An excerpt from my forthcoming novel MILAGU
பைத்யநாத வைத்தியருக்கு சித்தம் கலங்கிப் பித்தம் தலைக்கேறி விட்டது. அவரோடு பழகாதவர்கள் பார்த்தால் அப்படித்தான் சொல்வார்கள்.
பின் என்ன? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, சிப்பம் சிப்பமாகக் கட்டி வைத்திருந்த உலர்ந்த வேரும் இலையுமான மூலிகையை அலமாரிக்கு உள்ளும், மருத்துவப் பெட்டியில் இருந்தும் எடுத்துத் தரையில் போட்டுக் காலால் மிதிக்கிறார்.
அவருக்கு உள்ளே இருந்து ஒரு வெறி அவரைக் கொண்டு செலுத்துகிறது. அவருடைய மருந்துப் பெட்டியில் இருந்து, மருந்து சேகர அறையில் இருந்து, வீட்டிலிருந்து, ஊர், நாடு ஏன் உலகத்தில் எங்கே நெல்பரலி தாவரம் இருக்கிறதோ அங்கே எல்லாம் இருந்து அதைப் பிடுங்கிப் போட்டு அழிக்க வேண்டும் என்ற வெறி அது.
ஊரோடு பேய் மிளகுக் கொடியைப் பிடுங்கிப் போட்டு அழிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், வைத்தியருக்கு பேய் மிளகை விடப் பெரிய எதிரி நெல்பரலி. ஜலதோஷ நிவாரணி, மலச்சிக்கல் லேகியம், நுரையீரல் அடைப்பு நீக்கி, ரத்த சுத்தம் செய்யும் தோஷாந்தக சூரணம் என்று நெல்பரலியை போன வாரம் வரை கொண்டாடினார் அவர். இப்போது இல்லை.
நெல்பரலி இல்லாமல் கோடிக்கணக்கான பேருக்கு ரத்தம் கெட்டுப் போகட்டும், இன்னும் சில கோடிபேர் ஜலதோஷத்தில் தும்மிக் கண் எரிந்து ஜுரம் தோன்றி, ஜன்னி கண்டு எதுவோ ஆகட்டும். நுரையீரல் அடைத்துக் கொள்ளட்டும். இனி வைத்தியர் யாரையும் ஸ்வஸ்தப்படுத்தப் போவதில்லை. நெல்பரலி அவருடைய மிங்குவை அவரிடமிருந்து பறித்து விட்டது. என்றென்றைக்குமாக. நெல்பரலி ஒரேயடியாக அழிந்து போகட்டும்.
மிர்ஜான் கோட்டையே அதிர்கிற மாதிரி, ஜெர்ஸோப்பா, கன்னட பிரதேசம் என்று இந்துஸ்தானத்தில் பாதி பூமி ஒரு வாரமாக இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது. ஜெருஸோப்பா மகாராணி சென்னபைரதேவி, மிளகு ராணி என்று உலகமே போற்றும் பெருமாட்டி, அவளை அவள் இருப்பிடமான மிர்ஜான் கோட்டையில் நுழைந்து ஒரு பெண் குத்திக் கொலை செய்ய முயற்சி எடுத்தாளாம். மகாராணியின் தாதிப் பெண் குறுக்கே விழுந்து தடுக்காமல் இருந்தால் ராணி ரத்தம் வெளியாகியே இறந்து போயிருப்பாள். அவள் மயிரிழையில் தப்பிப் பிழைக்க தாதிப்பெண் உடல்நிலை சீரடையாமல் மரித்தாளாம்.
ஒரு தகவலாக இதைப் பகிர்ந்து விட்டு வேறு ஏதாவது பற்றி அவரவர் பேச்சைத் தொடர, வைத்தியர் அப்படிக் கடந்து போக முடியாமல் அந்தக் கொடும் துயரத்தில் அமிழ்ந்திருக்கிறார். தாதிப்பெண் என்று ஒரு வெற்றுச் சொற்றொடர் இல்லை அவள். வைத்தியரின் பிரியமான மனைவி மிங்கு என்ற செண்பகலட்சுமி.
கடந்து போன வாரம் திங்கள் நள்ளிரவில் மிங்கு ரத்தம் இழந்து இறந்து போனாள். வைத்தியர் இன்னும் அந்தப் பொழுதில் தான் இருக்கிறார். மிங்கு மறைந்த அந்த துக்கம் சொட்டச் சொட்ட நனைத்த இரவு இன்னும் அவருக்கு விடியவில்லை.
அந்த இரவு இப்படி இருந்தது –
ஆஆஆ. பகவானே. கோகர்ணேஷ்வரா. வைத்தியரே. வலிக்குதே.
மிங்கு வலி தாங்க முடியாமல் முனகுகிறாள்.
மிங்குவின் படுக்கையை ஒட்டிய அறையில் மருத்துவச்சி ராஜம்மா, மிங்கு வலியில் முனகுவது கேட்டு எழுகிறாள். அவளைக் கவனித்துக்கொள்ள வைத்தியர் மருத்துவச்சியைக் கேட்டுக்கொண்டபோது ஒரு வார்த்தை சொல்லாமல் உடனே வெற்றிலைப் பெட்டியோடு புறப்பட்டு வந்து விட்டாள் அவள்.
மிங்குவைப் பார்த்துக் கொள்வது மட்டுமில்லை அவள் பொறுப்பு. மிங்கு கர்ப்பம் தாங்கியபோது மருத்துவச்சி பெற்றுப்போட்ட, இப்போது ஒரு வயதான குழந்தை கோணேஷன் என்ற கோகர்ணேசனுக்கு வேளாவேளைக்கு ஆகாரம் கொடுத்துப் போஷிப்பதும் மருத்துவச்சிக்கு வந்து சேர்ந்த பொறுப்பு. வேண்டாம் என்று விரக்தியில் எதையும் சாப்பிட மறுத்தாலும், வைத்தியருக்கு ஜீவன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கத் தேவையான குறைந்த பட்ச அளவு போஜனத்தை சமைத்து அளிப்பதும் மருத்துவச்சிதான். மிங்குவின் அம்மா உயிரோடு இருந்தால் இதைவிட ஒரு துளி குறைவாகத்தான் உழைத்திருப்பாள்.
மருத்துவச்சியின் சிறு உரலில் வெற்றிலை நசுக்கிக்கொண்டே ராராராரா என்று வார்த்தை இல்லாமல் பாடுகிறாள் மருத்துவச்சி. சுவர்க்கோழி கீச்சிடும் ராத்திரி நீண்டு போக, மிங்குவின் வலி முனகல் சற்றே மட்டுப்பட்டதை கவனித்தபடி மருத்துவப் பெட்டியை அணைத்து மிங்குவின் படுக்கை அருகே தளர்ந்து அமர்ந்து இருக்கிறார் வைத்தியர்.
pic medieval European Medicine Man
ack www.britainnica.com