Excerpt from my forthcoming novel MILAGU
அடுத்து யார்? காசிரை கேட்க, மகாராணி கையமர்த்தி முதலில் பலகாரம் அப்புறம் ஆட்ட பாட்டம் அதற்கு அப்புறம் கலந்துரையாடல். பகல் பனிரெண்டு மணி வரை இதற்கான நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்று பெரும் கரகோஷத்துக்கு இடையே கூறினாள்.
அடுத்த மணி நேரம் அந்தப் பெண்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி என்ன பலகாரம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று, சங்கோஜம் இல்லாமல் கேட்டு வாங்கி, அவசரப்படுத்தி விழுங்க வைக்க யாரும் இல்லாமல் நிதானமாகச் சாப்பிட்டார்கள்.
வீட்டில் குழந்தைகளை விட்டு வந்தவர்கள் தித்திப்புப் பலகாரங்களான லட்டுருண்டை, பாதுஷா ஆகியவற்றை இலைக்கு வெளியே குழந்தைகளுக்குக் கொண்டுபோய்க் கொடுக்க எடுத்து வைத்துக் கொண்டதைப் பார்த்து சென்னாதேவி, வீட்டுக்கு எடுத்துப்போக தனியாக பலகாரங்கள் தரப்படும். இதெல்லாம் இங்கேயே நீங்கள் சாப்பிட என்று அவர்களிடம் தெரிவித்தாள்.
யாரும் எதையும் வீணாக்காமல் தேவையானதைக் கேட்டு வாங்கி சந்தோஷமாக உண்டு அந்த விருந்து நடந்தது.
கலந்துரையாடலைத் தொடரலாம் என்று காசிரையும், மிங்குவும் மகாராணியிடம் சொல்ல, எல்லோரும் என்ன சொல்றாங்களோ அப்படி செய்யலாம் என்றாள் அவள்.
அந்தப் பெண்கள் அனைவருக்கும் ராணியோடு சந்தித்துப் பேசுவதோடு, பிக்கல் பிடுங்கல் இல்லாமல் விருப்பப்படி உண்டு, பேசி, ஆடி இருக்க சந்தர்ப்பம் இது என்பதும் சந்தோஷமான விஷயம். அவர்கள் எல்லோரும் அடுத்து ஆட ஆசைப்பட்டார்கள். கலந்துரையாடல் அப்புறம் தொடரலாம் என்று முடிவானது. பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சே என்றாள் ஒருத்தி.
கூட்டமாக ஆடப் பிரியப்பட்டார்கள். கேரள பூமியில் சுற்றி நின்று ஆடியபடி நகரும் கைகொட்டிக்களியாக ’கொட்டும் ஞான் கேட்டில்லா’ என்று மலையாளியான ஒரு பெண் பதம் பாட, சுவடு வைத்து ஆடினார்கள். சென்னா ஒரு நிமிடம் எழுந்து நின்று கைதட்டி, ஆடாமல் நின்று களித்தாள்.
ஆட்டத்தின் சுவடுவைப்பு வேகம் அதிகமாகிக் கொண்டே போனது. ஆடாமல் ஓரமாக நின்றவர்களையும் ஆடத் தூண்டுவதாக, கூச்சத்தோடு ஒரு காலடி எடுத்து, கடலில் கால் வைத்து இறங்கி அலை கண்டு திரும்ப காலடி பின்னால் வைப்பதுபோல் ஆட ஆர்வம் ஆனால் பயம் என்று திரும்புகிறவர்களையும் மறுபடி ஆடப் போகச் சொல்வதாக, வேகமான அதிர்வுகளோடும் எளிய அபிநயங்களோடும் ஆட்டமும் பாடலும் நகர்ந்து கொண்டிருந்தன.
கைகொட்டி எழும் தாளங்களோடு ஆடி அலைந்து, நேரே அசைந்து, வலம்போய் திரும்பி, இடம் வந்து பின்வாங்கி, நின்று, அசைந்து, குதித்து, கால் பரப்பி, பாதம் ஒடுக்கி, கைகள் மேலோங்கித் தட்டி, கீழே இறங்கி, தாமரை மலர்வதுபோல் மெல்ல அதிர்ந்து மீண்டும் எழ, கொங்கைகள் குதித்துக் கும்மாளமிட்டு அதிர, ஒரு ராட்சச இயக்கமாகக் கூட்டுச் சேர்ந்து எல்லோரும் பாடி எல்லோரும் ஆடினார்கள்.
விருந்துக்கு வந்த, வெளிர்நீலக் கரை பிடவை அணிந்த மெலிந்த நடுவயது ஸ்திரி ஆடியபடியே கண் மூடி அனுபவித்து சென்னா மகாராணி மேல் மோதுகிறவள் போல் ஆட்ட வேகத்தில் நகர, மிங்கு அவளை மெல்ல இடது புறம் அசைந்தாடியபடியே அகற்ற, காசிரை அவளை நேரே மற்ற ஆட்டக்காரிகளோடு சேர்த்துவிட்டு ஆடினாள். சிவந்த அதரங்ககள் சற்றே பிரிந்து பூடகமாகப் புன்சிரிக்க, அவள் காசிரையைப் பார்த்த பார்வையை அகற்றினாள். ஒரு வினாடி நேரத்தில் அது நிகழ்ந்தது.
வெளிர்நீலக் கரை பிடவை உடுத்த மெலிந்த நடுவயது ஸ்திரி தன் கச்சில் கைவிட்டு முலைகளுக்கு மத்தியிலிருந்து ஒரு குறுவாளை எடுத்து மின்னல் போல் சென்னாராணியை நோக்கி பாய்ந்து வந்தாள்.
pic Dance in the middle ages in Europe
ack indianexpress.com