Excerpts from my forthcoming novel MILAGU
மிர்ஜான் கோட்டை குதிரை லாயத்தில் பேராய அவை கூடப்போகும் பின்மாலைப் பொழுது. இந்தக் கூட்டம் இன்று இரவிலும் நீண்டு கொண்டு போகும். விடிகாலையிலாவது முடியுமா என்பது சந்தேகமே என்று வகுளாபரணன் நினைத்தான்.
ஜெருஸோப்பா அரசின் உப பிரதானிகளில் ஒருவன் வகுளாபரணன். பேரிளைஞன். சென்னபைரதேவி மேல் மதிப்பும் அன்பும் கொண்டவன். நேமிநாதனுக்கு உற்ற தோழன். ஜெரஸோப்பாவின் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் சிலரில் வகுளன் என்ற வகுளாபரணனும் ஒருவன்.
இன்றைக்கு கூட்டத்தில் நேமிநாதனும் வந்திருந்தால் பேச வேண்டிய, பேசித் தீர்க்க வேண்டிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். தீர்வு காணாவிட்டாலும் அதற்கான தேடலில் சுவடு வைக்கலாம். ஆனால் என்ன செய்ய? நேமிநாதன் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறான்.
வகுளனுக்கு இது சம்பந்தமாக சென்னா மகாராணி மேல் கோபம் ஏற்பட்டது உண்மைதான். அம்மா பிள்ளை தகராறு என்றால் அவர்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டியதுதானே? கிட்டத்தட்ட அற்ப விஷயம். மழைநாள் பிற்பகலில் கடலைமாவு பட்சணத்தை நொறுக்குத்தீனியாக மென்றபடி ஜன்னலுக்கும் பாதி திறந்த கதவுக்கும் அந்தப் பக்கம் மழை சீராகப் பெய்வதைப் பார்த்தபடி பேசிக் கொண்டே இருந்தால் அடுத்த ஈடு கடலைமாவு பலகாரம் வருவதற்குள் பேசி முடித்துத் தீர்வு கண்டு, உற்சாகமாக சேர்ந்து சாப்பிடலாம். மழை நின்று போனாலும் சரிதான்.
நல்ல வேளை. மிர்ஜான் கோட்டைக்குள் வரத்தான் தடை விதித்திருக்கிறார் மகாராணி. அதுவும் நேமிநாதனுக்கு மட்டும் தான். அவன் மனைவி ரஞ்சனா தேவி இங்கே எப்போதும் போல் இருக்கலாம். நேமிநாதன் ஹொன்னாவரிலும் ஜெரஸுப்பாவிலும் போக வர இருக்கிறான். அங்கே நடமாட, வசிக்க எந்தத் தடையும் இல்லை. இப்படி ஒரு தடை ஏற்படுத்துவதற்கு எதுவும் இல்லாமலேயே இருக்கலாம். அரச குடும்பம். விமர்சனம் செய்யக்கூடாது.
வளர்ப்பு மகனைத் தன் வாஞ்சையில் இருந்தும் கரிசனத்தில் இருந்தும் விலக்கி வைத்திருப்பதாகக் காட்ட மிளகு ராணிக்கு திடீரென்று என்ன அவசியம் ஏற்பட்டுவிட்டது என்று வகுளனுக்குப் புரியவில்லை. அல்லது இருவரும் பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்களா? அதுவும் தெரியவில்லை. யாருக்கு இதைக் காட்ட வேண்டும்?
சென்னா ராணி இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேரவைக் கூட்டத்தில் நேமிநாதனும் பங்கெடுக்க வசதியாக, இன்று மட்டும் கோட்டை நுழைவுத் தடையை அமலாக்காமல் வைத்திருக்கலாம். அல்லது இந்தப் பேரவைக் கூட்டத்தை கோட்டைக்கு வெளியே நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம். அவன் வரவேண்டும் என்று ராணி விரும்பியிருந்தால் இதைச் செய்திருக்கலாம். அப்படியே ஏற்பாடு செய்தாலும் நேமிநாதன் வர வேண்டுமே. ரெண்டு ஆப்பை ரெண்டும் கழண்ட ஆப்பை என்று வகுளனின் அப்பனாத்தாள், என்றால் பாட்ட, தமிழில் இந்தப் பழமொழி சொல்லி வளர்த்தது வகுளனுக்கு நினைவு வரவே சிரித்துக்கொண்டான்.
குதிரை லாயத்தில் கூட்டம் நடத்தலாம் என்றால் கோட்டைக்கு வெளியே நடத்த என்ன சிரமம்? என்ன மாதிரி பேரிடரோ சின்ன இடரோ இதில் உண்டு? ஒன்றும் இல்லை. ஜன்மப் பகைவர்களா அம்மாவும் பிள்ளையும்?
சென்னா மகாராணி நேமிநாதனை பகிரங்கமாகக் கண்டித்துத்தானாக வேண்டும் என்றால் அது அவன் அரசாட்சி கேட்பதற்காக இருக்காது. வீட்டில் கிளிபோல் ரஞ்சனாதேவி என்ற புத்திசாலியும் அடக்கமும் அழகும் கொண்ட மனைவியை வைத்துக்கொண்டு மிட்டாய் அங்காடிக்காரி மேல் மையல் கொண்டு அவளே எல்லாம் என்று பிடவை விலகிய தொப்புள் தரிசித்து, சதா பிடவைத் தலைப்பு வாசம் பிடித்துக்கொண்டு போகிறானே அந்த அநியாயத்துக்கு வேண்டுமானால் விசாரிக்கலாம்.
அவனை விட ஏழெட்டு வயது பெரியவளாம் மிட்டாய்க்காரி. அவளோடு ரமித்தால் ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று ஓடி வந்து சேராதா? வகுளன் தலையைக் குலுக்கினான். வராது போலிருக்கிறது. வரும் என்றால் இந்நேரம் பெண்சீக்கு முகத்திலும் உடம்பிலும் தூலமாகத் தெரிய, மருந்து தின்றுகொண்டிருப்பானே நேமிநாதன். யோசித்தபடி வகுளன் அமர்ந்திருக்க, சாரட் குதிரை லாயத்து வாசலில் நின்றது.
ஏழு பிரதானிகள், வகுளனையும் சேர்த்து மூன்று உப பிரதானிகள், ஒரு தளவாய். உளவுத்துறை சார்பில் பைத்யநாத் வைத்தியர். சென்னபைரதேவி அரசி, பேரவை முழுவதும் கூடியிருக்கிறது. வகுளன் அரசி பக்கத்தில் வெற்றிடமாக இருந்த நாற்காலியைப் பார்த்தான். நேமிநாதனுடையது அது. அவன் இல்லாமல் என்ன முடிவுகள் எடுக்கப்படும்? எடுத்தாலும் நடைமுறைப்படுத்தப் படுமா?
சென்னபைரதேவி உள்ளே வரும்போது எப்போதும் புன்னகையும், கையசைத்து ஒவ்வொருவரையும் வணங்குவதும், பதிலுக்கு வணக்கமுமாக இருக்கும். பேரவை உறுப்பினர்கள் ஜெயவிஜயீபவ ஜபித்து மிளகுராணி வாழ்க என சேர்ந்து முழங்குவதும் நடைபெறும். இன்று எந்த முழக்கமும் இன்றி பேரவை ஒட்டுமொத்தமாக எழுந்து நின்றனர். ராணி அமர்ந்தபிறகு அவர்கள் சத்தமின்றி இருக்கைகளில் அமர்ந்து ராணியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சென்னா உரையாடலைத் தொடங்கி வைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் தெரிந்தது.
PIC Medieval royal cabinet meet
Ack britannica