An excerpt from my forthcoming novel MILAGU
அவன் நஞ்சுண்டய்யா பிரதானை விடுவதாக இல்லை. மேலும் கேட்டது இப்படி – சேனையில் இருக்கப் போகிறவர்களுக்கு ஒரே மாதிரி நீலக் குப்பாயம், காலில் செருப்பு எல்லாம் வந்து கொண்டிருக்கா?
நஞ்சுண்டய்யா யோசித்து ஒரு நிமிடம் கழித்துச் சொன்னார் –
ஆயிரம் ஜோடி செருப்பு தைக்க இந்த மாதம் முழுக்க ஆகும். அதற்காக போரை ஒத்திப் போடமுடியுமா?இதுநாள் வரை செருப்பு அணியாமல் இப்போது அணிந்து ஓடிக் குதித்து யுத்தம் புரிந்தால் செருப்பில் தான் கவனம் போக அசௌகரியமாக அது கடித்துத் தொலைக்கலாம். அதுக்கு, செருப்பில்லாமலேயே போருக்குப் போவது சரிப்படும்.
மேலும் தளபதியிடம் கூறியது இது –
ஒரே நிறத்தில், நீலக் குப்பாயத்தை ஹொன்னாவரிலும் ஜெருஸூப்பாவிலும் கோகர்ணத்திலும், மீர்ஜான் கோட்டையிலும் தையல்காரர்கள் தைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது இரண்டு குப்பாயமாவது தரவேண்டும். அப்படிக் கொடுத்தால் அதில் ஒன்றை வீட்டில் பிள்ளைகளுக்குத் தரப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு, ஜீவித்திருந்தால் ஒரே குப்பாயத்தோடு நாள் கணக்காக வியர்வை மணக்க ஓடியாடுவார்கள். அதைச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோவில் வாசலில் சாரட் வந்து நிற்க, கோவில் முக்கியஸ்தர்களும், குருக்கள்களும் பூர்ண கும்பத்தோடு மெல்ல எதிர்கொண்டு நடந்தார்கள்.
ஜெருஸுப்பா மகாராணி மிளகு அரசி சென்னபைரதேவி வாகனத்தில் இருந்து கைகூப்பியபடி புன்னகைத்துக் கொண்டு இறங்கினாள்.
வழக்கமாக கோவிலுக்கு வரும் நூறு நூற்றைம்பது பேர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் குழுமி இருந்தார்கள். சிறிய மேடையை மண்டபத்தின் நடுவே தாற்காலிகமாக அமைத்து வாள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நாலு திசையிலும் பார்த்து மிடுக்காக நின்றார்கள்.
கோவில் மணி இல்லாமல் சாயரட்சை தீபாராதனை நடந்தது. குருக்கள் அர்ச்சனை செய்யும்போது குரல் தாழ்த்தி தனக்கும் சுவாமிக்கும் மட்டும் கேட்கும்படியாக மந்திரம் சொன்னார்.
சென்னா பேச ஆரம்பித்தாள் –
உங்கள் வயது நாற்பதுக்குள் இருக்கும் என் அன்பு மகன், மகள்களே, நாற்பதிலிருந்து எழுபது வயதான என் சகோதர சகோதரிகளே, என் பெற்றோர் போல் எப்போதும் எனக்கு வாழ்த்தும் ஆசியும் அருளும் அன்னை, தந்தையரே, அனைவருக்கும் என் வணக்கம்.
நான் ஜெருஸோப்பாவை அரசாட்சி செய்து வரும் கடந்த ஐம்பத்தைந்து வருடத்தில் நான் எப்போதும் உங்கள் அனைவரையும் எதையாவது உதவி என்று கேட்டு வந்ததில்லை. இப்போது வந்திருக்கிறேன்.
என் அன்புள்ள ஜெருஸுப்பா தேசவாசிகளே, நான் உங்களிடம் பொன்னோ மணியோ, மரகதமோ, வெள்ளியோ கேட்க வரவில்லை. வரியை உயர்த்திக் கட்டச் சொல்லிக் கோரிக்கை விடுக்கவில்லை.
இதுவரை மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு, தரமான மிளகு மற்றும் இதர வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி மூலம் வளமான, முன்னேற்றப் பாதையில் நடக்கும் நாடு ஜெர்ஸோப்பா.
அதன் குடிமக்களான உங்கள் அனைவரையும் செழிப்பும் செல்வமும் பெருகி வாழ வழிநடத்திப் போவதில் பெருமை கொண்ட நான் இப்போது உங்களிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன்.
இங்கே பத்து வினாடி இடைவெளி விட்டு நிறுத்தித் தொடர்ந்தார் சென்னா.
வீட்டுக்கு ஒருவர். ஆம், வீட்டுக்கு ஒருவர் வரட்டும்.
எங்கு என்று உங்களுக்குத் தெரியும்.
நாட்டுக்கு உழைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த சென்னபைரதேவிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் மகத்தான உதவி இது.
pic medieval meeting
ack medieval.eu