பெரு நாவல் ‘மிளகு’-பேய் மிளகு?Devil’s-pepper. Rauvolfia vomitoria

Excerpt from my forthcoming novel MILAGU

பரமன் என்ற பரமேஸ்வர ஐயர் அறையின் மூலையில் வசதியான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அறை நல்ல வெளிச்சத்தில் இருந்தது.

பரமனுக்கு எதிரே இன்னொரு நாற்காலியிட்டு பிஷாரடி வைத்தியர் உட்கார்ந்திருந்தார். அவர் மடியில் ஒரு சிறிய கேஸட் டேப் ரிக்கார்டரை வைத்திருந்தார்.

பரமன் சட்டை காலரில் இருந்து மிகச் சிறிய ஒலிவாங்கி டேப் ரிகார்டரோடு இணைத்திருந்தது.பரமனின் கண்கள் மூடியிருந்தன.

பிஷாரடியும் மைக் கொண்டு தன்னையும் டேப் ரிகார்டரோடு பிணைத்திருந்தார். பத்து நிமிடமாக அறையில் அமைதி நிலவியது. பிஷாரடி பேச ஆரம்பித்தார்.

பரமேஸ்வரன், அம்பலப்புழை அம்பலத்துக்குப் போயிருக்கிறீர்களா?

இல்லை என்ன விசேஷம் என்று சிரமத்தோடு குரல் வருகிறது பரமனிடம்  இருந்து.

கோவிலில் என்ன விசேஷம் இருக்குமோ அந்த விசேஷம் உள்ள புராதன கோவில் அது.

பிஷாரடி கூடுதல் தகவல் தருகிறவராகத் தன்னை உணர்ந்தார்.

வேறு எந்த கோவிலுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள் பரமேஸ்வரன் ஐயர்?

பரமன் என்றே அழையுங்கள்.

அப்படி அழைத்தால் மனதில் என்ன மாதிரியான நிம்மதி ஏற்படுகிறது?

அப்படித்தான் என்னை காலம் காலமாகக் கூப்பிட்டு வருகிறார்கள்.

காலம் காலம் என்றால்?

வருஷக் கணக்கில்.

எத்தனை வருஷம்?

நிறைய வருடம்.

நூறு?

நானூறு வருடம் முன்பு.

நானூறு வருடம் முன்பு நீங்கள் உயிரோடு இருந்தீர்களா?

பரமன் அமைதியானார். பிஷாரடி திரும்பக் கேட்டார் – நானூறு வருடம் முன் நீங்கள் ஜீவித்திருந்தீர்களா?

ஆமாம் என்றார் தீர்மானமானப் பதில் சொல்ல முடிவு எடுத்த மாதிரி, பரமன்.

உங்களோடு யாரெல்லாம் இருந்தார்கள்?

நிறையப் பேர் இருந்தார்கள்.

அதெல்லாம் யார்?

யாரெல்லாமோ இருந்தார்கள்.

யாராவது இருந்தால் பெயர் தெரிந்திருக்குமே என்று நைச்சியமாகக் கேட்டார் பிஷாரடி.

பெயர் தெரியாது. ஆனால் நிறையப்பேர் இருந்தார்கள்.

எங்கே?

பரமனிடமிருந்து பதில் இல்லை.

எங்கே நிறையப்பேர் இருந்தார்கள் பரமன்?

இதற்கும் பரமனிடமிருந்து பதில் இல்லை.

நானூறு வருடம் முன்பு யாரெல்லாம் இருந்தார்கள்? திலீப் ராவ்ஜி இருந்தாரா?

Don’t talk rubbish, doctor. அவன் பிறக்கவே இல்லை.

பின்னே நானூறு வருஷம் முன்னால் யார் உங்களோடு இருந்தார்கள்?

மாட்டேன். அந்த ராட்சசன் ஏதாவது பண்ணுவான்.

எந்த ராட்சசன்?

நேமிநாதன்.

பரபரப்பானார் பிஷாரடி வைத்தியர். ஜகஜ்ஜோதியாக எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டுகளை அணைத்து இரண்டே இரண்டு அறுபது வாட்ஸ் விளக்குகளை மட்டும் ஒளிரச் செய்தார். பரமனை அருகில் சென்று பார்த்தார். புலன்கள் விழித்திருக்க,  ஆழமான உறக்கத்தில் இருந்தார் அவர்.

பரமன், நேமிநாதன் இல்லை, வரமாட்டான்.

பரமன் உறக்கத்தில் சிசு போல் சிரித்தார்.

அவன் பேய் மிளகு மாதிரி. இல்லாமல் போனான் என்று விட்டால் திரும்ப தழைத்து வந்துவிடுவான்.

பேய் மிளகு? பிஷாரடிக்குத் தெரியும். Devil’s-pepper. Rauvolfia vomitoria

தெரிசா வீட்டிலும் தன் வீட்டிலும் சடசடவென்று படர்ந்து வாசல் மறைத்து வளர்ந்த அந்த அசுரத் தாவரத்தை முற்றும் பிடுங்கிப் போட்டது நினைவு வந்தது பிஷாரடி வைத்தியருக்கு. முன்னோர் ஓலைச் சுவடியில் அந்தப் பெயரும், அதை ஒழிப்பது எப்படி என்றும் எழுதியிருந்ததும் நினைவு வந்தது.

பேய் மிளகு தான் என் வீட்டில் அடைந்து மண்டியது.

பிஷாரடி பரமனிடம் தகவல் தெரிவிக்கும் பாணியில் சொன்னார்.

பேய் மிளகு நானூறு வருஷம் முன்பு ஹொன்னாவரில் படர்ந்து வந்தது என்றார் பரமன்.  ஜெரஸூப்பாவிலேயும்.

ஹொன்னாவர். ஜெரஸோப்பா. ஹொன்னாவரில் நீங்கள் மட்டும் தான் இருந்தீர்களா?

இல்லை என்றார் பரமன்

உங்களோடு யாரெல்லாம் இருந்தது?

மஞ்சுநாத் இருந்தான். ரோகிணி கூட இருந்தாளே. என்ன இருந்தாலும் அம்மா ஆச்சே. அவனோடு ஜெருஸூப்பாவுக்கும் ஹொன்னாவருக்கும் போய்ட்டு போய்ட்டு வந்துண்டிருந்தா.

அவனுக்கு ரோகிணி என்ன வேணும் என்று ஆவலோடு கேட்டார் பிஷாரடி வைத்தியர்.

அம்மா, சொன்னேனே. பொறுமையில்லாமல் முணுமுணுத்தார் பரமன்.

மஞ்சுநாதன் இல்லை, இன்னொரு நாதன். நேமிநாதன். ஆமா, நேமிநாதனுக்கு மஞ்சுநாதன் என்ன உறவு?

அதெல்லாம் சொல்ல முடியாது போடா.

பரமன் குரல் கரகரப்பாக மாற வந்த பதிலை உடனே சரியாகப் புரிந்து கொண்டார் பிஷாரடி. கொங்கணி மொழி இது. அதுவும் நானூறு வருஷம் முன்னால் பேசப்பட்டது. உத்தரகன்னடத்தில் பேசப்பட்டது. குறிப்புகளை டேப் ரிகார்டரில் பிரதி எடுத்துப் பூர்த்தி செய்வதற்குள் பரமன் நன்றாக விழித்துக் கொண்டு விட்டார்.

படம்  பேய் மிளகு Devil’s-pepper. Rauvolfia vomitoria

நன்றி விக்கிபீடியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன