பெரு நாவல் ‘மிளகு’ – Bite the bullet and break a leg

An excerpt from my forthcoming novel MILAGU

வேறே சிறந்த வைத்தியரைத் தேடி நாலு திசையிலும் அலைந்து கொண்டிருக்கிறார் பில்கி அரசர் திம்மராஜு. அவர் பார்க்கப் போன வைத்தியர்கள் எல்லாம் தெரிந்த ஆனால் அனுபவம் போதாதவர்களாகவோ, அரைகுறை வைத்திய அனுபவசாலிகளாகவோ அமைந்து போகிறார்கள். அனுபவமும் அறிவும் மிகுந்தவர் என்றால் கைராசி துளியும் இல்லாதவராக இருக்கிறார்கள்.

உடுப்பியில் ஐரோப்பிய மருத்துவர் புதுசாக வந்து இறங்கியிருக்கிறார். பெயர் விளங்காத மருந்து ஏதேதோ கொடுத்து ஜலதோஷத்திலிருந்து,    லிங்கம் சிதைக்கும் பொம்பளை சீக்கு வரை குணமாக்கி விடுகிறார் என்று கேள்வி.

அவர் கூட்டமாக வியாதிஸ்தர்கள் வந்தாலும் எல்லோருக்கும் மருத்துவ சிகிச்சை தருவதில்லையாம். வருகிறவரின் நிதி நிலைமை, உடம்பு ஸ்திதி, உத்தியோக ஸ்திதி என்று பார்த்துத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கிறாராம்.

திம்மராஜு வயிற்று உப்புசத்தோடு அவரிடம் போனால் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டால் பில்கி அரசருக்கும் பில்கி தேசத்துக்குமே பெரிய அவமானம் ஆகிவிடும்.

இன்னொன்று வயிற்றில் வாயுவோடு அரண்மனையில் உட்கார்ந்து அபானவாயு விட்டுக்கொண்டு நாட்டு மருந்து தின்பது வேறு. ஐரோப்பிய மருத்துவர் முன்னால் பர்ர்ர் என்று ஸ்வரம் பாடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது வேறு மாதிரி.

அதனால் ஐரோப்பிய மருத்துவரை இப்போதைக்கு தவிர்த்து விட்டார் திம்மராஜு. கேலடியில் ஒரு இஸ்லாமிய மவுல்வி யுனானி மருத்துவம் சிறப்பாகப் பார்ப்பதாகக் கேட்டார் அவர். என்ன, எல்லோரும் இடமிருந்து வலம் எழுதினால், இவர் வலமிருந்து இடம் எழுதுகிறாராம். அவருக்கு அவரே சிகிச்சை கொடுத்துக்கொண்டால் அந்த சுகவீனம் சீக்கிரம் குணமாகிவிடலாம்.

உப்புசத்துக்கு எப்படி எழுதினால் என்ன, மருந்து கொடுத்தால் சரியாக வேணும். அவ்வளவுதான்.

ஆக பில்கி மகாராஜா திம்மராஜுவின் வயிறு பிரஸ்தாபிக்க முழு உடலும் மனதும் ஆமோதிக்க, கேலடிக்கு பயணம் மேற்கொண்டார் அவர்.

இவ்வளவு தூரம் வந்துவிட்டு பிரியமான மாமனார் வெங்கடப்ப நாயக்கரைப் பார்க்காமல் நல்லாயிருக்குமா?  வருடக் கணக்கான மாப்பிள்ளை மாமனார் உறவு அது.

அதான் ஒழுக்கமா வந்து சேர்ந்திட்டேன் மாமா.  திம்மராஜு கூறினார்.

முழுக்க கேட்டு பர்ர்ர் என்று முழங்கிச் சிரித்தார் வெங்கடப்பர்.

மாப்ளே குசு விஷயமாவா  பில்கியிலே இருந்து லொண்டா லொண்டான்னு  கேலடி வருவீர்? சொல்றீர். நம்பிட்டேன் என்றார் ஆர்ப்பாட்டமாக கேலடி ராஜா திம்மராஜு முதுகில் தட்டியபடி.

குனிந்து அவர் காதில் கேட்டார் – எவ்வளவு பேரை அனுப்ப உத்தேசம்?

திம்மராஜு உரக்கச் சிரித்தார். மாமனாரே உமக்கு காது அங்கே இங்கே எங்கேயும் இருக்குது. அதுவும் இருநூறு கல் தொலைவிலே நான் பிலகியிலே இருந்து எனக்கு நானே முணுமுணுத்துக்கிட்டா இங்கே கேலடியிலே மாமனார் காதுலே   வந்து உக்கார்ந்துடுச்சு போங்க என்றார் வெங்கடப்ப நாயக்கர் கையைப் பிடித்தபடி.

pic African medicine man

ack  welcome collection

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன