Excerpt from my forthcoming novel MiLAGU
நஞ்சுண்டர் இறங்க, சாரட் நேரே உள்ளே போய்விட்டது.
நஞ்சுண்டருக்கு அப்போதுதான் அடிப்படையான தேவைகள் அவர் முக்கிய பிரதானி என்பதையும் மீறி முன்னால் வந்தன. சிறுநீர் கழிக்க வேண்டும். தாகத்துக்கு தண்ணீர் வேண்டும். சற்றே படுத்து எழ ஒரு படுக்கை வேணும். பசிக்கிறது. மதியத்துக்கு ஆகாரம் வேண்டும். சாயந்திரம் சென்னபைரதேவி கூட்டங்களுக்கு போய்ச்சேர வாகனம் வேண்டும்.
ஜெரஸோப்பாவில் யாரைக் கேட்க? ராஜமாளிகைக்குள் போகலாமா என்று மனதில் ஹொன்னுவைக் கேட்க பதிலே இல்லை. பகல் உறக்கத்தில் போல.
அழைக்காமல் அரசு மாளிகைக்குள் போவது நாகரிகம் இல்லை என்று தோன்றியது. என்ன செய்வதென்று அறியாமல் மெல்ல நடக்க ஆரம்பித்தார்.
ஜெருஸோப்பா கடைவீதிக்குப் போனால் பழக்கமான பெரும் வர்த்தகர்கள் நிறைய உண்டு. பெத்ரோவின் அலுவலகமும் அங்கே உண்டு.
அவர் அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் பக்கத்தில் இன்னொரு பெரிய மூன்று குதிரை வாகனம் நின்றது.
தேவரீர் எழுந்தருளணும். உள்ளே இருந்து இருகை கூப்பியபடி வகுளாபரணன் இறங்கி நஞ்சுண்டய்யா பிரதானியை தன்னோடு வரச் சொன்னான்.
பக்கத்தில் அரசுப் பிரதானி மாளிகை இருப்பதை மறந்து போனீரோ?
வகுளன் அவர் சாரட்டில் ஏறக் கையைப் பிடித்து உயர்த்தி விட்டான்.
ஜெருஸோப்பா வராமல் கோட்டையிலேயே அரசாங்கம் நடந்தால் இப்படியான விஷயம் எல்லாம் மனதில் வராது, இதுதான் பிரச்சனை என்று அவனிடம் சொல்ல வேணும் போலிருந்தது நஞ்சுண்டருக்கு.
ஜெருஸோப்பா கூட்டங்கள்? நஞ்சுண்டர் கேட்க, வரவில்லை என்று தலையாட்டினான் வகுளன்.
அவரை இறக்கி விட்டு உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு வகுளன் கோச்சை நகர்த்தினான்.
திருப்தியான சாப்பாடு, சற்றே உறக்கம். ஐந்து மணிக்கே அரசு மாளிகை ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் ஈஸ்வரர் கோவில். நஞ்சுண்டய்யா நாளிறுதிப் பரபரப்பின் வசமானார்.
காவல் சேவகர்கள் பத்து இருபது பேர் நடை பயின்று கொண்டிருந்தார்கள். நஞ்சுண்டரைப் பார்த்ததும் சவுதஸோ. சல்யூட் என முழங்கி போர்த்துகீஸ் காலணி அணிந்த கால்களைச் சத்தமெழ தரையில் அடித்து சல்யூட் செய்தார்கள்.
நஞ்சுண்டய்யாவுக்கு பெருமையாக இருந்தது. தளபதியும் அப்படி வெள்ளைக்கார சலாம் வைத்தால், அதுவும் ஹொன்னம்மா பார்த்துக் கொண்டிருக்க காலை உதைத்து சல்யூட் செய்தால் ரொம்ப கௌரவமாக இருக்கும். ஆனால் இந்த தளபதி நரி மாதிரி. ராணியம்மா ஜாக்கிரதையாக இவனை நம்பாமல் இருந்தால் நல்லது.
தளபதி மேலே நார்த்தங்காய் ஊறுகாய் மணம் வீச அருகில் வந்து நஞ்சுண்டய்யாவைக் கேட்டான் – பிரதானி அவர்களே, எவ்வளவு பெரிய கூட்டத்தை இங்கே எதிர்பார்க்கிறீர்கள்?
முன்னூறில் இருந்து ஐநூறு வரை. அடுத்து சௌதாமுக சமண பஸ்தியில்?
இருநூறில் இருந்து முன்னூறு பேர். ஆக எண்ணூறு பேர் அதிகபட்சம், ஐநூறு பேர் குறைந்த பட்சம். அது போதுமா? இந்த ஊரே திரண்டு வந்து கேட்க வேண்டாமா? நஞ்சுண்டய்யா தெரியவில்லை என்பதுபோல் தலையை ஆட்டியபடி தளபதியைக் கூர்ந்து பார்த்தார்.
தமிழ்ப் பிரதேசத்தில் தஞ்சாவூரில் இருந்து மிகப் பிரபலமான இந்துமதி, சாந்தமுகி, சுவர்ணாம்பா சகோதரிகளின் சதுர் கச்சேரி இன்று மாலை நடக்கிறதாம். அதைப் பார்த்துக் களிக்க பெரிய கூட்டம் இருக்குமாம். ராணியம்மா அவர்களோடு போட்டியிட முடியுமா தெரியவில்லை.
ஆட்டக்காரி சென்னாவை மனதில் கண்டவனாக தளபதி சிரித்தான்.
இவன் இன்றைக்கு எந்தப் பக்கம் இருக்கிறான்? நஞ்சுண்டருக்குத் தெரியவில்லை.
Pic Medieval Indian Dance
Ack britannia.com