Excerpt from my forthcoming novel MILAGU
இணைப்பு
போர்த்துகீசிய மகாமன்னர் ’பக்திமான்’ பிலிப் இந்துஸ்தானத்துக்கான போர்த்துகீசிய தலைமை அரசப் பிரதிநிதி சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அவர்களுக்கு விடுத்த உத்தரவு லிகிதம் (பகுதிகள்)
இந்துஸ்தானப் பெருநிலத்துக்கு எம் தலைமைப் பிரதிநிதியாக நியமித்து அனுப்பிய சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அறிந்திடுக-
மகாராணி சென்னபைரதேவி அரசாளும் ஜெர்ஸோப்பா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனை குறித்து பெத்ரோ ஆகிய நீர் அறிந்திருக்கலாம். இது குறித்து எமக்கு உடனே விரிவாகத் தகவல் தெரிவித்து லிகிதம் அனுப்பியிருக்க வேண்டியது உம் கடமை. அதிலிருந்து நீங்கள் வழுவிவிட்டீர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியார் அந்த அரசியல் பிரச்சனை தொடர்பாக நாம் கோவா பகுதி பஞ்சிம் துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும் நூற்றைம்பத்தாறு போர்த்துகீஸ் கடற்படையினரை ஒரு மாதம் இரவல் கேட்டு உம்மிடம் வரலாம் என்று எமக்குக் கிட்டிய துப்புகள் தெரிவிக்கின்றன. இதுவும் நீர் பெற்று எமக்கு அனுப்பிவைத்திருக்க வேண்டிய முக்கியமான செய்தி. செய்யத் தவறி விட்டீர்கள் என்பதில் பெருவருத்தம் அடைகிறோம்.
சென்னா மகாராணி அப்படி நம் படைகளை இரவல் கேட்டு வந்தால் நீர் செய்ய வேண்டியது
- படையினரை ஒரு மாதத்துக்கு இரவல் தர முடியாது. இரண்டு ஆண்டுகள் குறைந்த பட்ச கால அளவு அவர்கள் அனுப்பப் படுவார்கள்
- ஒவ்வொரு வீரருக்கும் தினசரி காவல் கூலியாக ஐந்து வராகனும், உணவு, உடுப்புக்காக தினசரி ஒன்றரை வராகனும் தரப்பட வேண்டும்
- ஒரு வருடத்துக்கான காவல் கூலி, மற்ற செலவினங்களுக்கான பணம் முன்கூட்டியே கொடுக்கப்பட வேண்டும். அந்தத் தொகை பணமாக அன்றி முன்கூட்டி நாம் நிர்ணயித்திடப் போகும் மிளகுக் கொள்முதல் விலை விகிதத்தின்படி மிளகாகக் கொடுக்கப்பட வேண்டும்.
- மாநிலத்தில் மிளகு பயிரிட போர்த்துகீஸ் அரசர் சார்பில் பெத்ரோவாகிய உமக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்.
- மாநிலத்தில் அரசு மாற்றங்களுக்கு பிலிப் மன்னரான எமக்குத் தெரியப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது.
- உதவிப் படைகளை கோவாவில் இருந்து கொண்டு வருவதா, லிஸ்பனில் இருந்து அனுப்புவதா என்பதை போர்த்துகல் அரசு தீர்மானிக்கும்
- படைகள், தளவாடங்கள் நகர்த்துவதற்கான அனைத்து செலவும் தளவாடங்களின் பராமரிப்பு செலவும் ஜெருஸோப்பா அரசே ஏற்கவேண்டும்.
- இரவலாக அனுப்பப்படும் படைகளை எந்த நேரத்திலும் பின்வாங்கிக் கொள்ள போர்த்துகீஸ் அரசுக்கு முழு உரிமை உள்ளது. தளவாடங்களையும் திரும்ப எடுத்துப் போக உரிமை போர்த்துகல் அரசுக்கு உண்டு.
- படைகளையும் தளவாடங்களையும் ஆள், பொருள் மாற்றத்துக்கு (ஒருவனுக்குப் பதிலாக இன்னொருவன், ஒரு பொருளுக்குப் பதிலாக அதே தோற்றம், குணம், பயன்பாடு உள்ள மற்றொரு பொருள் என) உட்படுத்த போர்த்துகல் அரசுக்கு முழு உரிமை உண்டு.
- கோழிக்கோடு சாமுரின், அவருக்குத் தொடர்புள்ள கடல் கொள்ளைக்காரர்களான குஞ்ஞாலிகள் ஆகியோருடன் ஜெர்ஸோப்பா நேசம் பாராட்டக் கூடாது.
- போர்த்துகல் இரவல் ராணுவம், சூழ்நிலை அடிப்படையில் போர் நடப்பதற்கான சந்தர்ப்பம் எழும்போது ஜெர்ஸூப்பா அரசின் சார்பில் அவர்களுடைய ராணுவத்தோடு சேர்ந்து போரிட முயற்சி எடுக்கப்படும். அந்தப் போர்களில் எம் படையினர் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை. வெற்றி பெற்றால் இருபது சதவிகிதம் கூடுதல் ஊக்க வருமானம் அவர்களுக்கு ஜெர்ஸோப்பா அரசு தரவேண்டும். வெற்றி பெறவில்லை என்றால் நஷ்ட ஈடு எதுவும் போர்த்துகல் அரசால் தரப்படாது.
- இந்த ஷரத்துகளுக்கு உடன்பட்டால் அதிக பட்சம் இன்னும் ஒரு மாதத்தில் அதை பெத்ரோவாகிய உம்மிடம் ஜெருஸோப்பா மகாராணி தெரிவிக்க வேண்டியது. அதன் பின்னரே போர்த்துகீஸ் படை ஜெர்ஸோப்பா, ஹொன்னாவருக்கு நகரும்.
pic Portugal emperor, the ‘Pious’ Philip II
ack wikipedia.org