பெரு நாவல் ‘மிளகு’ – in which the Medicine Man attempts to contact his late wife

An excerpt from my forthcoming novel MILAGU

திடீரென்று ஒரு ராத்திரி தூங்கி எழுந்து முப்பது பெண்களை, யாரென்று தெரியாது, எல்லோரும் ஜெருஸோப்பா பிரஜைகள் அவர்களை கோட்டைக்கு காலை ஆகாரம் கூட இருந்து சாப்பிட அழைக்க ஏற்பாடு செய்யச் சொன்னாள் ராணி. மிங்கு தலையில் பெரும்பாலும் விழுந்த கடமை இது.

வைத்தியா நீ ஏன் ஒண்ணும் சொல்லாமல் நிற்கிறே என்று கேள்வி வேறே.

அப்போது வைத்தியர் சொன்னார் – அம்மா, இந்த விருந்துகள் பாதுகாப்பை பதம் பார்க்கக் கூடியவை. முப்பது பெண்களை ஒவ்வொருத்தரின் பின்னணி, குடும்பத்தினர், நண்பர்கள் இப்படி எல்லோருக்கும் விரிவாக குறிப்பு தயார் செய்து தேர்ந்தெடுத்தால் பாதி ஜாக்கிரதையாக இருந்தால் போதும்.

சொன்னது மருத்துவனாக இல்லை, உளவுத்துறை அதிகாரியாக.

மதிக்கவே இல்லை ராணியம்மா. மிர்ஜான் கோட்டையின் அமைப்பு ரகசியங்கள் அதிகம் பேருக்குத் தெரியாமல் இருக்க கோட்டைக்குள் வரும் போகும் நபர்களை ஆகக் குறைவாக அனுமதித்து இல்லாத கெடுபிடி எல்லாம் கொடுப்பாள் மிளகு ராணி. அதைவிட பத்து, நூறு தடவை அதிகமான ஜாக்கிரதை தேவைப்படும் இந்த மாதிரியான  போஜன விவகாரங்களை ஒன்றும் ஆகாது என்று வீம்பாக இழுத்து விட்டுக் கொண்டால் என்ன ஆகும்?

ராணிக்கு ஒன்றும் ஆகாது. அவள் தாதி தலையில் தான் ராணியின் அஜாக்கிரதை வந்து விடியும். விடியாமல் போனது.

நெல்பரலி மூலிகைக்கு நடுவே சென்னா ராணியின் முகத்தைக் கற்பனை செய்து காலால் ஓங்கி மிதிக்கக் காலை உயர்த்தினார் வைத்தியர். காலைப் பின்னால் இழுத்துக் கொண்டார். அவரால் முடியாது. மிங்கு கண்டிக்கிறாள்.

ராணியம்மா, வயதுக்கும், என் அம்மா வயசு என்று மதிப்புக்கும் அவதூறு செய்யும் விதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று அவர் உடல் நடுங்கியது.

மிங்கு நான் தவறாக அப்படி நினைத்து விட்டேன். மன்னித்துக்கொள் என்று மிங்குவிடம் காலைப் பற்றிக்கொண்டு மன்னிப்பு கேட்க வேணும் என்று தோன்றியது வைத்தியருக்கு.

மிங்கு. நீ எங்கே இருக்கே? உன் மரணம் துர்மரணமா? அப்போது நீ ஆவியாக அலைகிறாயா? எப்படி உன்னை அமைதிப்படுத்துவது? வாயைத் திறந்து பேசு, மிங்கு மிங்கு என்று முணுமுணுத்தபடி வெறும் தரையில் அசதியோடு சாய்ந்து கிடந்தார்.

அவர் விழித்தபோது பின்மாலை பொழுதாகி இருந்தது.

அவர் ஒரு தீர்மானத்தோடு கிளம்பினார். சாரட்டை ரத சாரதி வேண்டாம் என்று அனுப்பிவிட்டு அவரே ஓட்டிப் போனது ஹொன்னாவரில் ரதவீதிக்கு.

இனிப்பு அங்காடி வாசலில் நின்றவரை மாடியில் இருந்து நேமிநாதன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கீழே வந்தபோது நான்கு நாள் தாடியும் கலைந்த தலையுமாக பைத்யாநாத் வைத்தியர் புயலில் அடிபட்ட புறா போல் நடுங்கி நின்றார்.

வைத்தியரே. ஆழ்ந்த அனுதாபங்கள், மிங்கு போனபிறகு நீங்க ஒரேயடியா கலங்கிப் போனது தெரியும். ஒரு தாதி இறந்தா ராணியம்மாவுக்கு ஒண்ணுமில்லே. ஒரு மனைவி இறந்தால் சாமானியனுக்கு வரும் துன்பம் அவங்களுக்குப் புரியாதுதான். சொல்லுங்க, நான் என்ன செய்யணும் என்று விசாரித்தபடி வைத்தியரின் கையைப் பற்றிக் கொண்டான் நேமிநாதன்.

வைத்தியர் குலுங்கக் குலுங்க அழுதார். அப்புறம் சொன்னார் – மிங்குவோட பேசணும் என் மிங்குவோட ஒரு தடவையாவது ஒரு நிமிஷமாவது பேசணும் ராஜகுமாரரே என்று யாசித்தார் மெல்லிய குரலில்.

ஓ அதுக்கென்ன ஆவியை அழைக்கிறவங்க மேலே தான் இருக்காங்க. நீங்க அங்கே போங்க என்று நேமிநாதன் சொல்ல முடியாத திருப்தியோடு வைத்தியரை மேல்மாடிக்கு அனுப்பினான்.

பத்து நிமிடம் கழித்து அங்கே பலகையில் சதுரங்கள் ஊடாகக் காய் நகர்ந்தது. ஆவி வந்து சேரவில்லை.

pic medieval singleton

ack medieval.eu

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன