பெரு நாவல் ‘மிளகு’ – A royal breakfast to plan a power lunch

An excerpt from my forthcoming novel MILAGU

லிஸ்பன் பணக்காரங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து வாஸ்கோ ட காமாவுக்கு நூறு வருஷம் முந்தி பண உதவி செஞ்சமாதிரி இவனுக்கு, நேமிநாதனுக்கு உதவறதா சொல்லியிருக்காங்களாம்.

பில்கி அரசர் திம்மராஜு சிரித்தபடி சொன்னார்

அது சரிப்பா அங்கே இருந்து இவன் கேட்டதும் வந்து சேர்ந்துடுமா என்ன? ஒரு மாசமாவது ஆகுமே ஓலைக்கு பதிலெழுத. கேலடி வெங்கடப்பர் வெற்றிலைக்காக அடைப்பக்காரனிடம் கை நீட்டியபடி சொன்னார்.

அப்போ தான் அவனோட வைப்பு மிட்டாய்க்காரி திம்முனு இருப்பாளே அவ இவனுக்கு நிதி உதவி செஞ்சு.

ஓரமாக எச்சிலை துப்ப இடம் பார்த்தபடி சொன்னார் பில்கி திம்மராஜு. வெங்கடப்பர் யாரங்கே என்று குரல்விட, வெற்றிலைத் தட்டும், படிக்கமும், சீவல், புகையிலையுமாக அடைப்பக்காரன் ஒருத்தன் உள்ளே இருந்து ஓடி வந்தான். இவன் மேலே துப்பு மாப்ளே என்றார் வெங்கடப்பர். வேண்டாம் மாம முழுங்கிட்டேன் என்றார் பில்கி திம்மராஜு. உப்புசம் ஏன் வராதுன்னேன். சளியை துப்பாம எப்பவும் முழுங்கக் கூடாது ஞாபகம் வச்சுக்குங்க என்று மருத்துவப பாடம் எடுத்தார் வெங்கடப்பர்.

வேணாம் மாப்ளே அதை பேச ஆரம்பிச்சா எச்சி வடிய ஆரம்பிச்சுடும் எனக்கே. என்ன சித்தினி ஜாதி பொம்பளைடா பத்மினி கொஞ்சம் கலப்பு தோள் உருண்டு. வேணாம் மாப்ளே  என்றார் கேலடி அதிபதி.

அவ இவனுக்கு இப்போ நிதி உதவி செஞ்சு அப்புறமா லிஸ்பன் காரன் கிட்டே வாங்கிக்கறதா ஏற்பாடு இருக்கும்.  சொல்ல வந்ததைச் சொல்லி நிறுத்தினார் பில்கி அரசர்.

இருக்கும் இருக்கும், வாப்பா பசியாறிக்கிட்டே பேசலாம். குழிப்பணியாரம் போடச் சொல்லியிருந்தேன் போட்டு காரமா மிளகு அரைச்சுவிட்ட தேங்காய்த் துவையல் வைக்கச் சொல்லியிருக்கேன்.

அவர் விடாப்பிடியாக பில்கி அரசர் திம்மராஜுவைக் கையைப்பிடித்து இழுத்தபடி மண்டபத்தில் நுழைந்தார்.

அவசர அழைப்பு என்றாலும் பசியாற கேலடி அதிபர் பரிமாறி உபசரித்த உணவு சுவையும் புதியதும் சூடு பறக்கச் சமைத்து இறக்கியதுமாக இருந்தது. இட்டலியும் கறிக்குழம்பும் ஒன்றை ஒன்று சுவையில் விஞ்சி இருக்க, திம்மராஜு மெதுவாக மென்றபடி மாமனாருக்கு எழுதின லிகிதத்திலே வேறே ஏதாவது சொல்லியிருக்கானா பிள்ளையாண்டான் என்று கேட்டார்.

உம்ம மனசுக்குள்ளே குறளி தடதடன்னு ஓடிட்டு இருக்கும் மாப்பிள்ளே என்றார் வெங்கடப்ப நாயக்கர். அதைத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.

எதைப் பற்றின்னு தெரிஞ்சுக்கலாமா மாமனாரே?

ஆவலோடு ஓரக்கண்ணால் வெங்கடப்பரை நோக்கியபடி கறிக் குழம்பை தோசையில் புரட்டி வாயில் இட்டுக்கொண்டார் திம்மராஜு.

அது ஒண்ணும் பெரிசா இல்லே, எவ்வளவு பேர் குறைந்த பட்சம் வேணும், என்ன மாதிரி ஆட்கள் இதை அவன் சார்பிலே என்னையே தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கான். இதென்ன சந்தையிலே போய் பிஞ்சு வெண்டிக்காய் வாங்கற சமாசாரமா? அதுவும் அடுத்த வீட்டுக்காரனுக்கு வாங்கித் தர்றணும்

பில்கி திம்மராஜு புன்முறுவல் பூத்தார்.

உண்டு முடித்து எழுந்த போது இன்னும் செய்ய வேண்டிய வழிமுறை பற்றிப் பேசவே இல்லையே என்று திம்மராஜுவுக்கு மனதில் பட, அவர் வெங்கடப்ப நாயக்கருக்கு முன்னால் போஜன சாலை முகப்பிற்கு நடந்து அமர்ந்தார்.

pic medieval breakfast European

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன