகோதரர் பெத்ரோ, அந்தக் கடியாரமும் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்றாள் சிரித்தபடி மகாராணி.
மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து அதன் தலைப் பகுதியை இறுகப் பிடித்தபடி மிங்கூ மிங்கூ என்று சத்தம் தாழ்த்தி அழைத்தாள் சென்னபைரதேவி மகாராணி. தாதி மிங்கு உள்ளிருந்து வந்து நாற்காலியைத் தள்ளியபடி உள் நோக்கிப் போனாள்.
pic a queen and the nurse
ack freeimages.com
nurse