பெரு நாவல் ‘மிளகு’ – Thus the diplomatic working breakfast comes to an end

An excerpt from my forthcoming novel MILAGU

இன்னொரு வெற்றிலையை காம்பு கிள்ளி மடித்து குல்கந்து தடவி வாயில் போட்டுவிட அடைப்பக்காரன் ஓடி வந்து ஓரமாக நின்றதை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டே மாமனாரே வாயை இன்னும் திறக்கணும். அவன் விரலை கடிச்சுடப் போறீங்க என்றார் திம்மராஜு.

வெத்திலை மடிச்சுத்தர ரெண்டு பொண்ணுங்க உண்டு இன்னிக்கு ரெண்டு பேரும் வரல்லேன்னு இவனை அனுப்பிட்டாங்க. ஏண்டா எலும்பா நீ இது தவிர என்ன பண்ணிட்டிருக்கே அரண்மனையிலே என்று அந்த எடுபிடியைக் கேட்டார் வெங்கடப்ப நாயக்கர்.

மீன் கழுவறது, கோழி இறைச்சிக்கு கார மிளகு விழுது புரட்டறது, குல்கந்து செய்து பீங்கான் பாத்திரத்திலே நிறைச்சு வைக்கறது எஜமானே என்றான்.

அது என்னடா கோழி சமைச்சு குல்கந்து கிண்டி ?

அவன் அசட்டுச் சிரிப்போடு இன்னொரு வெற்றிலையை எடுத்தான்.

வேணாம்டா காலையிலே ரொம்ப சுதி ஏத்த வச்சுடுவே போல இருக்கே. சரி ஒண்ணே ஒண்ணு கொடுத்துட்டு ஓடிப் போ என்றார்

அவன் நீட்டிய தட்டிலிருந்து குச்சி எடுத்துப் பல் குத்தியபடி சொன்னார் வெங்கடப்ப நாயக்கர் – ஜெரஸோப்பாவிலிருந்து நாங்க மிளகும் குடைமிளகாய், வெல்லமும் வாங்கறோம். யுத்தம் வந்தா அது முடியாது. அப்பக்கா கிட்டே வாங்கிக்க வேண்டியதுதான்

உரத்த சிந்தனையாகச் சொன்னார் அவர்.

வெல்லம் நான் தரேன் மாமனாரே.  சல்லிசா கூடுதல் இனிப்பா பெரிய மண்டை மண்டையா தர்றேன்.

அது நல்லா இருக்காது மாப்ளே. அட நான் சொல்ல வந்தது உங்க பிரதேசத்து ஏற்றுமதிக்காக காய்ச்சி வச்சிருக்கறதிலே கை வைக்கறதா ஆயிடும். அப்புறமா பார்த்துக்கலாம் எல்லாத்தையும் ஒரே அடுப்பிலே ஏத்தி கிண்ட வேண்டாம். என்ன நான் சொல்றது என்றது கேலடி. சரிதான் என்று ஒத்துக்கொண்டது பில்கி.

அப்பக்கா மண்டை வெல்லத்தோடு அச்சு வெல்லமும் செய்ய ஆலோசனை கொடுத்திருக்காம். உள்ளல்லே பாதி பேர் வெல்லம் காய்ச்சி அச்சுலே வார்க்கற வேலைதானாம்.

இதை திம்மராஜுவிடம் புதுத் தகவலாகச் சொன்னார் வெங்கடப்பர்.

நாம் ரெண்டு பேரும் இப்படி ஜெர்ஸூப்பா விவகாரத்திலே தலையிட்டா அப்பக்காவும், அடுத்தடுத்து இருக்கப்பட்ட ராஜதானிகளும் அவங்க மேலேயும் நாம் படையெடுத்து வந்துடுவோம்னு நம்பிக்கைக்குறைவு வந்துடும் இல்லையா என்று நியாயமான கேள்வியைக் கேட்டார் திம்மராஜு.

அதுக்குத்தான் மாப்ளே நம்மாளுங்களை முன்னாடி போய் உக்கிரமா சண்டை வலிக்காம, படைக்குப் பிந்து, பந்திக்கு முந்துன்னு சொல்றமாதிரி பின்னாலே இருந்து ஆள் கணக்கை அதிகரிச்சுக் காட்டலாம்னு யோசனை என்றார் நாயக்கர்.

எத்தனை பேர், என்ன தொகை, எத்தனை நாள் என்று சுருக்கமாகக் கேட்டார் வெங்கடப்ப நாயக்கர்.

இப்போதைக்கு பத்து பேர்.

நாயக்கர் சிரித்தார். பத்து பேரா? கபடி விளையாட குழு அனுப்பறியா? கபடி கபடி கபடின்னு பாடி மூச்சடக்கி தொட்டுட்டுத் திரும்பற விளையாட்டா என்ன இது? பெரிய யுத்தமா இருக்காது. வெத்துவேட்டு கலவரமாகவும் இருக்காது. ஆனாலும் ஆள் சேதம், காயம் எல்லாம் உண்டு. பத்து போதாது. ஆளுக்கு இருநூறு பேர் தயார் பண்ணி அனுப்பலாம்.

அப்படியா மாமா, நீங்க சொன்னா சரிதான் என்று அடக்கி வாசித்தார் திம்மராஜு.

இதுலே ஒண்ணு பாரு, நீயும் இதுக்கு முந்தி யுத்தம் பார்த்தது இல்லே. நேமியும் தான். நான் ஒருத்தன் தான் நாற்பது வருஷம் முந்தி தலைக்கோட்டை யுத்தத்திலே விஜயநகரப் படையிலே ஒரு தளவாயாகப் போனவன். விஜயநகர பேரரசர் ராம ராயர் தலையை பீஜப்பூர் சுல்தான் அறுத்தபோது ஓரமா நின்னு பார்த்து நடுங்கினவன். அப்போ எனக்கு இருபத்தைந்து வயசு.

நாமளும் இப்போ போக வேண்டி வருமா மாமனாரே?

கொஞ்சம் படபடப்பாக திம்மராஜு கேட்டதை ரசித்தபடி வெங்கடப்ப நாயக்கர் கூறினார் – போகணும்னு வந்தா போகலாம். இப்போதைக்கு ஆள்படை அனுப்பறது. நீ இருநூறு நான் ஒரு இருநூறு பேர். இவங்க கையிலே  வாள், சூரிக்கத்தி, அரிவாள் இதெல்லாம் அந்த புள்ளையாண்டன் தான் தரணும்.  துப்பாக்கியைத் தூக்கு, பீரங்கியிலே வெடிமருந்து அடைச்சுவை இப்படி வேலை ஏவமுடியாது இவன்களை. வயல்லே விவசாய வேலை பார்க்கறவங்க நாம் அனுப்பப் போறவங்க. துப்பாக்கி, பீரங்கி எல்லாம் அவன் கதையிலே கூட வராது.

தினத்துக்கு ரெண்டு வராகன், சோறு கறி என்று சேர்த்துக் கொண்டார் பில்கி.

கறி எப்படிடா போடுவான். சமணனாச்சே என்றார் வெங்கடப்பா. சுத்த சைவ ஆகாரம் தான் தருவான்.

அவன் சைவமா இருக்கலாம், யுத்தம் ரத்தம் கொட்டற முழு அசைவ சமாசாரம் ஆச்சே மாமனாரே என்றார் திம்மராஜு.

நாளைக்கு வேணும்கறானே பயபுள்ளே. அனுப்பி வைக்கவா என்று வெங்கடப்ப நாயக்கரை விசாரித்தபடி எழுந்து நின்றார் திம்மராஜு.

அவன் கேட்டதும் கொடுத்து அனுப்ப இதென்ன வெல்ல மண்டை வியாபாரமா, திங்கள்கிழமை அனுப்பி வைச்சுக்கலாம். சரியா இருக்கும் என்றபடி விடை கொடுத்தார் வெங்கடப்பர்.

எது சரியாக இருக்கும் என்று திம்மராஜூவும் கேட்கவில்லை, வெங்கடப்ப நாயக்கரும் சொல்லவில்லை.

 

pic  jaggery making

ack Deccan Herald

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன