An excerpt from my forthcoming novel MiLAGU
சென்னபைரதேவி மகாராணி மேல், கோவிலும் பசதியுமாகக் கட்ட வாரி இறைத்து கஜானாவை காலியாக்குகிறதாக வெகுஜனக் கோபம் இருக்கிறது. அது நேமிநாதனுக்கு ஆதரவாக மாறவில்லை என்பதே உண்மை. இதைச் சொன்னால் கார்டெல் சும்பன்கள் கவனிக்காமல் என் கையிடுக்கு வியர்வை ஈரத்தில் ஒற்றி முத்தமிட காமம் மிகுந்து உதடு சுழிக்கிறார்கள். அல்வாரீஸ் தடியன், நேமி நாசக்காரன் பார்க்காதபோது, என் முலைகளைக் கசக்குவேன் என்று கண்ணடித்து சைகை காட்டுகிறான். காமத்தில் சுழலும் உலகம் இது. போர்த்துகீஸோ இந்துஸ்தானியோ உடம்பு பசித்தவர்கள் எல்லா ஆண்களும்.
என் கொங்கைகள் மதர்த்து இருக்கட்டும். என் சொந்தக் கொள்கை வழிமாறியதா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வேன். இல்லை என்றும் புகல்வேன். இது அரசியல். சரித்திரம் நிகழும்போதே திருத்தப்படுகிறது.
மிளகு ராணி வம்சத்தை நிர்மூலப்படுத்த மனதில் வரிந்தபோது அந்த வம்சம் இனி இல்லாமல் செய்வேனென சூளுரை செய்தது நிஜம். வம்சம் என்றால் நேமிநாதனும் அடக்கம். அவனை அடக்கம் பண்ண வழி தேடாமல் அவன் பிருஷ்டம் சிம்மாசனம் ஏற அண்டக் கொடுத்துத் தாங்குவதும் என்கைதான்.
அது மட்டுமில்லை, அவன் விரல் சுண்டிய பொழுதெல்லாம் உடுப்பு களைந்து முயங்கிக் கிடந்ததும், கிடந்ததும் என்ன, கிடப்பதும் நான் தான். அதற்காக என்ன எல்லாம் செய்கிறேன்.
சென்னாக் கிழவி உறங்கும்போது அவளுடைய முடிக்கற்றை ஒன்றையோ நகத்துணுக்கை வெட்டியோ கொண்டு வந்தால் சீன மந்திரவாதம் செய்து அவள் சீக்கிரம் செத்தொழிய வழிசெய்கிறேன் என்றான் ஆப்பிரிக்க மந்திரவாதி வெகுமுன்பு. மயிருக்காக ராத்திரி கோட்டைச் சுவரேறிக் குதிக்க ஆளைப் போட்டு காசு கொடுத்து கோட்டைக்குள் அனுப்பினோம். மயிர் பெறாத வேலை அது. கிழவி தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கெடுத்தாள். ஆப்பிரிக்க ஆண்குறிகள் கள்ளத்தனமாக ஊடுருவும் பெண்குறிகளுக்குள் அப்படியே அவற்றை இறுகிப் பிடித்துச் சிறை வைக்க மந்திரம் போடும் அந்த மந்திரவாதி மூதாட்டி தலைமுடியை பிடுங்க முடியாமல் திரும்பிப் போனான்.
நேமிநாதனுக்கு ஆலிங்கனத்துக்கு நடுவே அரசாட்சி பற்றியும், கலவிக்கு அப்புறம் கல்வியாக அடிப்படைப் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்வது முடிவடைவதாகத் தெரியவில்லை. நான் சொன்னபடி பேசி நடந்து, பில்ஜி அரசன் திம்மராஜுவிடமும், கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கரிடமும் சென்னாவுக்கு எதிரான நிலை எடுக்க ஆதரவு வாங்கி வந்தான் நேமி. என் தலையணை மந்திர உபதேசம் எல்லாவற்றுக்கும் காரணம்.
ஒரு பகல் முழுவதும் அடங்கிக் கீழிருந்து கூடி அவன் மனதில் துணிச்சலை உருவாக்கி, சென்னாவிடம் பாதி மாநிலம் அரசாளக் கேட்க ஆள் அனுப்ப வைத்தேன். கிழவி கொடுப்பாள் என்று நம்பிக்கை இல்லை என்றாலும் நேமியை ஒரு சுக்கும் மதிப்பில்லாத சாதுப் பிராணியான பாச்சைப் பூச்சியாகக் காலால் புறந்தள்ள முடியாது இனி.
அந்தக் கோரிக்கையோடு நடந்த நேமியின் பிரதிநிதியான உப பிரதானி வகுளாபரணன் சென்னாவின் பிடிவாதத்தால் வெறுப்புற்று யுத்தம் வரும், ஆட்சி மாறும் என்று பிரகடனப்படுத்தி வந்தது நான் எதிர்பார்த்தபடிதான்.
யுத்தத்தில் ஜெயித்தால் நேமிநாதன் என்னை அரசியாக்குவதாக ஆரம்பத்திலேயே வாக்குறுதி செய்திருக்கிறான். தோற்றாலோ, இருக்கவே இருக்கிறது என் மாற்றுத் திட்டம் –
ஜெருஸூப்பா மாநிலத்துக்கு நான் தொழில் முதலாகக் கொண்டு வந்த, அது பல்கிப் பெருகி பெருந்தனமான ஸ்தாவர ஜங்கம சொத்துகள் எல்லாவற்றையும், அல்லது கூடிய மட்டும் எல்லாவற்றையும், இங்கிருந்து எடுத்துக் கொண்டு வெளியேறுவது நிறைய யோசித்து உருவாக்கிய மாற்றுதிட்டம். அந்த சொத்துக்களை பசும்பொன் ஆக மாற்றி எடுத்துப் போவதே உத்தேசம்.
பொன்னாக மாற்ற முடியாத வெள்ளிப் பாத்திரங்கள், செம்பு, வெங்கலம், கடைசி நேரத்தில் பொன்னாக்கி எடுத்துப் போக முடியாத தங்கம் எல்லாம் பின்னொருநாள் மீண்டும் வரும்போது மீட்டெடுக்க இங்கே ஜாக்கிரதையாகப் புதைத்து வைத்து விட்டுப் போவதும் திட்டத்தில் அடக்கம். ஆழக்குழி தோண்டி உள்ளே இட்டுப் புதைத்த வெள்ளியை, வெங்கலத்தை, கொஞ்சம் போல் தங்கத்தை பூடகமான வரைபடங்கள் மூலம் மறுபடி தோண்டி எடுக்கலாம். அதாவது நேமியின் படையினர் வெற்றி பெறாவிட்டால் ஏழெட்டு வருடம் சென்று அமளிதுமளி முடிந்தபிறகு , புதைத்ததை மறுபடி அகழ்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
சொத்துக்களை விற்றுத் தங்கம் வாங்கிச் சேகரிப்பது செய்ய வேண்டிய காரியமாக நாடு முழுவதும் பரவியதும் ஜனங்கள் அவரவர் ஆஸ்தியை தங்கமாக்கப் பரபரத்து ஜெருஸோப்பாவின் நிதிநிலைமை ஆட்டம் கண்டது உண்மை. நான் எதிர்பார்க்காது கார்டெலுக்கும் எனக்கும் கிடைத்த வெற்றி.
ஜெர்ஸோப்பாவில் வீடுகளை இடித்து வெள்ளி, வெங்கலம், செம்பு, கொஞ்சம் தங்கம் புதைத்து பேய் மிளகு விதைப்பதை நிறைவேற்ற கிட்டத்தட்ட முழுநகரமுமே காத்திருக்கிறது. யுத்தம் வரட்டும்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் கூடிய சீக்கிரம் மாற்றுத் திட்டத்தை நடப்பாக வேண்டியிருக்கலாம். தங்கமாக்குதல் கிட்டத்தட்ட நடந்திருக்கிறது.
இயற்கையே என் மாற்றுத் திட்டத்துக்கு ஆதரவு தருகிறது என்று தோன்றுகிறது. கிறுக்கு பிடித்த, ஓய்வு பெற்ற போர்த்துகல் தூதரும், ஓய்வு பெற்ற அரைக் கிறுக்கன் விக்ஞானியும் மிளகுக் கொடி திருடி நலுங்காமல் குலுங்காமல் போர்த்துகல் கொண்டு போய் அங்கே பதியன் போட்டு வளர்க்கிறேன் பேர்வழி என்று கிளம்பினார்கள். எங்கேயோ தூக்கத்தில் யுகக் கணக்காக காட்டுத் தாவரமாக, பாறைச் செடியாக மறைந்து அசந்து கிடந்த பேய் மிளகுக் கொடியை நாட்டுக்குள் வரவழைத்து விட்டார்கள்.
pic medieval black magicians
ack nationalgeographic.co.uk