an excerpt from my forthcoming novel MILAGU
ஏனோ நெல்பரலி மேல் அதி உக்கிரமான கோபம் ஏற்பட்டது அவருக்கு.
நெல்பரலி மேல் கோபப்படலாமா? ஆறறிவில் ஓரறிவும் இல்லாத வெறும் தாவரம் அது.
வேறே யார் மேல் கோபப்பட? எப்படி வாய் திறந்து சொல்வார்?
சென்னபைரதேவி மிளகு ராணி தன்முனைப்போடு செயல்பட்டு மிங்குவை அவளுடைய அன்புக் கணவர் பைத்யநாத் வைத்தியரிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டாள்.
சோறு போடும் கை அவளது. வைத்தியருக்கு மட்டுமில்லை, மெய்க்காப்பாளராக மிங்குவை நியமித்து அவளுக்கு கிட்டத்தட்ட சொல்லப்போனால் வைத்தியருக்கு மாதாமாதம் தருவதை விடவும் கூடுதலாக அளிக்கிறவள் மகாராணி. காசால் அடித்த விசுவாசமில்லை அது.
வைத்தியர் இன்னும் விடியாத, மிங்கு மரித்த ராத்திரியில் அமிழ்ந்திருக்க, குழந்தை அழுகுரல் அவரை இந்தக் காலை நேரத்துக்குக் கொண்டுவந்தது.
வைத்தியரின் ஒருவயதுக் குழந்தை கோணேஷன் அழ ஆரம்பித்திருக்கிறான். மிங்கு இல்லாத உலகத்தை பழகிக்கொள்ள வைத்தியருக்கே முடியாது என்றிருக்க, அந்த சிசுவுக்கு அம்மா இல்லாத தினங்கள் எத்தனை வருடம் துன்பத்தோடு கடந்து போக வேண்டி வருமோ.
கோணேஷன் மறுபடி சத்தம் அதிகமாக்கி அழ, வைத்தியர் அவன் படுத்திருந்த தொட்டிலின் அருகே போனார். கையில் எடுத்துக்கொள்ளச் சொல்லி கண்களால் கெஞ்சலான அழைப்பு விடுக்கிறான்.
கண்ணில் நீர் நிறைய வைத்தியர் முரட்டுப் பிடிவாதத்தோடு அவனிடமிருந்து விலகி வெளியே போக, மருத்துவச்சி அவசரமாக உள்ளே வந்து முறையிடுகிறாள் –
ஏன் மாப்ளே, பிள்ளை என்ன கத்து கத்துது என்ன அதுக்கு பசியா வவுத்து வலியான்னு பிள்ளைக்கு அப்பனாகத்தான் வேணாம், பிள்ளையைப் பார்க்க வந்த மருத்துவனாவது பார்க்க வேணாமா?
கண்டிக்கிற தொனியில் கேட்டாள் மருத்துவச்சி.
வைத்தியர் அவளுடைய வழியை மறைத்துக் கொண்டு நின்றார்.
விலகும். விட்டு விட்டு அழுது பசியாத்தான் இருக்கும். பசும்பால் கிண்டியிலே அடைச்சுத்தரச் சொன்னேனே, காய்ச்சி சர்க்கரை போட்டிருக்கீங்களா? அது பசும்பால் தானே, எருமைப்பால் இல்லையே? காய்ச்சினீங்களா? காய்ச்சும்போதே சர்க்கரையைப் போட்டுக் கலந்திருக்கலியே? காய்ச்சினபோது முழுக்கக் காஞ்சு நுரையோட பொங்கி வர்ற வரைக்கும் பொறுமையா இருந்தீங்க இல்லே?
அடுத்த தொகுதிக் கேள்விகள். ஆமாம் என்ற பதில் கட்டாயம் வேண்டுபவை அவை.
என் வெத்திலை செல்லமும் உரலும் சமையல்கட்டுலே வச்சுட்டேன். கொஞ்சம் எடுத்து வந்துடும். புண்ணியமாகப் போகும்.
மருத்துவச்சி வைத்தியரை பதிலாக ஒரு வார்த்தை கூடச் சொல்ல அனுமதிக்காமல் படபடவென்று கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்பதை சாதாரண தினமாக இருந்தால் மதித்திருக்க மாட்டார். சிரித்திருப்பார்.
வீட்டுக்கு மருத்துவச்சி அவ்வப்போது வரும்போது, வைத்தியர் சிரிக்காவிட்டாலும் மிங்கு அவரைத் தூண்டி சிரிக்கச் சொல்லி ஜாடை காட்டுவாள். மருத்துவச்சிக்கு அவளுடைய செல்லப் பெட்டியும் தாம்பூலம் இடிக்கும் சின்ன உரலும் பெரிய ஆஸ்தி.
மருத்துவச்சி குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டாள். அவளுக்கும் குழந்தைக்கும் பொதுவான ஏதோ மொழியில் அவனை பாலுண்ண கூப்பிட்டாள். பால் என்றதும் கிண்டி பக்கம் வந்த குழந்தை வேண்டாம் என்று மறுத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டது.
“மாப்பிள்ளே, பனகுடியிலே இருந்து ஷெட்டியாரும் வீட்டம்மாவும் வந்திருந்தாங்க.
அவள் சொல்லி முடிப்பதற்குள் வைத்தியர் தேம்பும் குரலில் சொன்னார்- அக்கா மீங்கு போய் ரெண்டு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளே மகனையும் சேர்த்துத் தொலைக்கணும்ங்கறீங்களா?
யார் மாப்பிள்ளை தொலைக்கச் சொன்னது. உங்க மகன் தான் எங்கே இருந்தாலும். ஷெட்டியார் அவனை தன் மகன் போல் விரல்லே எல்லாம் வைர மோதிரம், கழுத்திலே தங்கச் சங்கிலி, இடையிலே தங்கத்திலே அரைஞாண் அப்படீன்னு வைரம் தங்கம் வைடூர்யம்னு வச்சு இழச்சுட மாட்டாரா?
அவனுக்கு பசி வந்தா வைரமும் வைடூர்யமும் நேரத்துக்குத் தந்து பசியாற வைக்க முடியுமா? அதுக்கு பால்சோறும், கம்பங்களியும், உளுந்து தோசையும் ஒரு நிமிடம் கூட தாமதமில்லாமல் செஞ்சு தரணும். அது இப்போதைக்கு நீங்களும் நானும் தான் செய்துதர முடியும்.
வெற்றிலை படிக்கத்தைத் தேடி எடுத்து முன்னால் வைத்து துப்பிக்கொண்டு மருத்துவச்சி சொன்னாள் –
ஷெட்டியார் வீட்டிலா ஆகாரத்துக்கு குறைவு? அவுங்க வீட்டு வாசல்லே சாப்பிட்டுப் போடற எச்சில் வாழை இலையே கமகமன்னு தெருக்கோடி வரைக்கும் நெய் வாசனை அடிக்கும். அப்பளத்தைக் கூட புத்துருக்கு வெண்ணெய் காய்ச்சி வந்த நெய்யிலே தான் பொரிச்செடுப்பாங்க. தினம் ஜாங்கிரி, பொங்கல்னு நெய் வடியற பலகாரம். பிள்ளையை கையிலே பிடிக்க முடியாது.
வைத்தியர் மௌனமாக மிங்கு நினைப்பில் மூழ்கி இருந்தார். பூசினாற்போல் உடம்பும், நாசி எந்த நேரமும் இன்னும் கால் அங்குலம் வளரப் போகிறேன் என்று அறிவித்துக் கொண்டிருக்கும் துடிப்பும், கண்ணால் சிரிக்கும் அழகும், வழுவழுத்து நீண்ட காது மடலும், சிறிய சீன உதடுகளுமாக அவள் இந்த வீட்டுக்குள் தான் கண்ணில் படாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
குழந்தைக்கு பால்சோறு ஊட்டச் சொல்லி அவள் வற்புறுத்துவது வைத்தியரின் உட்செவியில் கேட்கிறது.
அக்கா, கொஞ்சம் போல சோறு குழைய வடிக்கறீங்களா.
ஏன் மாப்ளே, வயிறு சரியில்லையா?
அது இல்லே அக்கா, இவனுக்கு பால்சோறு கொடுத்துப் பார்க்கலாம். ஆச்சு கிட்டத்தட்ட ஒரு வயசு.
தரலாம்தான். குருவாயூர்லே சோறூண் முடிச்சுட்டு எந்த தினமும் தொடங்கலாம் மாப்ளே.
சோறூண் முடிக்கக் காத்திட்டிருக்கறதுக்கு இங்கே இருந்தே குருவாயூரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு பிள்ளைக்கு இன்னிக்கே பசியாற்றிடலாமே.
pic Medieval Doctor
ack en.wikipedia.org