An excerpt from my forthcoming novel MILAGU
பில்கி குறுநில மன்னர் திம்மராஜு பயணம் போவதை அவ்வளவாக விரும்பாதவர். கையிலே ஆயிரம் வேலை வந்து உக்கார்ந்திருக்கு கால்லே சக்கரத்தை மாட்டிக்கிட்டு ஊர் சுற்றக் கிளம்பிட்டா எப்போ முடிக்கறது?
அவரானால் இப்போது இந்த கார்த்திகை மாதம் பிறந்ததும் சுறுசுறுப்பாக எல்லா திசையிலும் பயணம் போய்க் கொண்டிருக்கிறார். ஒற்றை சாரட் போதவில்லை. குதிரைகள் களைப்படைந்து விடுவதால் இரண்டு நாட்களுக்கு மேல் அவற்றை மாற்றி வேறு ஜதைகளைப் பூட்ட வேண்டியுள்ளது.
சாலைகள் விஜயநகர பராமரிப்பும், சிறு மாநில பராமரிப்பும் சரிவர நடத்த வேண்டிய பணமின்றி குண்டும் குழியுமாக வண்டியின் அச்சைக் கடகடக்க வைத்தோ, இன்னும் மோசம், அச்சு முறிய வைப்பதால் சாரட்டையும் மூன்று நாளுக்கு ஒருதடவை மாற்ற வேண்டியிருக்கிறது.
இந்தத் தொல்லைக்குத்தான் உச்சிப் பிள்ளையாராக எங்கேயும் போகாமல் இருக்கப்பட்ட இடத்தில் செய்யவேண்டிய வேலையைப் பார்த்திருப்பார் அவர். ஆனால் இப்போது கிளம்பித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை.
எல்லாம் வைத்தியர் காரணமாகத்தான். ஜெருஸுப்பா மாநில அரசு வைத்தியர் பைத்தியநாத் ஜெருஸுப்பா அருகே அமைந்த உள்ளால் பிரதேசத்தின் மகாராணி அப்பக்கா, பட்கல் அரசர், பில்கி மாநில அரசர் திம்மராஜு, பர்கூர் ராஜா, அங்கோலா ராஜமாதா, பைந்தூர் முக்ய பிரதானி இப்படி ராஜ வம்ச அரசியல் பிரபலங்களுக்கு எல்லாம் ஆஸ்தான வைத்தியர். உத்தர கன்னட பிரதேசத்தின் மருத்துவர்களில் அதிமுக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறவர் அவர்.
‘மற்றவர்கள் இரண்டு வாரத்தில் குணப்படுத்தினால் பைத்யநாத வைத்தியர் வெறும் பதினாலு நாளில் குணப்படுத்துவார்’ என்று கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் கூட அரசவை கூட்டத்தில் கண்சிமிட்டியபடி குறிப்பிட்டதாக செய்தி.
வைத்தியர் சுய ப்ரக்ஞையோடு எப்போதும் வைத்தியம் செய்யும்போது யாருக்கும் எதுவும் தாறுமாறாகப் போகாது. ஆருயிர் மனைவி மிங்கு இறந்தபிறகு வைத்தியர் துயரத்தைத் தாங்க முடியாமல் சதா குமைகிறார்.
அவருடை திடமான மன-நினைவு அமைப்பு ஒரு பக்கத்தில் அந்த இழப்பை சுமந்து பழகிக் கொள்ள அவரைத் தயார்ப்படுத்தியது. இன்னொரு பக்கம், ராணி சென்னபைரதேவி மேல் அடங்காத கோபம் வளர்த்துக் கொண்டிருந்தது.
அடுத்த பக்கம் இப்படி- சென்னபைரதேவி மகாராணி இல்லாவிட்டால் நான் ஏது எனக்குக் கிடைத்த பேர் ஏது, மிங்கு இறந்ததற்கு மறைமுகமாகக் கூட மிளகு ராணி காரணம் இல்லை, இப்போது ரத்த அழுத்தமும், ஒற்றைத் தலைவலியும், குடல் புண்ணுமாக அநாதையாக ஒவ்வொரு நாளும் கல்லறையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள் பாவம்.
வைத்தியர் நேமிநாதனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது முதல் நிலை குலைந்து போயிருக்கிறாள். எல்லாவற்றுக்கும் யார் காரணம்? இதை வைத்தியரின் உள்மனது அடிக்கடி சிந்திக்கிறது.
உள் மனதின் இன்னொரு பக்கம் வைத்தியனுக்கும் வாத்தியானுக்கும் ஆட்டக்காரனுக்கும் மல்லனுக்கும், சித்திரக்காரனுக்கும் பாட்டுக்காரிக்கும் அரசியல் வேணுமா என்று விரிவாக அலசிக் கொண்டிருக்கிறது.
இப்படி ஏகப்பட்ட பக்கத்தில் வைத்தியரின் மனம் மாறி மாறி சஞ்சரிப்பதால் அவருடைய சுயபிரக்ஞை அவ்வப்போது தவறிக் கொண்டிருக்கிறது.
விளைவு போனவாரம் பில்கி அரசர் திம்மராஜுவுக்கு ஏற்பட்டது. வயிறு உப்புசம் பாரித்து திம்மென்று ஊதிப் போனது திம்மராஜு காருவுக்கு.
பைத்யநாத் வைத்யுதுனி பிலவு.
அழைத்து வந்தார்கள். வந்த சாயந்திரம் மகாராஜா உடலை சீராக பரிசோதித்து நாடி பார்த்து நாசியில் மூச்சு வந்து திரும்பும் நிலை எல்லாம் மனதிலாக்கினார் வைத்தியர். மேல் வயிற்றில் புரட்ட தைலம், சாப்பாட்டுக்கு முன் ஒரு மடக்கு குடிக்க வேண்டிய கஷாயம், சாப்பாட்டுக்கு அப்புறம் விழுங்க வேண்டிய குளிகை என்று கிரமமாகத் தயாரித்தார்.
இதெல்லாம் வைத்தியர்கள் கையோடு கொண்டு வந்து தேவைக்கு ஏற்றது போல் விநியோகிக்கும் சராசரி மருந்துகள். ஆனால் ராஜாவுக்கு மதுமேகம் அதிகமாகி அந்த நீரிழிவால் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து அளவுக்கு மீற, அவருக்காக மருந்துகளில் மூலப்பொருள் சேர்மான விகிதங்களை மாற்றினார் வைத்தியர்.
அதுவும் சரிதான். ஆனால் அப்புறம்? மருந்து உண்டாக்கும்போது அவரே கொண்டுவந்த சிறு குமுட்டி அடுப்பில் விறகுக் கரி கொளுத்தி எதையோ காய்ச்சும்போது ரெண்டு தடவை மிங்கு அடி மிங்கு என்று மனசின் ஆழத்திலிருந்து குரல் எடுத்து அழைத்ததை பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் அரண்மனை சமையல்கட்டில் கேட்டார்கள்.
பரபரவென்று அடுப்பை வெறித்துக்கொண்டு பைத்யநாத வைத்தியர் அடுத்து பில்கி மகாராஜாவுக்குத் தயாரித்துக் கொடுத்த களிம்பை உடம்பில் பூசினால் பிசுபிசுவென்று ஒட்டிக்கொள்கிறது. கஷாயத்தை முழுங்கினால் குமட்டிக்கொண்டு வருகிறது. குளிகை வாயில் போட்டால் கரையாமல் அப்படியே கசந்து வழிகிறது.
வேறொன்றுமில்லை. தடவ வேண்டியதைக் குடிக்கவும் குடிக்க வேண்டியதைத் தடவவும் குளிகையை அடுப்பில் வறுத்தும் ஏதோ செய்துகொண்டு மிங்கு நினைப்பில் மனம் தடுமாறிப் போன வைத்தியரைப் பார்த்து பில்கி அரசர் திம்மராஜுவுக்கே துயரமாகிப் போனது.
ஆனால் துயரம் வயிற்று உப்புசத்தை சரிபண்ணிப் போடாதே.
PIC Medieval Medicine Man at work
Ack historycollection.com