An excerpt from my forthcoming novel MILAGU
இன்று காலை நடந்ததுதான் பின்னும் வேடிக்கை, பெரும் வேடிக்கை.
காலையில் ரதவீதி மிட்டாய்க்கடைக்கு வேலைக்குப் போவது எட்டு மணிக்கு பிரதி தினமும். வீட்டில் இருந்து புறப்பட்டு சுமார் முக்கால் மணி நேரம் நடந்து கடைக்கு வந்து சேருவேன்.
உடலுக்கு தேகப் பயிற்சி என்பதோடு, கால் இருக்கறதாலே கிடைக்கும் சந்தோஷத்தை எல்லாம் உடனே அனுபவிக்க ஆசையும் கூட. இந்தக் காலத்தில் இருந்து பம்பாய், தில்லி, நாகபூர், ரயில், விமானம் என்று நான் இருந்த காலத்துக்குத் திரும்பப் போகும்போது அங்கே ரயில் விபத்தில் இரண்டு காலும் பாதத்தோடு எடுக்கப்பட்டு பழையபடி கட்டைக்கால்களோடு அன்றோ மெல்ல நகர்ந்து போவேன்.
இந்த காலத்தில், கால்கள் முழுசாக இருப்பது தான் எனக்குக் கிட்டிய ஒரே சந்தோஷம். அந்த சந்தோஷத்தை இங்கே எத்தனை நாள் இருக்கப் போகிறேனோ அத்தனை நாள் தீர அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.
முடிந்தால் ஓடலாம். ஆனால் ஓடினால் சீக்கிரம் இனிப்பு அங்காடிக்குப் போய்ச் சேர்ந்துவிடுவேன். அதற்கு மெல்ல இருகாலையும் பலமாகத் தரையில் காலணிக்குள் கவ்விப் பிடிக்க வைத்து அணிந்து சீராக நடக்கிற சந்தோஷம் அது.
வெய்யிலோ மழையோ. வலது தோளில் சீனக்குடை ஆடியாடி, தலைகீழான பூ மலரக் காத்திருப்பது போல் தொங்கிக்கிடக்க, அதை லாகவமாகத் தாங்கி நடப்பேன். மேடு, பள்ளம். கல் பாளங்கள் மேவிய நெரிசலான வீதிகளின் நடைபாதை, ஷெராவதி ஆறு கடலோடு கலக்கும் அழிமுகம் இப்படி ஒரே நடையில் முக்கியமான ஊரிடங்கள் வழியே போகும்படி என் பாதையை நான் தீர்மானித்து வைத்திருக்கிறேன். மழையோ வெய்யிலோ எது வந்தாலும் அந்த வழியை மாற்றவோ, சாரட் ஏறி பயணம் போகவோ நான் எனக்குள் உடன்பட்டதில்லை.
மழை காலத்தில் தோளோடு அணைத்தபடி குடையைப் பிடித்து ஈரம் காதில் கசிய பெரும்பாலும் செருப்பு அணியாது நடப்பது வாடிக்கை. பள்ளமான பிரதேசங்களில் மழைநீர் அல்லது ஷராவதி ஆறு உடைப்பெடுத்து நிறைத்திருக்க, அந்தப் பள்ளங்களை கால்கள் ஸ்பரிசித்து எவ்வளவு ஆழமான குழிகள் என்று அனுமானித்து காலை விட்டோ அல்லது குழியைத் தாண்டிக் குதித்தோ முன்னேறிப் போவது மனசுக்கு பிடித்த ஒன்று.
இன்று மழையும் இல்லை, வெய்யிலும் இல்லை. அழிமுகத்துக்குப் போகும் சாலை வழியே நடந்து கொண்டிருந்தேன். வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக துறைமுகத்துக்கு ஏலமும் கிராம்பும் மூட்டைகளாக் கட்டி எடுத்துப் போகிற மாட்டு வண்டிகள் வேகமின்றி ஊர்ந்து கொண்டிருந்தன. நடைபாதையில் என்னைத் தவிர அழிமுகத்தை நோக்கி நடப்பவர் வேறு யாருமில்லை.
அப்படி இருக்க இயற்கையிலும் பறவைகளின் இனிய சத்தத்திலும் மனதைப் பறிகொடுத்து மெல்ல நடந்து வரும்போது பின்னால் இருந்து களேபரமான ஒலி. அவசரமாகப் பார்க்கக் கூட இல்லாமல் தெருவுக்குக் குதித்து குறுக்கே ஓடி ரக்ஷைப் பட்டேன்.
தெருவின் எதிர் நடைபாதையில் ஏறி என் பின்னால் வந்த ராட்சத வாகனம் எது எனப் பார்த்தேன். இரட்டைக் குதிரை பூட்டிய சாரட். அந்தக் கழுவேறி நேமிநாதனுடைய அடித்துப் புரண்டு நரகத்துக்கு ஓடிப் போய்க் கவிழ்ந்து சில்லு சில்லாக உடைபடப்போகும் வண்டியை இந்தப் படுபாவிப் பெண்பிசாசு நான் சாவதானமாக நடக்கிற நேரம் பார்த்து பின்னால் இருந்து என்மேல் மோதி என்னைக் கொல்ல முயற்சி எடுத்ததும்தான் எனக்குப் பொறுக்க முடியாமல் போனது.
இந்த பதினேழாம் நூற்றாண்டின் முதல் வருஷங்களில் மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மனுஷ மனுஷிகளை கிறிஸ்துநாதர் பிறந்த 20ஆம் நூற்றாண்டு வருஷம் 1960களில் ஜீவிக்கிறவர்களோடு ஒப்புச்செய்தால் ஒரு மண்ணும் தெரியாத நிராட்சரகுஷ்டிகள் இவர்கள்.
காலமும் நீள அகலம் மாதிரி ஒரு பரிமாணம், காலத்தில் பயணம் செய்து இருநூறு வருஷம் பின்னால் போகவோ, முன்னூறு வருஷம் முன்னால் போகவோ சாத்தியம் உண்டு என்று யோசித்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். இதிலே, நானூறு வருஷம் முந்தைய காலத்தில் இருந்து வந்து இருக்கிற என்னை கொல்லணுமாம். காலச் சங்கிலி அறுந்து போகுமல்லோ அப்புறம்?
நான் ஒரு கிறுக்கன் என்று ஒருத்தன், ஒருத்தி விடாமல் நம்புகிறார்கள். ஒரே ஒருத்தர் தான் இதைப் புரிந்துகொண்ட தொனியும் தோரணையுமாக என்னோடு ரெண்டு நிமிஷம் பேசியவர். திக்குகளையே உடுப்பாக உடுத்திய நிர்மலானாந்தா என்னும் நிர்மல் முனி.
போன வாரம் ஹொன்னாவர் பழைய அங்காடித்தெரு ஜெயின் மந்திரத்தில் தீர்த்தங்கர விஜயம் என்று எல்லா தீர்த்தங்கரர்களைப் பற்றியும் தொடர் சொற்பொழிவு செய்ய நிர்மல் முனி வந்தபோது பல நாள் சாயங்காலம் நான் போயிருந்து நாலு நல்ல வார்த்தை காதில் விழுந்து மனசில் படிய முயற்சி எடுத்துக் கொண்டேன்.
அவர் சொன்ன ஒரு வாக்கியம் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது – காலம் தொடக்கமற்றது. முடிவுமில்லாதது. காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. கடியார முட்கள் போல் பிரதட்சணமாக அந்தச் சக்கரம் சுழல்கிறது. காலம் என்ற ஒற்றைவெளி மேல்நோக்கி அல்லது முன்நோக்கிச் சுழலும் காலம், கீழ்நோக்கி இயங்கும் காலம் என இரண்டு பகுதிகளால் ஆனது.
சுழல் இயக்கத்தால் எல்லா நிகழ்வும் திரும்பவும் திரும்பவும் திரும்பவும் நிகழலாம். இதோ நான் பேசுகிறேன், நீங்கள் கேட்கிறீர்கள் இந்த கணம் இனியும் ஒரு முறை, பல முறை திரும்ப நிகழலாம். ஏற்கெனவே நிகழ்ந்திருக்கலாம்.
நான் பரபரப்பாக கைகூப்பி எழுந்தேன். யார் யாரையோ எப்படித் திரும்பப் போவது என்று விசாரித்து அலைந்து திரிந்தேனே. காலம் பற்றி இந்த சமண முனிவர் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருப்பார் என்று தெரியாமல் போய்விட்டேனே. எழுந்து நின்று வணங்கினேன்.
பூஜ்யஸ்ரீ முனிபுங்கவரே, நான் வெறுந்தூசி. பரமன் என்ற பரமேஸ்வரனின் லட்சம் கோடி நமஸ்காரம். காலப் பெருவெளியில் எனக்கு மட்டும் ஏன் பின்னோக்கி இயக்கம்? நானூறு வருடம் பின்னால் ஏன் வரவேண்டும்?எப்போது திரும்புவேன் எங்கிருந்து வந்தேனோ அங்கிருந்து?
அவர் நிமிர்ந்து பார்த்துச் சொன்னார் – உன் வண்டி வரும் நேரம் நெருங்குகிறது. சும்மா இரு.
நான் இரண்டு நாளாக இதை மனதில் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
pic chariot
ack dreamstime.com